புதன், 28 ஜூன், 2017

ஸ்டாலின் : போதைப் பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்க

போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய
காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், " “இந்து” ஆங்கில பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள "குட்கா ஊழல்" பற்றிய விவரங்கள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம் குறித்தும் வெளிவந்துள்ள ஆதாரங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி, ஊழல் முறைகேடுகள் மற்றும் லஞ்ச லாவண்யங்களின் சொர்க்கபுரியாக இருக்கிறது என்பது, வருமான வரித்துறை ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள் மூலம் "தினம் ஒரு தகவல்" போல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

குட்கா விவகாரத்தை பொறுத்தவரை "சென்னையில் போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்", என்று ஏற்கெனவே சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த திரு.ஜார்ஜ் மாநில அரசுக்கு கடிதம் எழுதினார்.
அப்போதே அதிமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலும் புரையோடிப் போயிருக்கும் இந்த ஊழல் விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அன்று முதலமைச்சராக இருந்த திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு கோரிக்கை வைத்தேன். ஊழலுக்கு முகமூடி போட்டு மறைக்க நினைத்து அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். இதன் விளைவு இன்றைக்கு காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் மாமூல் செய்தி பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகி தமிழக காவல்துறைக்கு தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைக்கும் குடோன்களை நடத்தியவர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் சென்னை மாநகர காவல்துறை கை கட்டி நின்று ஊழியம் செய்துள்ளார்கள் என்பது வேதனைமிக்க செயலாக அமைந்திருக்கிறது.
வருமான வரித்துறை, "வரி ஏய்ப்பு" புகாரின் அடிப்படையில் "குட்கா, பான்பராக்" குடோன்களில் ரெய்டு நடத்தியது, சென்னை புறநகரில் உள்ள மாதவரம், புழல் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ரெய்டின் போது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்தது தொடர்பான ரகசிய டைரிகள் சிக்கியது, வருமான வரித்துறை அதிகாரிகளின் தீவிர விசாரணையில் இன்ஸ்பெக்டர் முதல் கமிஷனா் வரை யார் யாருக்கு எல்லாம் மாமூல் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் பொருள்களை குடோன்களில் பதுக்கி வைத்து சென்னை மாநகரத்திற்கே சப்ளை செய்தவர்கள் யார் யார் என்ற விவரங்கள், அதுபற்றிய வீடியோ ஆதாரங்கள் எல்லாம் வருமான வரித்துறையிடம் சிக்கியது பற்றி கடந்த டிசம்பர் மாதமே செய்திகள் வெளிவந்தன. அது மட்டுமின்றி "அரசியல் சட்டப் பதவி வகித்த" ஒருவரின் உறவினரும், மாநிலத்தின் உயர் பொறுப்பு வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனும் இதில் ஈடுபட்டிருந்த தகவலும் வெளியானது.
இந்த பின்னணியில் தான் இன்று வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டவாறு, உயர் போலீஸ் அதிகாரிகள், குறிப்பாக கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பெற்ற மாமூல் விவரங்களை வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும் அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய விசாரணையை அப்போது டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் மேற்கொண்டதும், அவர் நள்ளிரவில் கட்டாயமாக அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறையில் இதுபற்றி விசாரணை செய்த குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாசலம் திருநெல்வேலி சரக போக்குவரத்து கழகத்திற்கு திடீரென மாற்றப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது. உயர் போலீஸ் அதிகாரிகளின் மாமூல் பற்றி விசாரித்த டி.ஜி.பி.க்கும், ஐ.ஜி.க்கும் அதிமுக ஆட்சியில் நேர்ந்த இந்த கதியால் குட்கா பேரமும், ஊழல் விசாரணையும் முற்றிலும் முடக்கப்பட்டது.
பிறகு மாநில தலைமை செயலாளர் வீடு, அலுவலகங்களில் ஏன் தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடத்தப்பட்டு தமிழகத்தின் மானம் கப்பலேறியது. ஆனாலும் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தவில்லை. அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதிமுக அரசால் காப்பாற்றப்பட்டார்கள். இந்நிலையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்தது யார், அந்த நபர்களுக்கும் அதிமுக ஆட்சியில் உள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு, அதில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகள் யார், போலீஸ் கமிஷனர் யார் என்பதை பற்றியெல்லாம், தீவிர விசாரணை மேற்கொள்ளும் சுதந்திரம் தமிழக லஞ்ச ஊழல் தடுப்பு துறைக்கு அதிமுக ஆட்சியில் நிச்சயமாக இல்லை.
"வேலியே பயிரை மேய்வது போல்" காவல்துறையில் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க வேண்டிய போலீஸ் கமிஷனர் அதிமுக ஆட்சியில், "மாமூல் கலாச்சாரத்தில்" திளைத்து மக்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த கொடூரமான குற்றச் செயல்களை கண்டும் காணாமல் இருந்ததை, அதிமுக அரசு சகித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது. இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப் பொருட்கள் விற்பனைக்கு உதவி செய்து வருங்கால தலைமுறையை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்சி செய்ததை, வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊழலுக்காக மக்களின் நலனை சீரழிக்க இந்த அரசு கூச்சப்படாது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக