வெள்ளி, 23 ஜூன், 2017

வீட்டு சுவரில் ‘நான் ஏழை’ என்று எழுதினால்தான் ரேஷன்!

வீட்டு சுவரில் ‘நான் ஏழை’ என்று எழுதினால்தான் ரேஷன்!மின்னம்பலம்: ராஜஸ்தானில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தங்கள் வீட்டு சுவரில் ‘நான் ஏழை’ என்று எழுதினால்தான் ரேஷன்

பொருள்கள்  வழங்கப்படும் என்று அண்மையில் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ரேஷன் மூலம் உணவு தானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள தசுவா மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ரேஷனில் உணவு தானியம் வழங்குவதற்காக, ராஜஸ்தான் அரசு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ‘நான் மிகவும் ஏழை’ என்று எழுதியுள்ளது. அரசாங்கத்தின் இந்தச் செயல் ஏழைகளை அவமானம் அடையச் செய்துள்ளதாக அந்த மக்கள் நேற்று ஜூன் 22ஆம் தேதி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.  குவாலியர் அரசகுடும்ப வாரிசு இன்று பாஜகவின் ஜனநாயக அரசியல்வாதியாக மாறினாலும் பழைய ராஜகுடும்ப கொடூர குணங்கள் அழியவில்லை.  இவர் ஆரவல்லி மலைபிரதேச சுரங்க ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர். அதைவிட லலித் மோடியின் முறைகேடுகளுக்கு துணைபோன வரலாறும் உடையவர்.ஏழைகளின் மனதை புண்படுத்துவது இவர்களுக்கு விளையாட்டு

ராஜஸ்தான் மாநில அரசின் இந்த நடவடிக்கை குறித்து தசுவா மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் ஊடகங்களில் கூறியதாவது: “எங்கள் வீடுகளில் இதுபோல எழுதியுள்ளதை பார்ப்பவர்கள் எங்களைக் கேலி செய்துவிட்டுப் போகிறார்கள். நாங்கள் மிகவும் அவமானமாக உணருகிறோம். எங்களை அரசாங்கம் கோபப்படுத்த முயற்சிக்கிறதா?” என்று கேட்டு புலம்புகின்றனர்.
இது குறித்து தசுவா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில்: “எங்கள் வீட்டில் மூன்று பேர் இருக்கிறோம். இதற்காக அரசு 15 கிலோ கோதுமை கொடுக்கிறது. இதற்காக எங்களுடைய சுவரை நாசமாக்கிவிட்டார்கள். அவர்கள் ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஏழைகளை அவமானப்படுத்தும்படியான இந்த உத்தரவு குறித்து அம்மாநில சிக்ரை தாலுக்காவிலுள்ள ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், “10 கிலோ கோதுமை வாங்குவதற்காக அரசாங்கம் நாங்கள் தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கிராமத்தில் பலர் இந்த வாசகத்தை அழித்துவிட்டு மானிய விலையில் கோதுமை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டனர். இதுமட்டுமில்லாமல் நான் ஏழை என்று எழுதினால் அரசாங்கம் ரூ.750 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது” என்று கூறினார்.
ராஜஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை குறித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி நேற்று ஜூன் 22ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநில அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி ரேஷன் பொருள்கள் வழங்குகிறது என்றால் அது அவர்களுடைய சட்டபூர்வமான கடமை. அது அரசாங்கத்தின் கருணை எல்லாம் கிடையாது. இந்த நடவடிக்கையின் மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் பாஜக அரசாங்கம் ஏழைகளுக்கு எதிரான அரசாங்கம் என்பதை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஸ்வராஜ் அபியான் நிறுவனர் யோகேந்திர யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே அரசை விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘இதுபோன்ற வெறுப்பூட்டும் நகைச்சுவையையும் அவமானத்தையும் தான் ராஜஸ்தான் அரசாங்கம் ஏழைகளின் மீது சுமத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில அரசின் இந்த நடவடிக்கை குறித்து அம்மாநில பாஜக தலைவர் தீபக் ஜோஷி கூறுகையில், “ஏழைகளை அவமரியாதை செய்வது நோக்கம் இல்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு ரேஷன் பொருள்களை அளிப்பதுதான் நோக்கம். வசதியானவர்கள் யாரும் அரசின் ரேஷன் பொருள்களை பெற்றுவிடக் கூடாது அதனால்தான் இந்த நடவடிக்கை” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் அரசாங்கம் ஏழைகளை அடையாளப்படுத்துவது என்பது இது முதன்முறை அல்ல. கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்மாநிலத்தில் உள்ள பில்வாரா நகரத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் வீடுகளில் சதுரமாக மஞ்சள் பெயின்ட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கடந்த 2012ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் வீடுகளில் ‘நான் ஏழை’ என்று எழுதியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக