வியாழன், 29 ஜூன், 2017

குறும் / பெரும் பட இயக்குனர்கள் குறும்பட விழாக்களுக்கு செல்லவேண்டும் ... உங்கள் உள்ளே இருக்கும் படைப்பாளி ...

jeyachandra.hashmi: ஒரு ஐ போன் கேமிரா ஆன் ஆகி இருக்கிறது. லென்ஸ்
வழியே ஒரு வெள்ளைத் தாள் மட்டும் தெரிகிறது. பொதுமக்கள் வந்து என்ன இது என்று விசாரிக்கும் குரல்கள் கேட்கிறது. இந்த தாளை படம்பிடிக்கிறேன் என்கிறார் இயக்குனர். மக்கள் ஆர்வமாகி அவருடன் சினிமாவை பற்றி பேசுகிறார்கள். அரசியல் பற்றி நக்கலடிக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள். இறுதியில் போலீஸ் வருகிது. போலீஸ் ஸ்டேஷனை படம் பிடிக்கிறார் என்று இயக்குனரை ஸ்டேஷனுக்கு கூட்டிச் செல்கிறார்கள். அவர் எடுத்த காட்சியை காட்டச் சொல்கிறார்கள். (திரை கருப்பாகி வெறும் சத்தம் மட்டும் கேட்கிறது). வெறும் வெள்ளைத்தாள் மட்டுமே ரெக்கார்ட் ஆகியிருப்பதை பார்த்து அவரையும் ஃபோனையும் விடுவிக்கிறார்கள். மீண்டும் வெள்ளைக் காகித ஷுட்டிங் தொடங்குகிறது.

இதுதான் படம். ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. முழுவதும் வெள்ளைத்தாள்தான். ஆனால் படம் முழுக்க போர், அகதிகள், அடக்குமுறை, ராணுவம் குறித்த நுணுக்கமான அரசியல். ஹாம்பர்க் குறும்பட விழாவில் இன்டர்நேஷனல் பிரிவில் கலந்துகொண்ட குறும்படம் இது. அங்கே நான் பார்த்த 98 சதவிகித குறும்படங்கள் அரசியல் பேசும் படங்கள்தான். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டில் தற்போது நிலவும் குழப்பங்களை, பிரச்சினைகளையே குறும்படமாக எடுத்துள்ளனர். உதாரணத்திற்கு பிரிட்டனில் இருந்த வந்த படங்கள் அத்தனையும் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியதை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தன. 70, 75 வயதிலும் குறும்படங்களை எடுத்து, விழாவிற்காக நாடு கடந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் (அல்லது இந்தியாவில்) எடுக்கப்படும் குறும்படங்களுக்கும் வெளிநாடுகளில் எடுக்கப்படும் குறும்படங்களுக்கு நிறைய வித்தியாசங்களை உணர முடிகிறது. இங்கே நாம் குறும்படங்களில் ஒரு சிறிய கதையை சொல்ல யத்தனிக்கிறோம். ஆனால் அங்கே எந்தவொரு குறும்படத்திலும் கதை இல்லை. ஒரு சிறிய சம்பவம் அல்லது அனுபவம், பரீட்சார்த்தமான முயற்சிகள், மிக முக்கியமாக கலைத்துவமான முயற்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அது ஒரு கலை அனுபவம் அவ்வளவே.
பார்வையாளர்கள் திரைப்படங்களுக்கு வருவது போல டிக்கெட் எடுத்துக்கொண்டு குறும்பட விழாக்களுக்கு வருகிறார்கள். ஒரு குறும்படத்தை பற்றி அத்தனை கேள்விகள் கேட்டு விவாதிக்கிறார்கள். காட்சிரீதியான அனுபவத்தையே அதிகம் விரும்புகிறார்கள். சில குறும்படங்கள் எனக்கு சுத்தமாக புரியவில்லை. ஆனால் காட்சி அனுபவத்தை கொடுத்தது. அந்த குறும்படங்களை பற்றி நிறைய கேள்விகள் கேட்டு ஆழமாக பேசுகிறார்கள்.
வெறும் புகைப்படங்களைக் கொண்டு உருவான படங்களும் தனி பிரிவில் திரையிடப்பட்டன. இதில் எந்த குறும்படத்தை பார்த்தும் ஒரு தயாரிப்பாளர் அந்த இயக்குனரை திரைப்படம் இயக்க அழைக்க வாய்ப்பில்லை. அதற்காக எடுக்கப்பட்ட படங்களும் இல்லை அவை. குறும்படத்தை ஒரு தனி மீடியமாக, கலைத்துவமான, பரீட்சார்த்தமான முயற்சிகளை செய்யும் ஊடகமாக கருதியே படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் பிரச்சினை சூழ வாழும்போதும் இங்கே குறும்படங்கள் பிரதானமாக காதலை மட்டுமே சுற்றி சுழல்வதும், அவையும் திரைப்பட வாய்ப்புக்காகவே எடுக்கப்படுவதும் கொஞ்சம் வெட்கத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது.
ஒரு படைப்பாளிக்குள் பெரும் தேடலையும் மாற்றத்தையும் கலை சார்ந்த புதிய பார்வையையும் விளைவிக்கின்றன இதுபோன்ற குறும்பட விழாக்கள். திமிராக சொல்லவில்லை. பணிவாக சொல்கிறேன்... குறும்பட இயக்குனர்கள் (Of course பெரும்பட இயக்குனர்கள்) நிச்சயம் இதுபோன்ற விழாக்களுக்கு சென்றுவர வேண்டும். உங்களுக்குள் இருக்கும் படைப்பாளி கட்டாயம் மெருகேறுவான் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக