செவ்வாய், 13 ஜூன், 2017

குமுதம் ரிப்போர்டர் ... பரம்பரை மஞ்சள் பத்திரிகை...

விஜி பழனிச்சாமி. :இந்தவாரத்தின் குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்படம் இப்படிக் கேட்கிறது: “நான்தான் சொப்பன சுந்தரி.. இப்ப யாரு வெச்சிருக்கா?” என்று கேட்கிறது. அவர்கள் குறிப்பிட்டிருப்பவர் பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண். அதுபோதாதா இவர்களுக்கு? என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாமே!
இது என்ன வகை மனோபாவம்? கடைசிநேரத்தில்கூட இதழை நிறுத்தி விற்பனைக்குச் செல்லாமல் செய்திருக்கலாமே? ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவில் இதை எதிர்த்துக் கேட்கும் ஒரு மனிதன் / மனிதிகூடவா இல்லை?
நீங்கள் பெண்ணை தெய்வமாகவெல்லாம் போற்ற வேண்டியதில்லை. சக மனுஷியாகக்கூடவா மதிக்க முடியாது? இந்தக் கட்டுரையை எழுதியவர் வீட்டு வரவேற்பறையில் இந்தப் புத்தகம் இடம்பெறும்தானே? அவரது தாயோ, மனைவியோ, மகளோ இந்தத் தலைப்பைப் பார்ப்பார்கள்தானே? அது சரி, அதையெல்லாம் யோசித்திருந்தால், இப்படி ஒரு கட்டுரைத்தலைப்பு வைக்கத் தோன்றுமா?

உள்ளடக்கம் படித்துவிட்டு விமர்சியுங்கள் என்கிறார் ஒரு தோழர். நன்று. நல்லதொரு உணவை மலம் மணக்கும் பேப்பரில் சுற்றி, பிரித்துச் சாப்பிடுங்கள் என்று சொன்ன கதைதான்!
படித்த ஒரு சம்பவம்:-
கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம். பெரியாருக்கு அழைப்புக் கொடுத்ததும் நிச்சயம் வருகிறேன் என்கிறார். ஆனால் வரவில்லை. பிறகு, மதியமாக கல்கி வீட்டிற்கு வருகிறார் பெரியார். கல்கி, ஓடோடிச் சென்று வரவேற்கிறார். மணமக்களை வரச்சொல்லி ஆசிபெறச் சொல்கிறார்.
பெரியாரும் மணமக்களை வாழ்த்தி, அவர்கள் நெற்றியில் விபூதி குங்குமம் இடுகிறார். கல்கி தயக்கமாக காலையில் வராதது குறித்துக் கேட்க, ‘கல்யாணத்துல உங்க உறவினர்கள்லாம் இருப்பாங்க. அங்க நான் கறுப்புச் சட்டையோட வந்தா அவங்க விரும்ப மாட்டாங்க’ என்கிறார். பெரியாரின் பெருந்தன்மை கண்டு நெகிழ்கிறார் கல்கி.
அந்த வாரத்திற்கான கல்கி அட்டைக்காக பெரியார் குங்குமம் வைக்கும் புகைப்படத்தை எடுத்துவருகிறார்கள். கோபத்தில் கொதிக்கிறார் கல்கி.
“பெரியார் விபூதி இட்டது அவர் நம்பிக்கைக்காக அல்ல. நம் நம்பிக்கையை மதித்த அவரது பெருந்தன்மை. அதை விளம்பரப்படுத்தி இதழ் வெளியிடும் அற்ப புத்தி எனக்கில்லை!” என்று சொல்லி அந்தப் புகைப்படங்களைக் கிழித்தாராம்!
அதுவும் அட்டைப்பட விவகாரம்தான்.. இதுவும்!
திருந்தப் போவதில்லை என்று முடிவெடுத்தவர்களிடம் பேசிப் பிரயோஜனமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக