வெள்ளி, 2 ஜூன், 2017

ஒருவருக்கு இரண்டு இதயங்கள்.. தமிழக மருத்துவர்கள் சாதனை . இந்தியாவில் முதல் முறையாக..


ஒரு மனிதனில் இரண்டு இதயங்கள்: மருத்துவர்கள் சாதனை!
மின்னம்பலம் : இந்தியாவிலேயே முதன்முறையாக இதயம் செயலிழந்தவரின் உடலில் மற்றொரு இதயத்தைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. இவர் கோவை மருத்துவ மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருடைய இதயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. வேறு இதயம் பொருத்தினால் தான் அவரால் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் மருத்துவர்கள் பழைய இதயத்தை எடுத்துவிட்டு புதிய இதயம் பொருத்தாமல், இரண்டு இதயத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்இதுகுறித்து கோவை மருத்துவ மைய மருத்துவர்கள் கூறியதாவது, “ இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு ஒரு இதயத்துடன் இணைத்து மற்றொரு இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருடைய இதயம் முழுவதும் செயல் இழக்காமல் 10 சதவிகிதம் மட்டும் இயங்கி வந்தது. மேலும் அவரது நுரையீரல் அதிக அழுத்தத்துடன் இருந்ததால், புதிய இதயம் மாற்றினாலும் அது பயனளிக்காது. ஏனெனில், நுரையீரலின் அழுத்தத்தை புதிய இதயத்தால் தாங்க முடியாது என்பதால், அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி செயற்கை இதயத்தைப் பொருத்தி, பழைய இதயத்தின் செயல்பாடுகளை முற்றிலுமாகக் குறைத்து புதிய இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் சிகிச்சை மேற்கொண்டோம். இதற்காக, மூளைச் சாவு அடைந்த ஒரு பெண்ணின் இதயம் தானமளிக்கப்பட்டது. எனவே, அவருக்குப் புதிதாக மற்றொரு இதயம் பொருத்தி ஹெட்டிரோட்டோபிக் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் மூன்றரை மணி நேரம் தொடர்ந்து இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று மருத்துவர் பிரசாந்த் விஜயநாத் கூறியுள்ளார்.
மேலும் நமது நாட்டில் 2 இதயம் உள்ள முதல் நபராக இவர் இருக்கிறார். இரு இதயங்களுக்கும் இடையே 5 இடங்களில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் மூன்று இடங்களிலும் வலதுபுறம் இரண்டு இடங்களிலும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவை தற்போது சிறப்பாகச் செயல்படுகின்றன. பொதுவாக ஆண்களின் உடலில் xy குரோமோசோமும, பெண்களின் உடலில் xx குரோமோசோமும் இருக்கும். தற்போது இந்த நபருக்குப் பெண்ணின் இதயம் பொருத்தப்பட்டுள்ளதால் இவரது உடலில் இரு வகையான குரோமோசோமும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக