ஞாயிறு, 18 ஜூன், 2017

ஜெயக்குமார் :ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது: ஜெயக்குமார்
மின்னம்பலம் : ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்த ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜூன் 17-ஆம் தேதி(நேற்று) ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “குதிரைப் பேரத்தின் பேரில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது, என்பதை எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ பதிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஜூன் 18-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், முதலமைச்சர் கனவு ஸ்டாலினை தூங்கவிடவில்லை, அதனால் தூங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே, சிறிய இடைவெளி கிடைத்தாலும் முதல்வர் ஆகிவிடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதால் ஸ்டாலினின் கனவு நிச்சயம் பலிக்காது.
அதிமுகவில் உள்ள பிரச்னை என்பது அண்ணன், தம்பி பிரச்னை போன்றது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திமுகவினர் வன்முறையை உருவாக்கி வெளிநடப்பு செய்தனர். மேலும், தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி அரசைக் கலைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக