வெள்ளி, 30 ஜூன், 2017

ஜி எஸ் டி வரிவிதிப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தன!

அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு: அருண் ஜெட்லி
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ஜூன் 30ஆம் தேதி
நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என சில அரசியல் கட்சிகளின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? ஜி.எஸ்.டி-யைச் சந்திக்க இந்தியா இன்னும் தயாராகவில்லை. எனவே ஜி.எஸ்.டி-க்கான சிறப்பு நாடாளுமன்ற நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது” என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சத்யவிரத் சதுர்வேதி, “ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது. முறையான விவாதங்களின்றி அவசரப்போக்கில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
திமுக-வும் ஜி.எஸ்.டி. நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், “ஜி.எஸ்.டி. சிறப்பு நிகழ்ச்சியை நாங்கள் புறக்கணிக்கிறோம். இது ஒரு வெற்று விளம்பர அரசியல்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, “நள்ளிரவு ஜி.எஸ்.டி. நிகழ்ச்சியில் இடதுசாரிகள் பங்கேற்க மாட்டார்கள். ஜி.எஸ்.டி. அமல்படுத்துவது குறித்து மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். நாடு முழுவதும் ஜி.எஸ்.டி-யை மக்கள் எதிர்க்கின்றனர். மக்கள் எதிர்க்கும்போது நாம் கொண்டாட முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில், “நள்ளிரவு ஜி.எஸ்.டி. நிகழ்ச்சி தேவையில்லாத ஒன்று. இதில் இடதுசாரிகள் பங்கேற்க மாட்டார்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜூன் 29ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜி.எஸ்.டி. விவாதத்தை விட வேறு எந்த விவாதத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. ஜி.எஸ்.டி. சட்டம் மத்திய அரசு மட்டும் எடுத்த முடிவல்ல. 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இணைந்து எடுத்த முடிவுதான் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை. ஜி.எஸ்.டி-க்கு ஒப்புதல் அளித்த மாநில அரசுகள் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவை. ஜி.எஸ்.டி. நிகழ்ச்சியை புறக்கணிப்பதால் ஜி.எஸ்.டி. சார்ந்த முடிவுகளில் இருந்து விலகிக்கொண்டதாக அர்த்தமில்லை. எனவே, நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து ஜி.எஸ்.டி. சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக