வெள்ளி, 9 ஜூன், 2017

கவிஞர் தாமரை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் மீது சேறு வாரி ... ... யாரை மகிழ்விக்கவோ?

subavee.com:
:"சுபவீயை வெளுத்த தாமரை" என்று தலைப்பிட்டு மகிழ்ந்துள்ளது இவ்வாரம் வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர்(02.06.2017). சென்ற வாரமே சமூக வலைத்தளங்களில், கவிஞர் தாமரையின் இந்தப் பதிவேற்றத்தை நான் பார்த்தேன். அவரே எழுதியிருப்பாரா அல்லது அவரது பெயரில் யாரேனும் (Fake id) பதிவிட்டிருப்பார்களா என்ற ஐயத்தை நண்பர்கள் சிலர் எழுப்பினர். எப்படியிருந்தாலும் அது குறித்துப் பெரிதாகக் கவலை கொள்ள வேண்டாம் என்று தோன்றியது. அதனால் அதனை அமைதியாகக் கடந்து போய்விட்டேன். இப்போது மீண்டும் அதனைப் பெரிதுபடுத்தி, 4 பக்கங்கள் செலவிட்டு, ரிப்போட்டர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் 2010ஆம் ஆண்டு சென்னை வந்தபோது நடந்த விவாதங்களை, 7 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் எழுதி ஒரு சர்ச்சையை இப்போது நான் கிளப்பி இருப்பதாக அந்த ஏடு சொல்கிறது. அந்தப் பதிவும் 7 ஆண்டுகளுக்கு முன்னால் நான் பதிவேற்றியது. இந்த உண்மையை குமுதம் ரிப்போர்ட்டர் ஏனோ மறைக்கிறது அல்லது திரிக்கிறது.


இது குறித்துப் பேச என்னைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, 'ஒரு மோசமான சண்டைக்கு சுபவீ தயாரில்லை என்று மட்டும் சொன்னார்களாம். யாரென்று தெரியவில்லை. போகட்டும், தாமரையின் குற்றச்சாற்றுகளுக்கு வருவோம்.

தமிழர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் என்று ஒரு நீண்ட பட்டியலை நான் வைத்திருக்கிறேனாம். அதனைத் தோழர் தியாகுவிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறேனாம். இதனைக் கழகத்தின் கடைசித் தொண்டன் கூட நம்ப மாட்டான். பிறகு இது குறித்து நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்? மற்றபடி நான் ஒரு பொய்யர் என்றும், யோக்கியன் போல நடிக்கிறவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும். என்னைப் பற்றிய அவருடைய பார்வை அவ்வாறு இருக்குமானால் அதனை வெளியிட அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. நான் என்னை மெய்ப்பித்துக் கொண்டு யாரிடமும் சான்றிதழ் வாங்க வேண்டிய தேவை இல்லை.

நண்பர் தாமரை ஒரு நல்ல கவிஞர் (இதனையும் பொய் என்று மறுத்துவிட மாட்டார் என்று நினைக்கிறேன்). அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.அதனை ஆராய்ந்து கொண்டிருக்கவும் எனக்கு நேரமில்லை. இது குறித்து எந்த விவாதத்தையும் இனி தொடரவும் நான் விரும்பவில்லை. மனசாட்சி உறுத்தினால் தோழர் தியாகு நடந்ததைச் சொல்லட்டும். குமுதம் ரிப்போர்ட்டர் உள்பட அனைவருக்கும் நன்றி! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக