செவ்வாய், 27 ஜூன், 2017

இந்துத்வா இயக்கங்களும் வஹாபிய இயக்கங்களும் ஒன்று ... தமிழகத்தின் இந்து/இஸ்லாமிய ஒற்றுமை இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காதது

Don Ashok :காவி இயக்கங்களும், வஹாபிய இயக்கங்களும் ஒன்று. இதை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ளுதல் நன்று. இஸ்லாம் என்பது இனமல்ல, மதம் என்பதை நினைவூட்டிக் கொண்டு, அனைவருக்கும் என் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏன் இந்துத்துவாவை எதிர்ப்பதைப் போல வஹாபி இயக்கங்களையும் எதிர்க்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதற்கான பதில் கொஞ்சம் சிக்கலானது. அவன் மதத்தை அவன் தீவிரமாக, எந்தக் கலப்பும் இல்லாமல் அரேபிய முறைப்படி கடைபிடித்தால் உனக்கென்ன என்ற கேள்வி மேலோட்டமாக எழும். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்து வேறுபட்டு விளங்கும் தமிழகச் சூழல் எந்த மதத்தையுமே தீவிரமாக கடைபிடிப்பதற்கு ஏற்ற இடமல்ல என்பதும், அப்படி முயற்சிப்பது அம்மதத்தினரை பொதுச்சூழலில் இருந்து தள்ளிவைப்பதோடு, தமிழகத்தின் மதச்சார்பின்மைக்கும் எதிராக அமையும் என்பதே நிதர்சனம்.
வட இந்தியாவில் இஸ்லாமிய மக்களும் இந்து மக்களும் சேர்ந்து ஒரு இடத்தில் குடியிருப்பது என்பதே அரிதினும் அரிதான விஷயம். தனித்தனி கிராமங்களே கூட இரு மதத்தினருக்கும் தனித்தனியாக இருக்கிறது. குறிப்பாக நகரமல்லாத இடங்களில் , "இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வராத, நானும் வர மாட்டேன்," என்ற சூழல்தான். தமிழகத்தில் அங்கங்கே, "முஸ்லிம் ஏரியா," என நாம் அழைக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் குடியிருப்புகள் இருந்தாலும் அவை வட இந்தியா போல தனித்தீவுகளாக இயங்குவதில்லை. இங்கு நிலவும் இந்து/இஸ்லாமிய சகோதரத்துவம் என்பது இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒன்று.

அதே போல தமிழகத்தில் இருக்கும் இந்துக்களின் மதம் சார்ந்த மனநிலையும் ஒட்டுமொத்த இந்திய இந்துக்களின் மனநிலையில் இருந்து மிகவும் வேறுபட்டது. இங்கு இந்துமதத்தை தீவிரமாக கடைபிடிப்பவர்கள், இஸ்லாமியர்களை ஏலியன்களாகப் பார்ப்பவர்கள், மிகவும் குறைவு. இதற்கு அடிப்படையான காரணம் காலம்காலமாக இந்துப் பெண்கள் வருகைபுரியும் தர்காக்கள். பார்ப்பனப் பெண்களே கூட தங்கள் குழந்தைகளை மதுரை மாப்பாளையம் தர்காவில் பாய்யிடம் மந்திரிப்பதை பார்த்திருக்கிறேன். அதேபோல இஸ்லாமியர்கள் கோவில்களுக்கு வருவதில்லையே தவிர அந்தந்த ஏரியா இஸ்லாமியர்கள் அந்தந்த ஏரியா கோவில் விழாக்களில் நன்கொடை, நிகழ்ச்சி ஏற்பாடு என பங்களிப்பதும் இங்கு சர்வசாதாரணம். எல்லாம் ஒருகாலத்தில் ஒன்றாக இந்து உயர்சாதியினருக்கு அடிமைகளாக இருந்தவர்கள்தானே! இன்னும் சொல்லப்போனால் இந்து, இஸ்லாமியர்களிடையே வழிவழியான மாமன், மச்சான் சொந்தங்களே கூட உண்டு.
இப்படி இரு மதத்தினருக்குமிடையே வழிவழியாக இயல்பாக அமைந்துவிட்ட இணக்கம், அவர்கள் பகிர்ந்துகொள்ளும், மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டு பழக்கவழக்கங்கள் மற்றும் பொது வாழ்வியலில் இருந்தும் வருகிறது. உதாரணத்திற்கு பொங்கல் வைப்பது, தாயத்து கட்டுவது, பர்தா போட்டுக்கொள்வதில் கடுமை காட்டாதிருப்பது போன்ற விஷயங்கள். தர்க்காக்களில் கிட்டத்தட்ட இந்துக்களின் சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கு ஒத்த பல விஷயங்களைப் பார்க்கலாம். இப்படியாக ஒரே சாலையில் அவரவர் லேனில் போய்க்கொண்டிருந்த இரு மதத்தினரையும் உன் சாலை வேறு எனச் சொல்லி தனித்தனியாக சாலைகளை அமைத்துக் கொடுப்பதுதான் இந்துத்துவ, வஹாபிய இயக்கங்களின் கொள்கையாக இருக்கிறது. அதாவது அடிப்படைவாதம்.
எளிமையான சைக்காலஜிதான். வேறுவேறு மதங்களாக இருந்தாலும் இணக்கமாக இருக்கும் இருவரில் ஒருவன் திடீரென தன் மதத்தை தீவிரமாக பின்பற்றத்துவங்குகிறான். இதுவரை இருவருமாக பகிர்ந்துகொண்ட மதம்சாரா பொதுவான வாழ்வியல் விஷயங்களில் இருந்தும் தள்ளிப்போவதுடன், அவற்றுக்கு எதிராகவும் பேசத்துவங்கி திடீரென தீவிர அரேபிய வழியில் தன் மதத்தைப் பற்றிக்கொள்கிறான். இப்போது அந்த இன்னொருவனுக்கு இது உளவியல் ரீதியான பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறது. அந்த பாதுகாப்பின்மை மதத்தின் மீது அவனுக்கு பற்று இருக்கிறதோ இல்லையோ மதத்தின் பக்கமாக அவனைத் தள்ளுகிறது.
அதுமட்டுமல்லாது இந்துத்துவ இயக்கங்கள் எப்படி முற்போக்கு விஷயங்களுக்கு எதிராக நிற்கிறார்களோ அதேபோல வஹாபிய இயக்கங்களும் அதை செய்யத் துவங்கியிருக்கிறார்கள். பர்தா அணிவதைப் பற்றிய விவாத நிகழ்ச்சியை நிறுத்துகிறார்கள். காதலர் தினத்தன்று கற்பழிப்பு தினம் என போஸ்டர் ஒட்டுகிறார்கள். தர்காக்களை இடிக்க சூளுரைக்கிறார்கள். இதெல்லாம் நிச்சயம் தமிழக பொதுச்சூழலில் இருந்து இஸ்லாமியர்களை தனியாக காட்டுவதோடு பல இஸ்லாமிய குடும்பங்களில் அண்ணன் தம்பிகளிடையே கூட இதில் தீவிர கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. மற்றபடி இந்த தீவிர அரேபியத்தன்மை எந்த வகையிலும் இஸ்லாமியர்களுக்கு நன்மைகளைக் கொணராது. மஹாபாரதம் விமர்சனத்திற்குள்ளாகும்போது கொதித்தெழும் காவிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
திராவிட இயக்கம் ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமிய மக்களுடன் இணக்கமாக செயல்பட்டது அவர்களிடம் காணப்பட்ட நெகிழும் தன்மையினால்தானேயொழிய இஸ்லாம் அமைதி மார்கம் என்பதாலோ, எந்தவித பிற்போக்கு விஷயங்களும் இல்லாத மதம் என்பதாலோ அல்ல. அப்படியும் கூட, பெண்கள் பர்தா அணிவதை விமர்சித்து இஸ்லாமியப் பெண் ஒருவரை குடியரசு இதழில் கட்டுரை எழுத வைத்தவர் பெரியார். "இந்த துலுக்கன் ஊர் நியாயம் எல்லாம் பேசுவான். ஆனா வீட்டு பொம்பளைங்களை வெளியில் விட மாட்டான்," என்ற கருத்தையும் அப்போதே பேசியிருக்கிறார்.
ஆனால் அந்த காலகட்டங்களில் காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் தங்கள் சமூகத்தை பொதுச்சமூகத்தில் இருந்து பிரித்துவிடாமல், அதே நேரம் தங்களுக்கான உரிமைகள் அனைத்தும் கிடைக்கும்வகையில் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இன்று இஸ்லாமிய சமூகத்திற்கான கட்சிகளும், இயக்கங்களும் ஆளுக்கொரு தலைவர்களாகப் பிரிந்து பிளவுபட்டு நிற்கிறது. அவரவர்களுக்கு தங்கள் அரசியலைச் செய்வதற்கு தமிழக மதநல்லிணக்க சூழல் ஒரு தடையாக இருக்கிறது. ஒருபக்கம் இந்துத்துவ இயக்கத்தினர் தீவிரமாகப் போவதைப் போல, இந்தப் பக்கம் நாம் போனால்தான் அரசியல் லாபம் என்பதை தெரிந்தே செய்கிறார்கள். ஆனால் பரந்துபட்டு பார்க்கும்போது சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய சமூகத்திற்கு இது தீங்கை மட்டுமே விளைவிக்கும்.
ஒவ்வொருமுறை இந்துத்துவ இயக்கங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை அதிகம் பகிர்வது இந்துக்களாக இல்லாமல் இஸ்லாமியர்களாகவே இருப்பது எப்படி சோர்வளிக்கிறதோ, அதேபோலத்தான் வஹாபிய இயக்கங்களின் மீதான விமர்சனங்களை இந்துக்கள் அதிகம் பகிர்வதும் சோர்வளிக்கிறது.
அவரவர் சமூகத்தில் இருந்து அவரவர் சமூகத்தின் போக்குகளுக்கு எதிராக எழும் எதிர்ப்புக் குரல்கள்தான் வலுவானதாக இருக்கும் என்ற அடிப்படை எதிர்பார்ப்பிலேயே இஸ்லாமியர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து அதிகம் பேசவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அமைந்திருக்கிறது. மற்றபடி அந்த எண்ணமே இஸ்லாமியர்களுக்கு எதிரானது, எல்லோரையும் குற்றவாளிகளாக்குவது என்றெல்லாம் திரிப்பது ஏற்புடையதல்ல.
பயங்கரவாதம் என்பது வெடிகுண்டை எரிவதும், மசூதியை இடிப்பதும் மட்டுமல்ல. மெல்ல மெல்ல மக்களை மிதவாத பொதுச்சூழலில் இருந்து பிரித்து அடிப்படைவாத தனிமைச்சூழலுக்கு கொண்டுபோய் விடுவதும் பயங்கரவாதம் தான். ஆனால் இந்து அடிப்படைவாதம் இஸ்லாமியர்களை எதிரிகளாக நிறுவுவதைப் போல இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்துக்களை எதிரிகளாக நிறுவுவதில்லை என்பது பெருமூச்சுவிட வைக்கும் நல்ல விஷயம்தான் என்றாலும், இஸ்லாமியர்களை பொதுச்சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்துவது இந்து அடிப்படைவாதத்திற்கு மறைமுகமாக வசதி செய்து தரும் செயல்தான்.
அடிப்படைவாதமோ அதில் இருந்து எழும் பயங்கரவாதமோ இருபுறம் கூரான கத்திதான். அது இஸ்லாமியர், இந்து என்றெல்லாம் பேதம் பார்ப்பதில்லை. அதனால்தான் அடிப்படைவாதம், அது எந்த மதமாக இருந்தாலும் உடனே தடுக்க பதறியெழ வேண்டியிருக்கிறது. இந்த உண்மையை மதப்பற்றுக்கு அப்பாற்பட்டு வெறும் மனிதர்களாக இருந்து புரிந்துகொள்வது மட்டுமே கல்புர்கிகளும், ஃபாருக்குகளும் சகிப்புத்தன்மைமிக்க சமூகத்தை உருவாக்கும்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக