வியாழன், 29 ஜூன், 2017

பார்பன விமர்சனம் ... பார்ப்பன அன்பர்கள் கோபித்தாலும் உண்மையை விளக்கவேண்டும் .. நாளை அந்த வாய்ப்பு அருகி விடலாம்

வாசுகி பாஸ்கர்: பார்ப்பனிய விமர்சனம் பார்பனர்களுக்கே தேவை
என் பள்ளி கால நண்பனை பல வருடத்திற்கு பிறகு சந்திக்க நேர்ந்தது, பிறகு முகநூலில் நட்பாகி போனோம், வழக்கமாக நிரம்பி கிடக்கும் சாதி எதிர்ப்பு பதிவுகளை பார்த்து ஒரு கம்மன்ட் போட்டான், அது 'சாதிய வெறி தான் தவறு, ஆனால் சாதியில் நம் அடையாளங்கள் மறைந்து கிடக்கிறது, சாதி அடையாளம் அவசியம்' என்பதாக இருந்தது, நாளடைவில் நாங்கள் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தோம், ஒன்றாகவே பொழுதுகளை கழித்தோம், அவரவர் படிக்கும் புத்தகங்களை, சம்பவங்களை குறித்து விவாதித்தோம், கேள்விகளை பதிலுக்கான ஆரம்பமாக பார்த்தோம், நாங்கள் இருவரும் தனித்து இருக்கும் போது இப்படியாக சைக்காலஜி, தனி மனித உணர்வு, சமூக அரசியல், சினிமா, பொதுப்புத்தி, வரலாறு என்று தலைப்புகள் நீளும். மனதில் இருந்து சொல்ல வேண்டுமானால், என்னை அதிகம் சமூகம் சார்ந்த சிந்தனையை நோக்கி தள்ளிய காலம் அது தான், என்னை நான் நெறி படுத்திய காலமும் கூட.

அவன் பிறப்பால் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவன், அதை நான் அறிந்து வைத்திருப்பதற்கு அவன் சிறு வயதில் இருந்தே சுமந்த அடையாளங்கள் தான் காரணமே ஒழிய, பத்தாண்டு, பதினைந்து ஆண்டுக்கு மேல் நான் நட்போடு இருக்கும் இன்னபிற பல நண்பர்களின் சாதிகளை நான் இன்று வரை அறியேன்.
அவனின் பெற்றோர்களும் பார்ப்பன குடும்பத்தில் பிறந்து விட்டதனாலவே அந்த அடையாளங்களை சுமப்பவர்கள், சம்பிரதாயம் என்னும் வம்சா வழி அடையாளங்களை துறக்க இயலா சமூக சூழ்நிலை வாதிகள். என்னோடு பழகி விட்டதனால் என்கிற காரணத்திற்காக சொல்லவில்லை, எல்லோர் மீதும் பாரபட்சமில்லாமல் பேரன்பு கொண்ட மனிதம் போற்றும் மனிதர்கள், நீங்களே நாளை பழக நேர்ந்தால் இதை உணர்வீர்கள்.
ஆனால், எங்களின் தொடர் உரையாடலில் நடந்த மாற்றங்கள் 'சாதி என்பது சமூகத்துக்கு தேவையான அடையாளம் இல்லை' என்பதை நாளடைவில் அவன் சமூகத்தின் யதார்த்த புள்ளியில் இருந்து உணர ஆரம்பித்தான், நாஞ்சில் நாடான் போன்றவர்கள் மறைமுகமாக சாதியை தூக்கி பிடிக்கும் எழுத்தாளுமையால் சாதி சம்மந்தப்பட்ட கருத்துக்கள் அவனுள் அப்படியாக பதிந்து இருந்தது. கருத்து மாற்றத்தால் ஒரு மன மாறுதலை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன், சொன்னது போல இதற்கு முக்கிய காரணம், பேசியது, பேசிக்கொண்டே இருந்தது.
பார்ப்பன குடும்பத்தில் பிறந்தும் பார்ப்பனியத்தின் வீரியம் தெரியா நிறைய பேர் இருக்கிறார்கள், ஒரு வேலை நானும் ஆர்தோடக்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பன குடும்பத்தில் பிறந்திருந்தால், எப்படி இருந்திருப்பேன்? என்கிற கேள்வியில் இருந்து இதற்கான பதிலை எடுக்கிறேன்.
அதற்கான வாய்ப்புகள் இரண்டு வகை,
1. சமூகத்தில் பிறர் எப்படி பார்ப்பனிய சித்தாந்தத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை அறிய வாய்ப்பில்லாமல் மேம்போக்காக அதிலே ஊறி வாழுதல்,
2. பார்பனியத்தோடு ஊறி, தெரிந்து, அதனோடவே இருத்தல், உயர்த்தி பிடித்து வாழுதல்
இதில், முதலில் இருக்கிற நிலையில் வாழ்கிறவர்களை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது மிக பெரிய காரியமில்லை, வெளியுலக புறக்கணிப்போடு பார்ப்பனிய கலாச்சாரத்தோடு முண்டாசு கட்டி வாழ்ந்தால் அதுவே உங்களை கை பிடித்து இரண்டாம் கட்டத்திற்கு கொண்டு போகும். அல்லது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று செலக்டிவாக முற்போக்காக இருத்தல், அநியாய தவறுகளை நியாயப்படுத்தாமல் தவறை தவறென்று ஒப்புக்கொள்ளுதல். இந்த நிலையில் இருப்பவர்களை வைத்து கொண்டு நாம் பேசும் போது நாம் தவறுகளை சுட்டி காட்டினால், அவர்களால் அதற்கான நியாயமான பதிலை சொல்ல முடியாதபடி மௌனத்தில் தள்ளலாம், அல்லது அவர்களையும் கண்டிக்க வைக்கலாம்.
இரண்டாம் வகை, 'ஆமா, நான் பார்ப்பனன் தான், பார்பனீயவாதி தான் என்ன இப்போ' என்று சொல்லும் வகை, அங்கே எந்த விதமான உரையாடலும் எந்த மாற்றமும் கொண்டு வராது, நீ பேசுறதை பேசிக்கோ, நான் ரிவிட் அடிப்பேன் என்று அதே திமிரோடு காலத்துக்கும் பேச வேண்டிய நிர்பந்தமே நம்மை பார்ப்பினியத்துக்கு எதிராக பேச வைக்கும்.
ஆனால் பேசினால் தான் நியாயம் நிறுவப்படும் என்பதற்கு நடப்பு கால உதாரணங்களை சொல்கிறேன்,
பார்ப்பனீயம் என்பது தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா நிகழ்த்திய அக்கிரமம் இல்லை, நான் டைப் செய்து கொண்டிருப்பினும் இந்த கணம் நிகழ்ந்து கொண்டிருப்பது தான் பார்ப்பனீயம், அதை நீங்கள் கண் திறந்து பார்க்க வேண்டும், facebook ன் மெமரிஸ் போஸ்டுகள் வரும் போது, நாம எப்போவோ பார்ப்பனர்களை விமர்சனம் செய்து இருக்கிறோம் என உங்களை ஒரு போதும் எண்ண வைக்காது, அதற்கு related ஆன அக்கிரமங்கள், பொய்மை, அயோக்கியத்தனம் நிகழ்காலத்திலேயே நடக்கும்.
1. முந்தாநாள் facebook memories ல், சுவாதி கொலையை செய்தது பிலால் மாலிக் என்கிற பார்ப்பனிய நரி தந்திர பரப்புரை போன வருடம் கிட்ட தட்ட இதே கால கட்டத்தில் நடந்தது.
2. இரண்டு நாள் முன்னே நடந்த ஒரு கொலையை செய்தது இஸ்லாமியர்கள் என்று எச்.ராஜா, ராகவன் போன்றோர் பதிவுகள் பதிய, போலீஸ் விசாரணையில் கொலையை செய்த நால்வரும் இந்துக்கள் என்று தெரிய வந்தது.
3. நேற்று பழனியில் மாடு ஏற்றி கொண்டு போன விவசாயியின் வாகனத்தை இந்து கட்சியினர் தாக்க, பதிலுக்கு போலீஸ் தடியடி நடத்த, இதே எச் ராஜா தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மாடு ஏற்றி கொண்ட வாகனத்தை மறித்தது முதல் தப்பு, அடிதடியில் இறங்கியது இரண்டாம் தப்பு, ஆனால் கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லாமல், அறம் என்பதை அரையணாவுக்கு கூட மதிக்காமல் இப்படியாக புளுகுவதையும் தொடர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டு இந்தியாவில் நிகழ்த்தி கொண்டிருப்பதற்கு பெயர் தான் பார்ப்பனீயம்.
இப்படியாக பார்ப்பினியத்தின் சமூக அவலங்களை பட்டியலிட சொன்னாலோ, அல்லது இன்னும் நுட்பமாக அலச சொன்னாலோ, இன்னும் ஆயிரமாயிரம் விஷியங்கள் இருக்கிறது. ஒரு கட்டத்தில் பார்ப்பனர்களால் அவதூறு பேசியும், கத்தியும் தான் பேச முடியுமோ ஒழிய ஒரு நாளும் நியாயமான தர்க்கம் என்பது சாத்தியமற்றது.
வாயடைக்கவும், கருத்தை நிறுவவும் நாம் பேசித்தான் ஆகவேண்டும், பேசுவதால் தனிப்பட்ட முறையில் உண்டாக போகும் இழப்புகளை குறித்து நீங்கள் கவலை பட்டீர்களானால், உங்களால் ஒரு போதும் பேசவே முடியாது. முற்போக்காக இருப்பதற்கு மிக குறுகிய வாய்ப்பே வழங்கப்பட்ட சூழலில் வளரும் பார்ப்பனிய குழந்தைகளுக்காவது நாம் பேசியே ஆகவேண்டும், கொஞ்சம் pause விட்டால்,
'காலையில ஆறு மணி, கோழி கொக்கரக்கோ ன்னு கூவுச்சி' என்பதை போல நீங்கள் முதலில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக