வெள்ளி, 30 ஜூன், 2017

ஓடிஷா நியம்கிரி மலையை வேதந்தாவுக்கு விற்க மத்திய மாநில அரசுகள் ... டோங்கரா பழங்குடிகள் போர்க்கொடி!

நியாம்கிரி டிசா மாநிலத்தின் ராயகடா, கலாகண்டி
மாவட்டங்கள் பாக்சைட் எனப்படும் அலுமினியத் தாதுவளம் மிக்கவை. இம்மாவட்டங்களின் நியாம்கிரி மலைக்குன்றுகளில் கிட்டத்தட்ட 75 மில்லியன் டன் பாக்சைட் தாதுவளம் இருக்கிறது. தமிழ்நாட்டில் வைகுண்ட ராஜனைப்போல், ஒடிசாவில் வேதாந்தா எனப்படும் தரகு முதலாளி நிறுவனமும் பன்னாட்டு கம்பெனிகளும் நியாம்கிரி மலைக்குன்றுகளின் இயற்கை வளங்களை அபகரிக்க அம்மண்ணின் பழங்குடி மக்கள் மீது அரசின் துணையோடு பச்சை வேட்டை நடத்தி வருகின்றனர்.
மலைக்குன்றுகளில் கிட்டத்தட்ட 75 மில்லியன் டன் பாக்சைட் தாதுவளம் இருக்கிறது
டோங்கிரியா பழங்குடிகள் தங்கள் பகுதியில் சுரங்கம் தோண்ட அனுமதிக்க மாட்டோம் என்று நெடுங்காலமாகவே போராடி வருகின்றனர். மலைகளைத் தங்கள் தாயாக போற்றும் இம்மக்கள் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டமும் நடத்தியிருக்கின்றனர். இதன்படி ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியாம்கிரி சுரங்கம் தோண்டுவது தொடர்பாக ‘கிராமசபைகள் தீர்மானம் நிறைவேற்றலாம்’ என உத்தரவிட்டது.

ஜனவரி-ஆகஸ்டு 2013வாக்கில் இப்பகுதியில் பள்ளி சபை (Palli Sabha) என்றழைக்கப்படும் 12 கிராமசபைகள் ஒன்றுகூடி நியாம்கிரி மலையை சுரண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று  தீர்மானம் நிறைவேற்றியது. டோங்கிரி பழங்குடிகளின் இந்த கிராமசபை தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதைச் சுட்டிக்காட்டித்தான் இந்த சமூக அமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு தனியார் தரகுமுதலாளிகளின் கொள்ளையை தடுத்துவிடலாம் என்று பல அறிவுஜீவிகளும் பிரச்சாரம் செய்தனர்.
இப்படித்தான் தி இந்து தமிழ் நாளிதழின் மூத்த பத்திரிக்கையாளர் டி.எல். சஞ்சீவ் குமார் அவர்கள் நியாம்கிரி பழங்குடியினரைப் போன்று டாஸ்மாக்கை அப்புறப்படுத்த தமிழக கிராம மக்களும் கிராமசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். ஆனால் கிராமசபைக்கு டாஸ்மாக்கை தடுக்கும் அதிகாரம் இல்லையென்று மிகச் சமீபத்தில் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை நீங்கள் படித்திரூப்பிர்கள்.
‘உரலுக்கு ஒரு பக்கம் அடி; மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி’ என்ற கதையாக டாஸ்மாக்கை தடுப்பது மட்டுமல்ல, இந்நாட்டின் இயற்கை வளங்கள் மீது பொதுமக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தமிழ்நாடு சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டாவது அடியையும் வாங்கியது. அதாவது சிப்காட் வளாகத்தில் உள்ள பெப்சி கோகோ-கோலா போன்ற பன்னாட்டு தொழிற்சாலைகள் உட்பட 22 தொழிற்சாலைகளுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு என்ற காரணத்தைக் கூறி தாமிரபரணி தண்ணீர் தருவதை தடுக்க இயலாது என்று மற்றொரு தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்புதான் உறுதி செய்திருந்தது!

மூன்றாவது அடியை இந்திய பூர்வகுடிகளின் தலைமீது வைக்கப்போவது மோடி கும்பலாகும்
இப்பொழுது மூன்றாவது அடி, டோங்கிரி பழங்குடிகளின் கிராமசபை தீர்மானத்தின் மீது விழப்போகிறது! இம்முறை மூன்றாவது அடியை இந்திய பூர்வகுடிகளின் தலைமீது வைக்கப்போவது மோடி கும்பலாகும். மோடி ஆட்சியில் விஷ்ணு அவதாரம் தொடர்வதும் இந்தியாவின் மாவலியின் தொல்குடிகள் கொல்லப்படுவதும் தற்செயலான நிகழ்வல்ல! இந்துத்துவ பார்ப்பனியத்தின் பூர்வாங்க செயல்திட்டம் இதுவே!
தற்போதைய மத்திய அரசின் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை கிராம சபை தீர்மானம் கட்டுப்படுத்தாது என்று அறிவிக்கிறது. இதன் படி ஒடிசா சுரங்கக் கழகம் (Odihsa Mining Corporation), டோங்கிரி பழங்குடிகளின் கிராமசபை தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்க இயலுமா என்று சட்ட வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்துவருகிறது. வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தமுறை எப்படியும் நியாம்கிரி சுரங்கக் குத்தகை தங்களுக்கு கிடைக்கும் என்கிறது வேதாந்தா.
உச்சநீதிமன்றத்தால் இந்த பகற்கொள்ளையை தடுக்கமுடியாதா? இந்திய அரசியல் சாசனத்தின் படி நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை உச்சநீதிமன்றத்தினுடையதுதானே? என்ற கேள்வி எழலாம். சரிதான். ஆனால் வன உரிமைச் சட்டமே நாட்டு வளங்கள் சூறையாடப்படுவதை சரி என்று சொல்லும் பொழுது உச்சநீதிமன்றத்தின் வேலை சட்டத்தைப் பாதுகாப்பதா? மக்களைப் பாதுகாப்பதா? தண்ணீர் விசயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தைப் போலவே உச்சநீதிமன்றமும் சட்டத்தைப் பாதுகாக்கும் வேலையை திடகாத்திரமாக செய்யும். என்ன ஒன்று! ஒட்டுமொத்த அமைப்பும் மக்களுக்கு எதிராக போய்விட்டது! இந்த அமைப்பிற்குள் மக்களுக்கு என்று எந்தவொரு விடிவும் கிடையாது என்பதற்கு நியாம்கிரி குன்றுகள் ஏலம் விடப்படுவது மற்றுமொரு சான்றாக அமைந்து விட்டது!
******
வாசகர்களுக்கு ஒரு கேள்வி: பிசினஸ் ஸ்டேண்டர்டட் நாளிதழில் அன்றாடம் “Commodities” என்ற பகுதி வெளிவரும். Commodities என்றால் சரக்குகள் என்று பொருள். பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும், தரகு முதலாளிகளும் இந்தப் பகுதியில் வெளிவரும் செய்திகளை தினமும் கவனித்து வருவார்கள். சரக்குகளின் விற்பனை நிலவரம், சந்தைக்கு வரும் புதிய சரக்குகளின் விவரங்கள் இப்பகுதியில் அடங்கியிருக்கும். 27-06-2017 அன்று இந்நாளிதழின் கமோடிட்டிஸ் பகுதியில் (பக்கம்.14) நியாம்கிரி மலையை ஏலம் விடுவதற்கு ஒடிசா அரசாங்கம் முயற்சி செய்வதாக இச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அப்படியானால் நியாம்கிரி மலை சரக்கா?
செய்தி ஆதாரம்: வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக