வெள்ளி, 30 ஜூன், 2017

மோடி உரையை தொடர்ந்து அப்பாவி படுகொலை! அஹிம்சை பேசிக்கொண்டே கொலையும் செய்வாய் .. ...


ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பிரதமர் மோடி பசு சேவகர்களால் அப்பாவிகள் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்து பேசியிருக்கும் நிலையில், மாட்டிறைச்சியைக் காரணம் காட்டி ஒருவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியையும், நாட்டின் பாதுகாப்பின்மையையும் உணர்த்துகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் அலிமுதீன் அலியாஸ் அஸ்கர் அன்சாரி என்பவரை தபது மாருதி வேனில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக, பஜர்தந்த் என்ற கிராமத்தின் அருகே வழிமறித்து கடுமையாக தாக்கப்பட்டார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அன்சாரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மேலும், அவரது மாருதி வேன் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனை திட்டமிட்ட படுகொலை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அன்சாரியின் உடலை அவரது பகுதிக்கு எடுத்துச் சென்றதும், நிலைமை மேலும் மோசமானது.
இன்று காலை குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மோடி உரையாற்றுகையில், “பசுவின் பெயரால் அப்பாவிகள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை காந்தி ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்” என்றார்.
மேலும், சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இதுமாதிரியான தொடர் சம்பவங்களால் நாட்டில் அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில், இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களில் #NotInMyName என்ற வசனங்களைப் பொறித்த பதாகைகளைத் தாங்கிய வண்ணம், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பசுவின் பெயரால் பொதுமக்கள் தாக்கப்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - ச.ப.மதிவாணன் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக