ஞாயிறு, 18 ஜூன், 2017

பேராசிரியர் சுபவீ :பாஜகவின் துணையோடு இரண்டு அதிமுக கட்சிகளும் ....

வெளியே வந்தது பூனைக்குட்டி
தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக மூன்று, நான்கு அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றது என்றே இன்று பலரும் கருதுகின்றனர். அவை அணிகளாக இல்லை, கட்சிகளாகவே பிரிந்து விட்டன என்பதே உண்மை. பன்னீர்செல்வம், பழனிச்சாமி, தீபா ஆகியோரின் தலைமையில் இன்று மூன்று கட்சிகள் உள்ளன. வேண்டுமானால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள ஒரு கட்சி, எடப்பாடி அணி, தினகரன் அணி என்று இரண்டாகப் பிரிந்துள்ளது என்று கூறலாம்.
இவை அனைத்தையும், தில்லியிலிருந்து பாஜக இயக்குகிறது என்னும் உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த உண்மையை இரு கட்சிகளும் மறுத்து வந்தன. இப்போது, ஓர் ஆங்கில நாளேட்டிற்கு (The Times of India, Chennai ed., 14th June 2017) பன்னீர்செல்வம் அளித்துள்ள நேர்காணலில் எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகி உள்ளன. நீங்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, அவர் உங்களிடம் என்ன கூறினார் என்னும் வினாவிற்கு, பன்னீர்செல்வம் தந்துள்ள விடை இதுதான்:-

 "நிலையான அரசைத் தரும் வகையில், இரண்டு அணிகளும் இணைந்து, ஒரு கட்சியாக இயங்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். மிக முக்கியமாக, ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும் என்ற கருத்தை எங்களிடம் கூறினார். நிலைமை எப்படியிருந்தாலும், அரசு நிர்வாகத்தில் ஊழல் இருக்கக்கூடாது என்பதிலும், அதனைத் தான் அனுமதிக்க மாட்டேன் என்பதிலும் அவர் மிகத் தெளிவாக உள்ளார். அதில் அவர் உறுதியாக உள்ளார்.
" இதற்கு மேல் இங்குள்ள அதிமுக கட்சிகளை யார் இயக்குகிறார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை. இரண்டு நாள்களுக்கு முன், பேச்சுவார்த்தைக்கான குழுவையே கலைத்து விட்டதாகவும், இனி இணைப்புக்கு இடமில்லை என்றும் பேசிய பன்னீர்செல்வம், இப்போது மோடியின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கே அதிமுக இணைந்து செயல்படுவதில் மோடிக்கு அப்படியென்ன அக்கறை? எந்த ஒரு கட்சியும் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கருதுமே தவிர, அடுத்த கட்சியை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டாது. ஆனால் மோடி அப்படி ஆர்வம் காட்டுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பாஜக ஒருநாளும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்பது. எனவே அந்த முயற்சியில் ஈடுபடுவது வீண் வேலை என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். இரண்டாவது, இப்போது ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் வருமானால், திமுக மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்பது வெளிப்படையான உண்மை. அதனை பாஜக ஒருநாளும் விரும்பாது.

பாஜக மட்டுமின்றி, சமூக நீதி, திராவிட இயக்கம் ஆகியனவற்றை முழுமையாக வெறுக்கும் எவரும் திமுக ஆட்சிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான், ரஜினியைக் கொண்டுவந்து வாக்குகளைப் பிரித்தோ, அல்லது வேறு வழியிலோ அந்த நிலை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதில் சிலர் முனைப்பாக உள்ளனர்.

பன்னீர்செல்வம், எடப்பாடி தலைமையிலான கட்சிகளுக்கும், தினகரன் தலைமையிலான அணிக்கும் பணம், பதவி இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.எனவே, அவர்களும் சட்டமன்றத்திற்கு வெளியே முட்டி மோதிச் சண்டை போட்டுக் கொள்வார்களே தவிர, சட்டமன்றத்திற்குள், ஆடாமல், அசையாமல் வெறும் பொம்மைகளாக அமர்ந்திருப்பார்கள்.
தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் தன்னலம் மிக்க அதிமுக அரசு நாட்டை ஆள்வதும், அதற்கு மதவாதக் கட்சியான பாஜக துணை போவதும் வெட்கக்கேடானது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக