புதன், 28 ஜூன், 2017

ஜோதிமணி : விவாதங்களில் பாஜக தோலுரிக்கப்படுக்கிறதே என்கிற பயம்.... நியுஸ் 7 வீடியோவில் நன்றாகவே தெரிகிறது.

நியூஸ்7 தொலைக்காட்சி விவாதம், அதையொட்டிய எஸ்.வி .சேகர்
காணொளி இவை வெறும் சிறுதுளி தான்.
மோடி அரசின் மூன்றாண்டுகால படுதோல்வி,தமிழர் விரோதப் போக்கு இவற்றை தோலுரிக்கும் விவாதங்களை எதிர்கொள்ள முடியாமல் நாளுக்குநாள் பிஜேபி தடுமாறி வருகிறது.
இதை சமாளிக்க சம்பந்தமில்லாமல் பேசுவது,உரக்கப் பேசுவது,சக பேச்சாளர்களை அநாகரிகமாக தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, ஆணவத்தோடும்,அகம்பாவத்தோடும் நடந்து கொள்வது, ஏன் இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை? பொருளாதாரம் ஏன் சரிந்து வருகிறது? என்று கேட்டால் கூட இந்துக்களுக்கு எதிராகப் பேசுகிறீர்கள் என்று கூச்சல் போடுவது( சிறுபான்மையினரை மட்டுமல்ல, விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், சிறு,குறு,நடுத்தர தொழில்முனைவோரையும் மோடி அரசு அழித்து வருகிறது. அவர்கள் எல்லாம் இந்துகள் அல்லவா?) இவையெல்லாம் விவாதங்களில் எல்லோரும் பார்ப்பதுதான். ஒருவிதத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எக்ஸ்போஸ் செய்துகொள்கிறார்கள் என்றுதான் மக்கள் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றையெலாம் தாண்டி பிஜேபியின் சார்பாக விவாதங்களில் கலந்துகொள்பவர்களை மட்டுமல்லாமல் ,மற்ற கட்சிகள் சார்பாக , கட்சி சார்பற்று விவாதங்களில் கலந்துகொள்பவர்களையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் விவாதங்களுக்கு அழைக்கக்கூடாது ,அழைத்தால் நாங்கள் வரமாட்டோம் என்று ஊடகங்களிடம் வலியுறுத்துகிறார்கள்(பட்டியலில் நான் உட்பட பலர் உண்டு).
இதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஆளுங்கட்சியாக இருந்துவிட்டால் இப்படி அராஜகத்தில் இறங்கிவிடுவார்களா? இதற்குத்தான் ஆட்சிக்கு வந்தார்களா? காங்கிரஸ் கட்சி மீது வைக்கப்படாத விமர்சனமா? என்றாவது விவாதங்கள் நடத்தும் ஊடகங்களின் உரிமையில் நாங்கள் தலையிட்டதுண்டா?
பிறகு வழக்கமாக எதிர்கருத்து உள்ளோரை தாக்குவதற்காக அவர்கள் பெரும் பொருட்செலவில் தயாராக வைத்திருக்கும் கூலிப்படையான ஆபாச ஆர்மியை ஊடகவியலாளர்கள், விவாதங்களில் பங்கு பெறுபவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
இவை கடிதம், தொலை பேசி என்று ஊடகங்களுக்கும், வசவுகள், அறுவெறுப்பின் உச்சமான ஆபாசங்கள் என்று சமூக ஊடகங்களிலும் தனது சிறப்பான பணியினை ஆற்றும்.
இது ஒரு விதமான கருத்து உருவாக்கும் போக்கு மட்டுமல்ல. மாற்றுக்கருத்துகளை,ஊடக சுதந்திரத்தை அடித்து நொறுக்கும் வேலையுமாகும்.
இது எதிர்க்கட்சிகள்,ஊடகங்கள், விவாதங்களில் பங்கு பெறுபவர்கள் பிரச்சினை மட்டுமல்ல. இதை இப்படியே நீடிக்க அனுமதித்தால் நாளை பிஜேபி விரும்புகின்ற ஒன்றைத்தான் நாம் பார்க்கவும்,கேட்கவும் முடியும். இப்பொழுதே ஏறக்குறைய அப்படிதான் நடந்துகொண்டிருக்கிறது.
பலருக்கும் புரிகிற மொழியில் சொல்வதானால் நாளை நமது முன்னோர்களான குலதெயவங்களின் இடத்தில் பார்ப்பனியத்தின் பெயரால் ஒரு கடவுள் உட்கார்ந்திருப்பார். நாம் கர்ப்பகிரகத்திற்குள் போகமுடியாமல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியில் நின்று வேண்டிக்கொண்டிருப்போம். நமது கையில் படாமல் திருநீறு தரப்படும். அப்புறம் குலதெய்வம் ஒன்று இருந்தது என்பது கூட மறக்கடிக்கப்படும். அதன் அடிப்படையிலான நமது கலாச்சார அடையாளங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு நாம் வரலாறும்,வேறும் அற்றவர்கள் ஆவோம். இதை நோக்கித்தான் பிஜேபி காய் நகர்த்தி வருகிறது. இது பார்ப்பணியம். எல்லா பார்ப்பனர்களும் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. பலர் சமூகநீதிக்காக போராடியவர்கள் இன்னும் போராடுபவர்கள்.
விடுதலை நெறுப்பை ஊதி வளர்த்திய பாரதியும்,தேசப்பிதாவைக் கொன்ற கோட்சேவும் பிராமணர்கள். இதில் யார் பக்கம் நிற்பது தங்களுக்குப் பெருமை என்பதை அச்சமூகத்தைச் சார்ந்த தன்நபர்கள் முடிவுசெய்யட்டும்.
எஸ்.சி.வி சேகரின் கேள்விக்கு கோட்சே தொடங்கி பல கொலையாளிகளை,குற்றவாளிகளை எங்களால் சொல்ல முடியும். ஆனால் அவர்க நாங்கள் பிராமணர்களாகப் பார்க்கவில்லை. ஆர் எஸ் எஸ் ஐ சார்ந்த கொலையாளிகளாகத்தான் பார்க்கிறோம்.
ஆர் எஸ் எஸ் ன் தலைமைப் பதவிக்கு இதுவரை எத்தனை பிற்படுத்தப் பட்டவர்கள் தலித்துகள் வந்திருக்கிறார்கள்? மோடி அரசில் எவ்வளவு பேர் தலித்துகள் ? ஏன் சங்கர மடத்தில் ஒரு பதவியிலும் இல்லாத சு. சுவாமிக்கு இருக்கை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்குத் தரை? இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழில் தேவாரமும்,திருவாசகமும் ஓதும் ஒருவன் ஏன் கருவரைக்குள் போகக்கூடாது ?
சேரி தொடங்கி கிராமங்களின் கட்டாந்தரை வரை கிரிக்கெட் விளையாடித் திரியும் எம் பிள்ளைகளில் 50% கூட தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கக் கூட தகுதியில்லாதவர்களா?
இந்த இட ஒதுக்கீடு எல்லாம் எந்தக் கணக்கில் வரும் திரு.எஸ் வி சேகர்?
பிஜேபியின் அராஜகத்தை எதிர்கொள்ள விவாதங்களில் பங்கு பெறுபவர்கள் நடத்திய கூட்டத்தை எவ்வளவு தைரியமாக பொதுவெளியில் பிராமணர்களுக்கு எதிரான் கூட்டம் என்று வாய்கூசாமல் பொய்சொல்கிறீர்கள்.
அப்படியே போகிறபோக்கில் பெரும்பான்மையினருக்கு எதிரான போலிமதச்சார்பின்மை பற்றிப் பேசுகிறீர்கள். கையுலிருந்த கடைசி காசையும் பிடுங்கிக்கொண்டு பண மதிப்பு நீக்கத்தின் பெயரால் நீங்கள் தெருத்தெருவாக அலையவிட்ட கோடிக்கணக்கான மக்கள், மத்தியப்பிரதேசத்தில் நீங்கள் சுட்டுக்கொலை செய்த விவசாயிகள், டெல்லியில் நிர்வாணமாக்கப்பட்ட எம் விவசாயிகள்,நீங்கள் கல்விக்கடனைப் பிடுங்கிக் கொண்டதால் உயர்கல்விக்கு வழியிலாமல் போன பிள்ளைகள் இவர்களில் பெரும்பான்மையோர் பெரும்பான்மையினர்தானே?
உங்களுக்குத் தேவை பிராமணர்களோ,பெரும்பான்மையினரோ அல்ல. அவர்களின் பெயரால் செய்யும் பிரிவினைவாத ,இரத்தம் குடிக்கும் வெறுப்பு அரசியல்.
அது விவாதங்களில் தோலுரிக்கப்படுக்கிறதே என்கிற பயம். அது உங்கள் வீடியோவில் நன்றாகவே தெரிகிறது.
பொய்களுக்கு ஆயுசு கம்மி என்பதை புரிந்துகொள்வீர்கள். உங்கள் பொய்களை,அராஜகங்களைத் தொடர்ந்து தோலுரிப்போம்.
ஜோதிமணி
செய்திதொடர்பாளர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக