செவ்வாய், 13 ஜூன், 2017

ஈபிஎஸ், ஒபிஎஸ், தினகரன், சசிகலா எதிர் தமிழக மக்கள்

ஜெயலலிதா + மோடி +ஊழல்கள் +சசிகலா+ ஓ.பன்னீர்செல்வம்!
கீற்று ..எழுத்தாளர்:செ.கார்கி: சின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், வீரபாண்டி கட்டபொம்மன், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, என்று எவ்வளவுவோ பேர் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி தன் உயிரை இந்தத் தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் நல்வாழ்விற்காகவும் விட்டுச்சென்றார்கள். அவர்கள் யாரும் இந்தத் தமிழ்மக்களின் அனைவருக்குமான வளங்களைக் கொள்ளையடித்தும் அதிகார
முறைகேடுகளில் ஈடுபட்டும் தங்கள் குடும்பத்தையும், தங்கள் பரம்பரையும் வளமாக வாழ சொத்துச்சேர்த்து வைத்தவர்களோ இல்லை அதற்கு வழியேற்படுத்தி வைத்தவர்களோ அல்ல. எந்தவித பிரதிபலனும் எதிர்பராமல் தன் நாட்டின் மானமும் இனத்தின் மானமுமே தன்னுடைய மானம், அதைக் காப்பாற்றுவதற்காக உயிரை துறப்பது என்பது ஒரு வரலாற்று பெருமை என்று நினைத்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த இந்தத் தமிழ்நாட்டில் ஊரை அடித்து உலையில் போட்ட திருட்டுக் கும்பல்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்வது என போட்டியிடும் அற்பத்தமான நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களும் அதில் கொஞ்ச நஞ்சம் தன்மான உணர்வோடு இருக்கின்ற தன் நாட்டின் மானத்தையும் தன் இனத்தின் மான மரியாதையையும் தன் உயிரினும் மேலாக நினைக்கின்ற நபர்களும் இங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்துக் கூத்துக்களுக்கும் மெளன சாட்சியாக அமைதியாக உட்கார்ந்து சுரணையற்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொடுப்பதற்கு முன்பாகவே இறந்து போன ஊழல் ராணி ஜெயலலிதாவின் சமாதி சென்னை மெரினா கடற்கரையில் ஒரு வரலாற்று அவமான சின்னமாக இன்னும் காட்சியளித்துக்கொண்டு இருக்கின்றது. அதை அங்கிருந்து அப்புறப்படுத்த போராட்டம் நடத்த வேண்டும் என்று எந்தத் தமிழின உணர்வாளர்களுக்காகவாவது தோன்றியதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. அதிமுக வில் இருக்கும் சுயமரியாதை, தன்மானம் என்றால் என்னவென்றே தெரியாத  அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் இன்னும் அந்தச் சமாதியை ஒரு கோயிலுக்கு நிகராகவும் உள்ளே இருக்கும் அழுகி சிதைந்துபோன பிணத்தைக் கடவுளுக்கு நிகராகவும் வழிபட்டு வருகின்றார்கள். பொது மக்களும், ஆண்டாண்டு காலமாக பார்ப்பனியத்துக்கு அடிமைப்பட்டுத் தங்கள் சுயமரியாதையை இழந்தவர்களும் தினம் தோறும் அந்தச் ஊழல் ராணியின் சமாதியை வழிபட்டு தங்கள் பார்ப்பன அடிமைத்தனத்தையும் அரசியல் அற்ற கோமாளித்தனத்தையும் வெளிக்காட்டி வருகின்றார்கள்.
தமிழ் மக்களின் இந்த அடிமை உணர்வுதான் சசிகலா போன்ற ஊழல் பேர்வழிகளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் போய் உட்கார போகின்றேன் என்று சொல்ல தைரியம் தருகின்றது. சிறையில் தூக்கி போட்டாலும் அங்கிருந்துகொண்டு இங்கிருக்கும் அவரின் கைகூலிகளின் மூலம் தமிழ்நாட்டின் அரசியலை கட்டுப்படுத்த முடிகின்றது. தமிழ்நாட்டு மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைசென்ற வீர மங்கை போல இந்த ஊழல் பெருச்சாளிகளால் தைரியமாக தன்னைக் காட்டிக்கொள்ள முடிகின்றது. இங்கே அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் பொருக்கித்தின்பதற்காக கட்சி நடத்தும் சில அயோக்கியர்கள் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவமான நிலையை பற்றி கொஞ்சம் கூட கவலைபடாது அந்த ஊழல் பெருச்சாளிகளின் எச்சிலையில் மேய்ந்துகொண்டு இருக்கின்றனர்.
இப்படி தன்னை சுற்றி தன்மானதையும், சுயமரியாதையும் இழந்த ஒரு பெரும் அடிமைக்கூட்டதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கையில்தான் அயோக்கியர்களும், மொல்லமாரிகளும் இன்று தமிழ்நாட்டை ஆள துடித்துக்கொண்டு இருக்கின்றர்கள். ஓட்டுப் போட்ட கோடிக்கணக்கான மக்கள் வெறும் பார்வையாளர்களாய் இருக்க  ஒரு 136 எம்எல்ஏக்களை  வைத்துக்கொண்டு அதுவும்  ஒபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என துண்டு துண்டாய் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் அரசியலையும் கூத்துமேடையாக்கி சிரிப்பாய் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றனர். யாரும் நம்மை எதுவும் செய்துவிடமுடியாது, நாம் வைப்பதுதான் சட்டம் என சட்டாம்பிள்ளைத் தனமாக தமிழ்நாட்டு மக்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.
 எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள்  அனைத்தும் முடங்கிக்கிடக்கின்றது. ஆனால் யார் பக்கம் எவ்வளவு எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது,எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்பதே இன்று தமிழ்நாட்டின் பொதுப்பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. ஆளுவதற்குக் கிஞ்சுத்தும் அருகதையற்ற ஒரு கொள்ளைக்கார கூட்டம் இன்று தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கின்றது. தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீரை வருமானத்தில் பெரும்பகுதியை செலவு செய்தே வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் எல்லாம் கடுமையான வறட்சியால் செத்துக்கொண்டு இருக்கின்றன. இப்போது சாகப்போகும் மாட்டையும் கூட சந்தைகளில் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் இதை எதையும் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் கட்சியை யார் கைப்பற்றுவது அதை வைத்து தமிழ்நாட்டை முழுவதுமாக கொள்ளையடிப்பதற்கான பாத்தியதையை யார் பெறுவது என போட்டியை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.
போட்டியில் யாராவது ஒருவர் நேர்மையானவராக இருந்து மற்றவர்கள் மோசடி பேர்வழிகளாக, உழைத்துச்சோறு தின்னாமல் ஊரை அடித்து உலையில் போட்டு வயிறு வளர்க்கும் பேர்வழிகளாக இருந்தால் நாம் போட்டியில் பங்குபெரும் நேர்மையான நபர் வெற்றிபெற மனதார விரும்புவோம். ஆனால் போட்டியில் பங்குபெற களத்தில் இருக்கும் அனைவருமே திருட்டுக்கும்பலாக, கொஞ்சம் ஏமார்ந்தால் சட்டசபையையே தனது பேரில் மாற்றிக்கொள்ளும் தில்லாலங்கடி கும்பலாக இருக்கும் போது அதைக் களத்தில் இருந்தே ஓட ஓட விரட்டி அடிப்பதுதான் சரியானதாக இருக்கும். இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட்தேர்வு திணிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி செய்து நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகளை மோடி அரசு கொன்ற போதும் தமிழக அரசு விவசாயிகள் தற்கொலை செய்துண்டதற்குக் காரணம் வறட்சி அல்ல தனிப்பட்ட  பிரச்சினையால்தான் தற்கொலை செய்துகொண்டார்கள் என பச்சை அயோக்கியத்தனமாக உச்ச நீதி மன்றத்தில் அறிவித்து தமிழக விவசாயிகளின் மரணத்தை தன்னுடைய பதவியையும் பவுசையும் காப்பாற்றிக்கொள்வதற்காக கொச்சைப்படுத்தியது என ஒரு கேவலமான மனிதத் தன்மையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்துவருகின்றது.
ஆனால் இத்தனைக் கூத்துக்களையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு எதுவும் செய்யாமல் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஜல்லிக்கட்டுக்காக போராட வண்டி பிடித்து வந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்று தமிழ்நாடே சீரழிந்து கிடக்கையில் அதைப்பற்றி எந்தச் சுய சிந்தனையும் அற்று மானங்கெட்டு வெட்கம்கெட்டு வாய் பேசாமல் தங்கள் உலுத்துப்போன அரசியல் அறிவை வெளிக்காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். மாடுகளுக்காக களத்தில் இறங்க உத்வேகம் பெற்ற அவர்கள் இன்று விவசாயிகள் சாவதை பற்றியோ தமிழக உரிமைகள் திட்டமிட்டு பிஜேபி அரசால் பறிக்கப்படுவதைப் பற்றியோ அதை இங்கிருக்கும் அதிமுக கொள்ளைக்கூட்டம் ஆதரிப்பது பற்றியோ எந்தவித உணர்ச்சியும் இன்றி செத்த பிணம் போல செயலற்று கிடக்கின்றார்கள். அன்று லட்சக்கணக்கான மாணவர்களை அணிதிரள பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் தீவிரமாக களமாடியவர்கள் எல்லாம் இன்று தமிழகத்தில் எந்த மூலையில் படுத்துக்கிடக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
தமிழகம் தன் தன்மானத்தை மறந்து, சுயமரியாதையை மறந்து மறுத்துப்பொய் கிடக்கின்றது. அயோக்கியர்கள் தைரியமாக பொதுவெளியில் நின்றுகொண்டு ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக சபதமிடுகின்றார்கள். பணபலமும் ,அடியாள் பலமும் முச்சந்தியில் நின்றுகொண்டு அம்மணமாக ஆடிக்கொண்டு இருக்கின்றது. வரலாறு கணாத கொள்ளையும், திருட்டும், மோசடியும், ஊழலும், அதிகார அத்து மீறலும் தமிழகத்தை அழித்துக்கொண்டு இருக்கின்றது. தினகரன், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என அதிமுகவை கைப்பற்ற களத்தில் இருக்கும் அனைவருமே தமிழின துரோகிகள், தமிழ்நாட்டின் மானத்தை டெல்லிக்கும், பார்ப்பன பாசிஸ்ட்டுகளுக்கும் அடகுவைத்தவர்கள். அதன் மூலம் தமிழ்நாட்டை மேலும் கொள்ளையடிக்கவும் தன்னை காப்பாற்றிக்கொள்ளவுமே வழி தேடுகின்றவர்கள். அதனால் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஒரு பெரும் மக்கள் போராட்டம் தமிழகத்தில் கட்டியமைக்கப்பட வேண்டும். அது மட்டுமே இந்தத் துரோகிகளை விரட்டி அடிக்க ஒரே வழி.  மேலும் அது ஒன்றுதான் தமிழர்கள் தன்னுடைய தன்மானத்தையும் சுயமரியாதையையும்  மீட்டெடுப்பதற்கான வழியும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக