வியாழன், 15 ஜூன், 2017

ராமதாஸ் :இலங்கையிடம் பனைமரப் பாடம் கற்குமா தமிழகம்?

இலங்கையிடம் பனைமரப் பாடம் கற்குமா தமிழகம்? :  ராமதாஸ்மின்னம்பலம் : இலங்கையைப் போன்று தமிழகமும் பனைமரத்தைக் காக்க சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ஜூன் 14-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் புனித மரமாகக் கருதப்படுவதும், தமிழ்நாட்டின் மாநில மரமுமாகிய பனைமரங்கள் வேகமாக அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பனை மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. பனை மரத்துக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. சங்ககால இலக்கியங்களில் பனைமரத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, அந்த இலக்கியங்கள் அனைத்தையும் சங்ககாலத்தில் இருந்து நமது காலம் வரை காப்பாற்றித் தந்தவையும் பனை மரங்கள் தான். பனை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனிதர்களுக்குப் பயன்படுகின்றன.
அதிலும் குறிப்பாக பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர் போன்றவை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டவை.
அதனால் பனை மரத்தின் மீது எனக்குத் தனிப்பாசம் உண்டு. பனை மரங்களை அதிசய மரம் என்று பெயரிட்டு நான் அழைத்து வருகிறேன். எனினும், இயற்கையும், மனிதர்களும் இணைந்து செய்யும் சதியை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிசய மரமான பனை மரம் வேகமாக அழிந்து வருவது வேதனை அளிக்கிறது. 1970-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி தமிழகத்தில் சுமார் 6 கோடி பனை மரங்கள் இருந்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பனை மரங்களின் எண்ணிக்கை 5 கோடியாகக் குறைந்திருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருப்பதாக கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் தெரிவித்திருக்கிறது. 1970-களில் இருந்து 40 ஆண்டுகளில் எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அவற்றில் பாதியளவு மரங்கள் கடந்த 4 ஆண்டுகளில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மாநிலத்தின் அலுவல் மரமான பனை இவ்வளவு வேகமாக அழிந்து வருவதையும், அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு பனை மரத்தின் மூலமும் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.6000 முதல் ரூ.7000 வரை வருவாய் கிடைக்கும். ஆனாலும், பனை மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைக்காதது, விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவது உள்ளிட்ட காரணங்களால் தான் பனை மரங்கள் அழிந்து வருகின்றன. இப்போது இந்தப் பட்டியலில் வறட்சியும் சேர்ந்திருக்கிறது. எவ்வளவு கடுமையான வறட்சியாக இருந்தாலும் அதைப் பனை மரங்கள் தாங்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்த ஆண்டு வாட்டி வதைக்கும் வறட்சி மற்றும் வெப்பத்தால் விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்த்துக் குலுங்கிய பனை மரங்கள் காய்ந்து, கருகி மொட்டை மரங்களாய் நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.
அண்டை நாடான இலங்கையிலும் தமிழகத்தின் நீட்சியாக ஏராளமான பனை மரங்கள் நிறைந்துள்ளன. ஆனால், பனை மரங்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்புப்படுத்திப் பார்த்த சிங்கள அரசு, அவற்றின் மீது அக்கறை செலுத்தாமல் இருந்து வந்தது. எனினும் அரசின் கவனிப்பின்றி பனை மரங்கள் அழிந்து வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இலங்கை அரசு இப்போது நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாநிலங்களில் உள்ள கடற்கரையோரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பனைமரங்களை நடத் தொடங்கியிருப்பதால், அந்நாட்டில் பனை மரங்கள் அழிவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கின்றன.
தமிழகத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் என்பது உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கிய சிறப்புத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் பாமக அறிவித்திருந்தது. பனை உற்பத்திப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அதைச் செயல்படுத்தியிருந்தால் கடந்த ஓராண்டில் பனை மரத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்து அதைப் பலரும் அதிக எண்ணிக்கையில் வளர்க்கத் தொடங்கியிருப்பார்கள். ஆனால், எதற்கும் பயன்படாத பினாமி அரசு, அனைத்துக்கும் பயன்படும் பனை மரங்களைப் பாதுகாத்து பெருக்குவதில் சிறிதளவு கூட அக்கறை காட்டவில்லை.
தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் அழிவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் அவலமானது. எனவே, பனை மரங்களைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள 12,500 ஊராட்சிகளிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப 2000 முதல் 5000 வரை பனை விதைகளை வழங்கி, அவற்றை விதைத்துப் பாதுகாப்பாக வளர்ப்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். அத்துடன் பனைமரம் ஏறுவதற்கான எந்திரங்களை அரசு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக