வெள்ளி, 23 ஜூன், 2017

ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

ஆம் அவர்கள் (ஆரியர்கள்) குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
ரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில் சில வரலாற்று அணுகுமுறை அற்றோர் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் எழுதிய நூல்கள், வைத்த வாதங்கள் அனைத்தும் வரலாற்று அணுகுமுறையின் தொழில் நுட்ப சொற்களை தவறாக பயன்படுத்தி, குதர்க்கவாதங்களோடு ஆரிய குடியேற்றத்தை மறுத்தன. மாறாக ஆரியர்களே இங்குள்ள பூர்வகுடி மக்கள் என்பதை வலிந்தும் பொய்யாகவும் பேசினர். மோடியின் தலைமையில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் இதை அடிப்படையாக வைத்தே வரலாற்றை மாற்றுகிறார்கள். இன்னும் மோசமாக புராணப் புரட்டுக்களையே அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் பேசுகின்றனர். நாட்டின் பிரதமரே உலக அறிஞர்கள் – அறிவியலாளர்கள் கூட்டத்தில் அதை வெட்கம் கெட்டு பேசுகிறார்.

இதை ஆரம்பத்திலிருந்தே வரலாற்று அறிஞர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். அதற்கு சமீபத்திய வரவாக இந்த மரபணு ஆராய்ச்சி உண்மையை மறுக்க முடியாமல் எடுத்துரைக்கிறது. மற்ற ஆய்வுமுறைகளை விட மரபணு ஆராய்ச்சி இன்னும் துல்லியமானது. கி.மு 2000-ம் வாக்கில் மத்திய ஆசியாவிலிருந்து சமஸ்கிருதத்தை மொழிக் குடும்பத்தை வேராகக் கொண்ட ஆரியர்களின் வருகையை இந்த ஆய்வு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுகிறது. அதே காலத்தில் இங்கு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து போனதும் நடந்திருக்கிறது.
ஆரியர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் மற்ற மக்களும் குடியேறிகள்தான் என்று கட்டுரையாசிரியர் சற்றே நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார். அது உண்மைதான். ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்களே இந்தியாவின் பூர்வகுடிகள். அதன் பிறகு சிந்து சமவெளி நாகரீகத்தை படைத்தோர், கிழக்காசியாவில் இருந்து விவசாயத்தோடு குடியேறிய மக்கள் எல்லாம் ஆரியர் வருகைக்கு வெகு காலம் முன்பே இங்கு குடியேறினார்கள். ஆனால் ஆரியமயமாக்கம் என்பது இங்குள்ள பூர்வகுடிமக்களை விரட்டியது, ஒடுக்கியது, சமஸ்கிருதமயமாக்கம், நிறவெறி, பின்னர் அதுவே வர்ணமாக மாறியது என்று ஒரு பெரும் பார்ப்பனிய அடக்குமுறையோடு தொடர்புடையது.
இன்று இந்த மரபணுக்கள் எல்லாம் கலந்து ஒன்று பிணைந்திருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த ஒன்றிணைவை இன்றைக்கும் பார்ப்பனியம் கேள்விக்குள்ளாக்கி மதம், சாதி, மொழியின் பெயரால் இந்திய உழைக்கும் மக்களை சூத்திரன், பஞ்சமன் என்றே ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறை ஆரியர் வருகையோடு தொடர்புடையது என்பதுதான் முக்கியமானது. “நாங்கள் கருப்பாக இருக்கும் திராவிடர்களோடு சேர்ந்து வாழவில்லையா” என்று தருண் விஜய் கேட்ட கேள்வி அதை வேறு விதத்தில் விளக்குகிறது. இனி இந்துமதவெறியர்கள், ஆரியர்கள்தான் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை மறுத்துப் பேச முடியாது. ஆனால் இந்த வரலாற்று உண்மையை அவர்கள் பாடப்புத்தகங்களில் இருந்து தடை செய்ய முனைவார்கள். உண்மையை வன்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்!
ந்திய வரலாற்றின் மிகவும் நெருடலானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கேள்விக்கான விடை நிதானமாக அதேசமயம் மிக உறுதியாகக் கிடைத்து வருகிறது. தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் தனி வகைப்பட்ட கலாச்சாரத்துடனும் கி.மு 2000 க்கும் கி.மு 1500 -க்கும் இடைப்பட்ட காலத்தில் (அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு) இந்தியாவிற்குள் குடியேறினார்களா என்பதுதான் அந்தக் கேள்வி. அந்த காலகட்டம்தான் சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆம் அவர்கள் குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
மரபணுவியல் ஆராய்ச்சி அளிக்கின்ற இந்த விடை பலருக்கு வியப்பையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடும். ஏனென்றால், சமீபகாலமாக ஆரிய குடியேற்றம் என்ற கருத்தாக்கமே மரபணுவியல் ஆராய்ச்சிகளின் மூலம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற கருத்து பரப்பப்பட்டு வந்தது. இந்தக் கருத்து வலிந்து கூறப்படும் மிகைக் கூற்று என்பது அந்த கருத்தை முன்வைப்பவர்கள்  சுட்டும் மூல ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவனமாக படித்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய ஒன்று.

ஆனால், அப்படிப்பட்ட சந்தேகங்கள் எதற்கும் இடமில்லாமல், தந்தை வழியாக ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் Y-குரோமோசோம்கள் தொடர்பாக இப்போது  வெள்ளம் போல் வந்து சேரும் புதிய தரவுகள் ஆரியக் குடியேற்றத்தை மறுக்கும் வாதங்களை தூள் தூளாக்கிவிட்டன.
வம்சாவழித் தொடர்கள்
சமீப காலம் வரை தாயிடமிருந்து பெண் வாரிசுகளுக்கு கடத்தப்படுகின்ற mtDNA (matrilineal DNA) என்ற தாய்வழி உயிரணுவைப்பற்றிய தகவல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அந்தத் தரவுகள், இந்திய மக்களின் மரபணு தொகுப்பிற்குள் சுமார் 12,500 ஆண்டுகளாக வெளியிலிருந்து வந்த எந்த புதிய மரபணு சேர்க்கையும் நடைபெறவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தற்போது கிடைத்துள்ள புதிய Y-DNA தரவுகளிலிருந்து இந்த 12,500 ஆண்டு காலகட்டத்தில் இந்திய ஆண் வம்சாவழியில் வெளியிலிருந்து வந்த மரபணுக்கள் கலந்திருக்கின்றன என்பதை நிறுவ முடிகிறது. இது ஆரியக் குடியேற்றம் நிகழவில்லை என்று வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும்   தவிடு பொடியாக்கியிருக்கிறது.
தாய்வழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும், தந்தைவழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும் இடையேயான வேறுபாட்டுக்கான காரணம் என்ன என்பது இந்த புதிய விபரங்களின் ஒளியில் வரலாற்றை பரிசீலிக்கும் போது தெளிவாகத் தெரிகிறது. வெண்கல யுகக் குடியேறிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக இருந்திருக்கின்றனர்.  எனவே, தாய்வழி மரபணு தொடர்பான தரவுகளில் இந்தக் குடியேற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மரபணு  கலப்பு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருக்கவில்லை. ஆனால், புதிதாக ஆய்வு செய்யப்பட்ட தந்தை வழி உயிரணு தொடர்பான தரவுகளில் அவை வெளிப்படுகின்றன.
இன்று சுமார் 17.5% இந்திய ஆண்களின் மரபு தொடர்ச்சி, மத்திய ஆசியாவிலும்,  ஐரோப்பாவிலும், தெற்கு ஆசியாவிலும் பரவியிருக்கும் R1a ஹேப்லோகுழுவைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. (ஒரு ஹேப்லோகுழு ஒரு தனிப்பட்ட வம்சா வழியை அடையாளப்படுத்துகின்றது). R1a வம்சாவழி மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி பகுதியிலிருந்து மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் பரவியதென்றும் அவ்வாறு பரவும் வழியில் அது பல்வேறு துணைக்கிளைகளாக பிரிந்ததென்றும் தெரிகிறது.
சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்தியாவிற்குள் ஏற்பட்ட குடியேற்றங்களைப் பற்றிய ஒரு செறிவான கோர்வையான வரலாற்றை சித்தரிக்கும் ஆய்வுக்கட்டுரை மூன்று மாதங்களுக்கு முன்னர் BMC Evolutionary Biology என்ற, அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.
“இந்திய துணைக்கண்டத்தின் மரபணுவியல் கால வரிசை பெருமளவில் ஆண் வழியிலேயே மரபணு கலப்பு ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது” என்ற தலைப்பிலான அந்த ஆங்கில ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் மார்ட்டின் பி.ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு பின்வரும் முடிவுக்கு வந்திருக்கிறது :

சிந்து சமவெளி நாகரீகம்
“வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்து கலந்த  மரபணு உள்ளீடு பெருமளவில் ஆண்கள் வழி வந்திருக்கிறது. இது இந்தோ-ஐரோப்பிய மேய்ச்சல் சமூகம், ஒரு வட்டார அளவிலான தந்தைவழி ஆணாதிக்க சமூகம் என்ற முந்தைய புரிதலுடன் ஒத்துப்போகிறது. மேற்கண்ட மரபணு கலப்பை உருவாக்கிய இந்த குடிபெயர்வு, இதை விட விரிவான இந்தோ-ஐரோப்பிய குடிபெயர்வின் ஒரு பகுதியே. ஐரோப்பிய-ஆசிய கண்டங்கள் எங்கும், 3,500 முதல் 5,000 ஆண்டுகளுக்கிடைபட்ட காலத்தில் நிகழ்ந்த இந்த குடிபெயர்வு காஸ்பியன் பகுதியிலிருந்து தோன்றியிருக்கிறது.”
இந்திய ஆண்களின் உடலில் R1a குழுவைச் சேர்ந்த மரபணுக்கள் பரவலாக காணப்படுவது, இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வெண்கல யுகத்தில் குடியேறியதற்கான ஒரு வலுவான ஆதாரம் என்று பேரா. ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். பேரா. ரிச்சர்ட்ஸ் குழுவினரின் உறுதியான முடிவுகள், அவர்களது சொந்த ஆராய்ச்சியில் கிடைத்த வலுவான ஆதாரங்களை மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளில் உலகெங்கிலும் நடத்தப்பட்ட மரபணுவியல் விஞ்ஞானிகளுடைய ஆய்வுகளில் கிடைத்த தரவுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மரபணுவியலாளரும், பேராசிரியருமான டேவிட் ரைக் தனது முந்தைய ஆய்வுகளில் மிகவும் எச்சரிக்கையாக முடிவுகளை முன் வைத்திருந்தார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டேவிட் ரைக் தலைமையிலான குழுவின் 2009-ம் ஆண்டு நேச்சர் இதழில் வெளியான “இந்திய வரலாற்றை மீண்டும் பொருத்திப் பார்ப்பது” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையாகும்.
இந்த ஆய்வு இந்திய மக்கள்தொகையின் மரபணுவியல் உட்பிரிவை தீர்மானிக்க “வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர்” என்ற கோட்பாட்டை பயன்படுத்தியது. வடஇந்திய மூதாதையர் மத்திய கிழக்கு மக்களுடனும், மத்திய ஆசிய மக்களுடனும் ஐரோப்பியர்களுடனும் மரபணுவியல் ரீதியில் நெருக்கமானவர்கள் என்றும் தென்னிந்திய மூதாதையர் இந்தியாவில் மட்டுமே காணப்பட்டவர்கள் என்றும் அந்த ஆய்வு நிறுவியது. இன்றைய இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான குழுக்களை இந்த இரண்டு மக்கள் பிரிவினரின் கலப்பாக வகைப்படுத்தலாம் என்றும் மேல் சாதி குழுக்களிலும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை பேசுபவர்களிலும் வட இந்திய மூதாதையர் கூறுகள் அதிகமாக உள்ளன என்றும் இந்த ஆய்வு நிறுவியது. இந்த ஆய்வு ஆரிய குடியேற்றத்தை மறுக்கவில்லை. மாறாக வடஇந்திய மூதாதையர்களுக்கும் மத்திய ஆசிய மக்களுக்கும் இடையேயான தொடர்பை சுட்டிக் காட்டுவதன் மூலம் ஆரிய குடியேற்றம் பற்றிய கருதுகோளை வலுப்படுத்தியிருந்தது.
இருப்பினும், இந்த ஆய்வு உருவாக்கிய வடஇந்திய மூதாதையர்  – தென்னிந்திய மூதாதையர் என்ற கோட்பாடு விருப்பம் போல இழுத்துத் திரிக்கப்பட்டு இந்த இரண்டு குழுக்களும், ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறியதாகக் கருதப்படும் 4000-3500 ஆண்டுகளுக்கு வெகு முன்னதாகவே, பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்து விட்டவர்கள் என்றும் வாதிடப்பட்டது.
புதிதாக பெருமளவு தரவுகள் கிடைத்திருக்கும் நிலையில் இப்போது ரைக் என்ன சொல்கிறார் என்று கேட்போம். கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பிப் புல்வெளி பகுதிகளில் தோன்றி பின்னர் ஐரோப்பாவிற்கும் தெற்காசியாவுக்கும் பரவின என்ற கருதுகோளைப் பற்றி பேசும் போது அவர் “மரபணுவியலைப் பொறுத்தவரை ஸ்டெப்பி கோட்பாட்டுக்கு ஆதரவான நிலையே உள்ளது. ஐரோப்பாவில் இன்று வலுவாக காணப்படும் வடக்கு யூரேசிய வம்சாவழி கிழக்கு ஸ்டெப்பியிலிருந்து சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தது என்று நிறுவியிருக்கிறோம்” என்று சொன்னார்.
இந்தியாவைப் பொறுத்தவரை “2000 முதல் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் ஒரு சிக்கலான மக்கள் தொகை கலப்பு நடந்திருக்கிறது. பலவகை சமூகங்களைப் பற்றி பேசும் உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலத்துடன் இது பொருந்துகிறது” என்கிறார் அவர்.
இவ்வாறு, வெண்கலயுகத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் குடியேறினார்கள் என்ற கூற்றை எதிர்க்கும் வாதங்கள் ஒவ்வொன்றும் பொய்ப்பிக்கப்பட்டு விட்டன.
வாதங்களை தொகுத்துப் பார்க்கலாம்
  1. தாய்வழி உயிரணுக்களில் அதற்கான தரவுகள் இல்லை என்பதால் 12,500 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் வெளியிலிருந்து எந்த மரபணு கலப்பும் நிகழவில்லை என்ற வாதம் தந்தைவழி உயிரணு தரவுகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. தந்தைவழி உயிரணு தரவுகள் இன்றைக்கு 4,000 ஆண்டு முதல் 5,000 ஆண்டு வரை முந்தைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பெருமளவு வெளியிலிருந்து மரபணு கலப்பு நடந்திருக்கிறது என்று காட்டுகின்றன. குறிப்பாக இந்தியாவில் 17.5% ஆண் வம்சாவழியினரில் காணப்படும் R1a இந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்குள் கலந்திருக்கிறது. தாய்வழி உயிரணு தரவுகளில் இதற்கான ஆதாரங்கள் காணப்படாமல் இருப்பதற்கான காரணம், வெண்கல யுகத்தின் குடியேற்றங்கள் பெருமளவு ஆண்களால் நிகழ்ந்திருக்கின்றன என்பதேயாகும்.
  2. R1a வம்சாவழி மற்ற பகுதிகளை விட இந்தியாவில் அதிக பன்முகத்தன்மை கொண்டிருப்பதால், அது இந்தியாவில் தோன்றி பிற இடங்களுக்கு பரவியிருக்க வேண்டும் என்ற வாதமும் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால், R1a ஹேப்லோ குழுக்களைப் பற்றி கடந்த வருடம் வெளியிடப்பட்ட உலகளாவிய மிகப்பெரிய ஒரு ஆய்வு, இந்தியாவின் R1a வம்சாவழிகள் R1a-Z93 ன் 3 துணைக் குழுக்களை மட்டுமே சேர்ந்தவை என்றும் அவை 4000-4500 ஆண்டுகளுக்கு முந்தையவை மட்டுமே என்றும் நிறுவியிருக்கிறது.
  3. இந்தியாவில் வடஇந்திய மூதாதையர்கள், தென்இந்திய மூதாதையர்கள் என்ற இரண்டு புராதன குழுக்கள் இருந்தன என்ற கோட்பாட்டின் படி ஆரியர்கள் குடியேறியதாக சொல்லப்படும் காலத்துக்கு வெகு முன்னதாகவே அந்த இரண்டு குழுக்களும் இந்தியாவுக்குள் வந்து விட்டன என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானது. ஏனென்றால் அந்தக் கோட்பாட்டை முன் வைத்த ஆய்வே வடஇந்திய மூதாதையர் குழு என்று கூறப்படுவதே, ஆரிய குடியேற்றம் உட்பட பல குடியேற்றங்களின் கலப்புதான் என்று கூறி எச்சரித்திருந்தது.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் போது நாம் இன்னும் இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, வெவ்வேறு துறைகளில் செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகள் கி.மு 2000 இந்திய வரலாற்றின் முக்கிய காலகட்டம் என்ற முடிவுக்கு வருகின்றன.
அ. பிரியா மூர்ஜானி குழுவின் ஆய்வின் படி, அந்த காலகட்டத்தில்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களினங்களின் கலப்பு பரந்த அளவில் தொடங்கியது. அந்தமான் தீவுகளின் ஒங்கே மக்கள் மட்டும்தான் இந்த கொந்தளிப்பான காலகட்டத்தினால் பாதிக்கப்படாத ஒரே குழுவாகும்.
ஆ. 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட டேவிட் போஸ்னிக் குழுவின் தந்தை வழி மரபணு ஆய்வின் படி, கி.மு 2000 வாக்கில்தான், இந்திய மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் R1a-வின் துணைக்குழுவான Z93 “மிகவும் கவனிக்கத்தக்க வகையில்” பிளவுபட ஆரம்பித்திருக்கிறது. இது “வேகமான வளர்ச்சியையும் பரவலையும்” குறிக்கிறது.
இ. கடைசியாக, நீண்ட காலமாகவே நிரூபிக்கப்பட்டு விட்ட தொல்லியல் ஆய்வுகள், கி.மு. 2000 வாக்கில்தான் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடைய தொடங்கியது என்று நிறுவியுள்ளன.
இந்த எல்லா தகவல்களையும் பக்கச்சார்பில்லாமல் பார்க்கும் போது, இந்திய வரலாற்றின் புதிரான கால கட்டத்தை புரிந்து கொள்வதற்கான தகவல்களும் கிடைக்காமலிருந்த இணைப்புகளும் கிடைத்துவிட்டன என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இரண்டாவதாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆய்வுகளில் பலவற்றின், நோக்கங்களும் மாதிரிகளும் ஆராய்ச்சி முறையியலும் உலகம் முழுவதற்குமானவை. எடுத்துக்காட்டாக, R1a Z93 வம்சாவழியின் சிதறலுக்கான காலத்தை 4000-4500 என்று கணித்த போஸ்னிக் ஆய்வு, பெரிய அளவிலான தந்தைவழி உயிரணு குடியேற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை, இந்தியாவுக்காக மட்டும் நிகழ்த்தவில்லை. மற்ற நான்கு கண்ட மக்கள் மத்தியிலும் நிகழ்த்தியது. அதன் மூலம் அமெரிக்காவில் 15000 ஆண்டுகளுக்கு முன் நடந்த Q1a-M3 ஹேப்லோகுழுவின் குடியேற்றத்தை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது. இது அமெரிக்கக் கண்டத்தின் ஆரம்ப கால குடியேற்றத்தைப் பற்றி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலத்துடன் ஒத்துப்போகிறது.
ஆகையால் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியேற்றங்கள் பற்றிய புதிர்களுக்கு சமீபத்திய இந்த ஆய்வுகள் மூலம் விடை கிடைத்துள்ளன. இந்த உலகளாவிய குடியேற்றங்கள் பற்றிய சித்திரம் மேலும் மேலும் முழுமை அடையும் போது, குடிபெயர்வுகள் பற்றிய இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ஒருமித்த கருத்தை (அறிவியலற்ற உள்நோக்கத்துடன் – மொர்) மறுப்பவர்களின் முயற்சி கடினமாகிவிடும்.
இது வரை, நாம் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்களின் குடியேற்றங்களை மட்டுமே பார்த்தோம். ஏனென்றால் அதுதான் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வாக இருந்திருக்கிறது.
ஆனால் இதை விட விரிவான சித்திரத்தை நாம் காணத் தவறக் கூடாது. R1a வம்சாவழி 17.5% இந்திய ஆண்களிலும், அதை விடக் குறைவான அளவு பெண்களிலும் மட்டுமே காணப்படுகிறது.
உண்மையில், அறுதிப் பெரும்பான்மையான இந்தியர்கள் பல்வேறு குடியேற்றங்களிலிருந்தான மூதாதையரை கொண்டிருக்கிறார்கள்.
  1. 55,000 – 65,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் இருந்த வந்த ஆதிமுதல் குடியேற்றம்.
  2. கி.மு 10,000 ஆண்டுக்கு பிறகு மேற்காசியாவிலிருந்து பல அலைகளாக நிகழ்ந்த விவசாயக் குடியேற்றங்கள்
  3. காலம் இன்னமும் கணிக்கப்படாத கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக் மொழி பேசும் முண்டா, திபெத்தோ-பர்மன் பேசும் கரோ போன்ற இனத்தவர்களின் குடியேற்றம்
இப்போது தெள்ளத்தெளிவாகி விட்டது என்னவென்றால் நாம் ஒரு மூலத்தை அல்ல, பல மூலங்களைக் கொண்ட, அவற்றின் கலாச்சார, பழக்கவழக்க, வம்சாவழி, குடியேற்ற வரலாறு போன்றவற்றை ஏற்றுக்கொண்ட நாகரிகம் ஆவோம்.
  • இந்தியாவை முதலில் கண்டுபிடித்து குடியேறிய நால்திசையும் முன்னேறிச் சென்ற, பயமறியா முன்னோடிகளான, ஆப்ரிக்காவிலிருந்து வந்த மக்கள் நமது நாட்டின் மக்கட் தொகையின் அடித்தளப்பாறையாக இன்னும் இருக்கிறார்கள்.
  • பிறகு விவசாய தொழில்நுட்பத்துடன் வந்த மக்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை படைத்தனர். அவர்களின் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் இன்றும் நம்மை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
  • பிறகு நெல் பயிரிடுதலையும் அது தொடர்பான கலாச்சாரத்தையும் கிழக்காசியாவிலிருந்து கொண்டுவந்த மக்கள் இவர்களுடன் இணைந்தார்கள்.
  • பிறகு சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் அதை ஒட்டிய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்துடனும் வந்து நமது சமூகத்தை அடிப்படையிலேயே உருமாற்றிய மக்களின் குடியேற்றம் நடந்தது.
  • இன்னும் பிற்காலத்தில் வியாபாரத்திற்காகவோ நாடுபிடிப்பதற்காகவோ வந்து, இங்கேயே தங்கிவிடுவது என்ற முடிவு செய்த மக்களின் கலப்பும் நிகழ்ந்திருக்கிறது.
இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இன்று இந்திய நாகரிகம் என்று நம்மால் அழைக்கப்படுவதை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாம் எல்லோருமே குடியேறிகள் தான்.   வினவு
– டோனி ஜோசஃப் (Tony Joseph), நன்றி: The Hindu
தமிழாக்கம் – நேசன்

தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த டோனி ஜோசப் எழுதிய கட்டுரை சுருக்கப்பட்டு, மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
மூலக்கட்டுரை : How genetics is settling the Aryan migration debate
ஆசிரியர் குறிப்பு : டோனி ஜோசஃப் ஒரு எழுத்தாளர் BusinessWorld ன் முன்னாளைய ஆசிரியர்.
ஆசிரியரின் டிவிட்டர் பக்கம் : @tjoseph0010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக