செவ்வாய், 13 ஜூன், 2017

மாட்டிறைச்சி சட்டம் : இணையும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள்!

 கோவாவில் மத்திய அரசின் மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து போராட முன்வந்துள்ளனர்.
மத்திய அரசு 1969ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை செய்வதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பாஜக ஆளும் கோவாவில் சுற்றுலாப் பயணிகளால் அதிக அளவு வருமானம் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் கோவாவில் மாட்டுக்கறி உண்பவர்களின் எண்ணிக்கையும், மாட்டிறைச்சி வணிகமும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன. இதனால், இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை செய்துள்ள மத்திய அரசின் அறிவிப்பால் கோவா மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கோவாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் மாட்டுக்கறிக்கு கோவா! கோவாவுக்கு மாட்டுக்கறி! என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், கோவாவில் உள்ள குரேஷி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் நேற்று ஜூன் 12ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் உள்ள கோவா மாநில அமர்வில், மாட்டிறைச்சி தொடர்பாக ஒரு பொதுநல மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதை தடை செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும், அதே நேரத்தில், இறைச்சி விற்பனை தொழிலும் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்னையில் கோவாவை ஆளும் மனோஹர் பாரிக்கர் அரசு எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
இது குறித்து குரேஷி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி அன்வர் பெபரி கூறுகையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மதச் சடங்கின்போது விலங்குகளை பலியிட தடை செய்துள்ளதா என்ற ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது, எங்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பக்ரீத் பண்டிகை வர உள்ளது. அப்போது விலங்குகளை பலியிடுவோம். அதனால், இது முக்கியமான பிரச்னையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதே போல, கோவாவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளின் ஒரு அமைப்பான சமூகநீதி மற்றும் அமைதிக்கான குழுவின் நிர்வாகத் தலைவர் பாதிரியார் சேவியோ ஃபெர்னாண்டஸ் கூறுகையில், கோவாவில் மிகவும் மலிவான இறைச்சி மாட்டிறைச்சிதான். மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் இந்த அறிவிப்பு கிறிஸ்தவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இது நம் நாட்டின் மதச்சார்பின்மை மீது நடத்தப்படும் தாக்குதல். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராகப் போராடுவதற்கும் கூட்டாக செயல்படுவதற்கும் முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக