செவ்வாய், 27 ஜூன், 2017

கழனியூரன் மறைந்தார் .. கதைசொல்லி இதழின் ஆசிரியர் ..மண்ணின் கதைகளை தேடி தேடி

கழனியூரன்: மறைந்து போன கதைக் கருவூலம்!
கதைசொல்லி இதழின் பொறுப்பாசிரியரும், கரிசல்காட்டு கதைசொல்லியுமான கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் இன்று (27.6.2017) காலை 10.50 மணியளவில் சென்னையில் மறைந்தார்.
1954-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கழனியூரன். ஒரு எழுத்தாளர் எழுதும் கதைகள், தான் பார்த்த காட்சிகளில் இருந்தும் அனுபவங்களிலிருந்தும் கற்பனையிலிருந்தும் தோன்றுகின்றன. இந்தவகையான படைப்புகளை கழனியூரன் செய்திருந்தாலும் தமிழ்ச் சமூகத்திற்கு அவர் செய்த மிகப்பெரிய பணி, இந்த மண்ணின் அதன் மக்களின் கதைகளை சேகரித்ததே ஆகும். தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்த கதைகளை எளிதாக உதறிவிட்டு தொலைக்காட்சி பெட்டிக்கும் அலைபேசிக்கும் செவிகொடுக்கும் இந்த டிஜிட்டல் உலகில் அதை கவனமுடன் சேகரித்தவர் கழனியூரன். தமிழகம் முழுவதும் இவர் சேகரித்த ஆயிரக்கணக்கான கதைகள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள்.

கழனியூரன் என்றாலே இலக்கிய உலகில் உடனே நினைவுக்கு வருபவர் கி.ரா தான். இலக்கியவாதிகளால் அருவருப்பாக பார்க்கப்பட்ட, மக்களிடம் புழகத்தில் இருந்த பாலியல் கதைகளை கி.ராவோடு சேர்ந்து மறைவாய் சொன்ன கதைகள் என்ற தலைப்பில் சேகரித்தார். கி.ராவின் ஆஸ்தான சீடராகவே கழனியூரன் இருந்துள்ளார். தாய்வேர், கதைசொல்லியின் கதை, நெல்லை நாடோடிக் கதைகள், மண் மணக்கும் மனுஷங்க, நாட்டுப்புற நீதிக்கதைகள், பன்னாட்டு சிறுவர் நாடோடிக் கதைகள், நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள், வேரடி மண்வாசம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
தற்போது “கி.ரா 95” நிகழ்வுக்கான பணிகளை செய்துவந்த கழனியூரனின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பு.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை சந்தோசபுரத்தில் தனது மகன் வீட்டில் இன்று காலை அன்றாடப் பணிகளை செய்துகொண்டிருந்தார். திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டில் இருந்து அவரை வெளியே அழைத்து வரும்போதே நாடித்துடிப்பு குறைந்து அவரால் நடக்க இயலவில்லை. சுமார் 10.50 மணியளவில் மருத்துவமனையில் பரிசோதனை செய்கையில் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நாளை (ஜூன் 28) பிறபகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக