வியாழன், 29 ஜூன், 2017

அனைத்துச் சமூகப் பயன்களையும் இன்றளவும் மிகக் கூடுதலாக அனுபவித்துவருவது பார்ப்பனர்கள்தானே?

Ganesh Babu : எங்க தாத்தாவுக்கு  தாத்தா காலத்துல ஏதோ பண்ணிட்டாங்கனு -எஸ்.வி.சேகர் வெச்சுக்கிட்டாலும், அதற்காக நாங்க என்ன செய்வோம்? அப்பா செய்தக் குற்றத்துக்கு பிள்ளையை தண்டிப்பதற்கு சட்டத்திலேயே இடமில்லையே" பகவத் கீதை, வேதம், மனு(அ)நீதி போன்ற இந்துப் புனித நூல்களின் அடிப்படையிலான பார்ப்பன ஆதிக்கமும், மனித உரிமை மீறல்களும் ஏதோ தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் நடந்தப் 'பழையக் கதை' என்று சொல்வதே அயோக்கியத்தனமானது. 'அனைவரைவிட உயந்தவன் பிராமணன்' என்றுச் சொல்லி சாதிய அடுக்கின் உச்சியில் அமர்ந்துக்கொண்டு அதன் அனைத்துச் சமூகப் பயன்களையும் இன்றளவும் மிகக் கூடுதலாக அனுபவித்துவருவது பார்ப்பனர்கள்தானே?
நாட்டின் ஜனாதிபதியாகக்கூட மற்றவர்களால் ஆகிவிடமுடிகிறது, ஆனால் கோவில்களில் அர்ச்சகராக மட்டும் ஆகமுடியாது என்பதன் பின்னணி 'நான் உன்னைவிடப் புனிதம்' என்றக் கருத்தியலின்தானே!
அதனால்தான் சாதிய அமைப்புக்கு(caste-system) எந்த ஆபத்தும் வந்துவிடாமல் அதனைக் காப்பாற்றுவதில் பார்ப்பனர்கள் இத்தனை உறுதியாக இருக்கிறார்கள்.

இந்தக் குறிப்பிட்டப் பேட்டியில் கூட, "சாதியும் மதமும் நமது தாய் தந்தையைப் போல அல்லவா?" என்று எஸ்.வி.சேகர் கேட்பதும்; "நாட்டு நலனுக்கு இன்றையத் தேவை சொந்த சாதிப்பற்றும், பிறர் சாதி நட்பும்" என்று 'துக்ளக்' குருமூர்த்தியும் சொல்வதன் மூலம் வெளிப்படையாகச் சாதியை ஆதரிப்பதுதானே இந்தத்துவத்தின் உண்மையான கோரமுகம்?
சரி அதையெல்லாம் கூட மறந்துவிட்டு சேகர் சொன்னக் கருத்துக்கே வருவோம். 'தந்தை செய்தத் தவறுக்கு மகனை தண்டிக்க சட்டத்தில் இடமில்லையே' என்கிறார்.
நாங்கள் எப்போது பார்ப்பனர்களை தண்டிக்கவேண்டும் என்று சொன்னோம்?
முதலில் கடந்தக்காலத்தில் பார்ப்பன கொடூரங்கள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த தனிமனித குற்றங்களைப் போல வாதிடுவதே மிகப் பெரிய மோசடி. தெளிவாகச் சொல்லப்போனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக, வேதம், புராணம், வர்ணம், சாதி ஆகியவற்றின் பெயரால் பிறருக்கு சமூக அநீதிகளை இழைப்பதை ஒரு அமைப்புமுறையாகவே (institutionalised injustice) ஆக்கிவைத்திருந்தவர்கள் பார்ப்பனர்கள்.
இதுப்போன்று ஒரு தரப்பு மக்கள் இன்னொரு மக்களுக்கு இழைக்கும் சமூக/அரசியல் அநீதிகள் என்று வந்துவிட்டால், எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பாதிக்கப்படவர்களுக்கு கடந்தக்கால அநீதிக்கான நியாயம்
வழங்கியாகவேண்டும் என்பதுதான் இன்றைய ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி (rule of law) ஆகிய கோட்பாடுகளின் சாராம்சம். இதற்கு இரண்டு வரலாற்றுச் சான்றுகள்:
1. 300 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மை அடிமைப்படுத்தியது என்னவோ தன் தாத்தனுக்கு தாத்தனே என்றாலும், அதற்கு முழுப்பொறுப்பேற்று நாட்டை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டியக் நிர்பந்தம் 1947ல் ஆங்கிலேயனுக்கு வந்தது. அப்படியே செய்தான்.
2. முதலாம் உலகப்போரின் முடிவில் 1919ல் பிரான்சால் திணிக்கப்பட்ட 'வெர்சைல்ஸ் ஒப்பந்தம்' (Versailes treaty) ஜெர்மனிக்கு அநீதியாக இருந்தது என்பதைக் காரணம் காட்டி இரண்டாம் உலகப்போரையே தொடக்கினான் ஹிட்லர்.
மேற்சொன்ன இரண்டும் கடந்தக்காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் அநீதிகளுக்கு எவ்வளவு கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்படும் என்பதற்கான உதாரணங்கள்.
இப்போது இங்கு பார்ப்பனர்களால் 2000ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட அரசியல் அநீதிக்கு வருவோம். இங்கு முதல் உதாரணத்தைப் போல நாட்டை ஒப்படைக்கச் சொல்லவும் முடியாது, இரண்டாவது உதாரணத்தைப் போல போர் தொடுக்கவும் மனமில்லை என்பதனால்தான் அரசியலமைப்பின் அடிப்படையில் போராடி, இட-ஒதுக்கீடு போன்ற கடந்தக்காலச் சமூக 'அநீதிகளை' ஓரளவு களைவதற்கான ஒருசில உரிமைகளைப் பெற்றிருக்கிறோம் திரு.சேகர்.
இதையே நீங்கள் தண்டனையாகக் கருதிப்பொங்குவீர்கள் என்றால், "இழைக்கப்பட்ட அநீதிகளோடு இந்தத் 'தண்டனைகளை' ஒப்பிட்டால், அது தலையைச் சீவிய கொலைக்காரனைத் தலையில் கொட்டி அனுப்பிவிடுவதைப் போல மிக மிக லேசான தண்டனைதான். பொறுத்திடுக!" என்பதைத் தவிர எங்களிடத்தில் வேறு பதில் இல்லை, நண்பரே.
-GANESH BABU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக