ஞாயிறு, 25 ஜூன், 2017

இந்தியில் பாஸ்போர்ட் ... ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

சென்னை: இந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பு தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலாகும். உடனடியாக இந்த அறிவிப்ப திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இனி வரும் காலங்களில் பாஸ்போர்ட் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாஸ்போர்ட் சட்டத்தின் 50 வது ஆண்டு விழாவில் பேசியிருப்பதற்கு திமுக சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி பேசாத மாநிலங்களில் வாழும் மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இல்லாமல் செயல்படும் மத்திய பாஜக அரசு, இந்தி திணிப்பில் எல்லையில்லா ஆர்வம் காட்டுவது வேதனைக்குரியது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கத் துடிப்பது, மத்திய அரசு அலுவலகங்களில் திட்டமிட்டு நடக்கும் இந்தி திணிப்பு, மத்திய அரசு பணியில் சேர விரும்புவோருக்கு இந்தி கட்டாயம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திக்கு முதலிடம் என எண்ணற்ற இந்தி திணிப்பு நடவடிக்கைகளை, மத்தியில் உள்ள பாஜக அரசின் ஒவ்வொரு இலாகாவிலும் உள்ள அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இடைவிடாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தி திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர நாட்டில் எங்களுக்கு வேறு பணியே இல்லை என்பது போல மத்திய பாஜக அரசு செயல்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் செயல் அல்ல என்பதை அக்கட்சியில் உள்ள யாரும் உணர மறுக்கிறார்கள். தென் மாநிலங்களில் இருந்து பாஜகவின் அமைச்சர்களாக இருப்பவர்களோ, தமிழகத்தில் பாஜகவில் அமைச்சராக இருப்பவரோ, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நிற்பதற்குத் தயாராக இல்லை.
இந்தி திணிப்பில் காட்டும் வேகத்தை, தொன்மை மிக்க செம்மொழியான தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிப்பதிலும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிப்பதிலும் மத்திய அரசு காட்டவில்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று திமுக அரசின் சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கருணாநிதி அதனை நேரடியாக குடியரசுத் தலைவரிடம் அளித்த பிறகும், ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பிய பிறகும் கூட, அந்தத் தீர்மானத்தின் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ் மொழியை புறக்கணித்து, இந்தி திணிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய பாஜக அரசுக்கு இந்தி பேசாத மாநில மக்களையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வம் ஏதுமில்லை என்பதை இதுபோன்ற செயல்கள் பட்டவர்த்தனமாக படம்பிடித்துக் காட்டுகின்றன. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதும், தமிழக உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுவதும், தமிழகம் போன்ற தேசப்பற்று மிக்க மக்கள் வாழும் மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, வேலை வாய்ப்பு என்றெல்லாம் முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்த பாஜக, இந்தி திணிப்பு மட்டுமே எங்கள் முழக்கம் என்று செயல்படும் போக்கை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளித்து, பாஜகவினருடன் கைகோர்த்து டெல்லியில் நிற்கின்ற தருணத்தில் வெளிவந்துள்ள, இந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பு தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலாகும். உலக நாடுகள் அனைத்திலும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகின்ற நேரத்தில், இந்தியாவில் உள்ள ஒருசில வடமாநிலங்களில் பேசப்படும் இந்தி மொழியை உலகெங்கும் பயணிக்கப் பயன்படும் பாஸ்போர்ட்டில் புகுத்துவது, இந்தி பேசாத மாநில மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடுவது போலிருக்கிறது. ஆகவே, இந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்   tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக