புதன், 28 ஜூன், 2017

நீட் தேர்வு ... கல்விகொலை .. நீதி கேட்டது மதுரைப் பெண், பற்றி எரியும் !

சிவசங்கர் எஸ்.எஸ்: நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய போது, அதை பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஏகடியம் செய்தார்கள். ஏனைய இந்தியா ஏற்றுக் கொள்ளும் போது, தமிழகத்திற்கு மாத்திரம். இன்று நீட் தேர்வு முடிவுகள் அதற்கு பதில் சொல்லி விட்டது. முதல் 25 இடத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வரவில்லை என்று செய்திகள் வருகின்றன.
+2 தேர்வில், 1150 மதிப்பெண் எடுத்தவர்கள் கூட நீட்டில் வெற்றி பெறவில்லை, தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 40 % பேரே தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று நேற்றில் இருந்தே தமிழகம் அலையடிக்கிறது.
நீட் தேர்வு எழுதியவர்களில் 2% பேர் தான் மத்தியப் பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், மீதமுள்ளவர்கள் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதற்காகவாவது, இந்த ஆண்டு மட்டுமாவது நீட் வேண்டாம் என ஒரு சாரார் குரல் கொடுத்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை உறுதிப் படுத்தி, தமிழக அரசே புதிதாக ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85%, மத்தியப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 15% என இடத்தை பாகம் பிரித்திருக்கிறது.
இது சரி. மாநிலப் பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப் பெற போகிறது என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது.

எந்தக் கேள்விக்கும் நேராக பதில் சொல்லாத ஒரு மாநில அரசாங்கம், பதிலே சொல்லாத மத்திய அரசாங்கம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் . ஒரே மாநிலத்தில் ஆங்கிலத்தில் ஒரு கேள்வித்தாள், உள்ளூர் மொழியில் வேறு கேள்வித்தாள். அதற்கு தமிழகமே சாட்சி. இதில் இரண்டுமே கடுமையான கேள்வித்தாள்கள்.
குஜராத்தில் எளிதான கேள்வித்தாள் என நீட் தேர்வு குளறுபடிகளை சுட்டிக்காட்டி மதுரையை சேர்ந்த மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசிடம் பதில் கேள்வி கேட்டது.
பதறிப் போன மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரியது. உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உடனே உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் பணிந்தது.
அத்தோடு நில்லாமல் உடனே முடிவை வெளியிட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஒரு வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே, விசாரணையின்றி தீர்ப்பு வழங்கியுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
இப்போது நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. நீதி கேட்ட பெண்ணின் குரல் காற்றோடு கலந்து விட்டது. அந்தப் பெண்ணின் குரல் போல தான் தமிழகத்தின் குரலும் கேட்க நாதியற்றுப் போயுள்ளது.
இன்னொருபுறம் தேர்வுத்தாள்களில் இந்த கூத்துகள் என்றால், தேர்வு எப்படி நடைபெற்றிருக்கும் என்ற அய்யமும் எழுகிறது. காரணம், இவர்களது வரலாறு அப்படி.
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு நான்காவது முறையாக தொடர்ந்து ஆள்கிறது. அங்கு நடைபெற்ற "வியாபம் ஊழல்" உலகப் பிரசித்தி பெற்றது. வியாபம் என்பது அந்த மாநிலத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகள், பணிக்கான தேர்வுகளுக்கான அரசு அமைப்பு. மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள்பட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் மிக அதிகம்.
2000 ஆண்டு துவங்கியது 2009ல் பெரும் பிரச்சினையானது. காவல்துறை வழக்கு தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தது. வழக்கு தேங்கியது. பிறகு நீதிமன்றம் தலையிட்டு சூடுபிடித்தது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என வழக்கோடு தொடர்புடையோர் கிட்டத்தட்ட 50 பேர் மர்மமான முறையில் மரணமுற்றுள்ளனர். அதற்கும் வழக்குப் பதியாமல் காவல்துறை ஏமாற்றியதும் நடந்தது.
2015 ஜூன் வரை 2000 பேருக்கு கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தும் இதில் திருப்திப் படாத உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை சி.பி.ஐ இடம் ஒப்படைத்துள்ளது. இது நுழைவுத் தேர்வு நடத்தியதற்கு, உச்சநீதிமன்றத்திடம் பா.ஜ.க பெற்றுள்ள தகுதிச் சான்றிதழ்.
இதை விட நம் தமிழ்நாட்டில் மத்திய பா.ஜ.க அரசு நடத்திய தேர்வின் கதை சிறப்பு. மூன்று மாதங்களுக்கு முன் மத்திய அரசின் தபால் துறை அஞ்சலக ஊழியர்களுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் பணி என்பதால் தமிழ் தெரிவது அவசியம். அதற்கு 25 மதிப்பெண்கள். தேர்வு முடிவு வந்தது. 30 க்கு மேற்பட்ட கோட்டங்களிலும் தேர்வு பெற்றவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். சந்தேகப்பட்ட நம்மவர்கள் அதில் உள்ளவர்கள் இருவருக்கு அலைபேசியில் பேச ஒருவருக்கும் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை.
முழுவதும் விசாரிக்க எல்லாமே கோல்மால் எனத் தெரிய வந்தது. புகார் கொடுத்தார்கள், அரசு செவிசாய்க்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு, விசாரித்து உண்மை வெளிவந்துவிட்டது. இப்போது அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு நடந்துள்ளது ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு மோடியின் அரசு தான் பொறுப்பு.
வியாபம், தபால்துறை தேர்வுகள் ஒரு அடையாளம். பா.ஜ.க தேர்வை எப்படி நம்புவது என்பதும் இதனால் முக்கியக் கேள்வி.
அடிப்படையாக மாநில அரசின் பட்டியலான கல்வியில் மத்திய அரசு தலையிடுவதே தவறு. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.
இது வெறும் தேர்வெழுதிய மாணவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. மக்களின் சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இது அரசின் சுகாதாரத் துறையை நொறுக்கி, கார்ப்பரேட்கள் கையில் கொடுக்கும் நடவடிக்கை.
பதில் சொல்ல வேண்டிய பிரதமர் மோடி பெருமான் எந்த நாட்டில் இருக்கிறாரோ? என்ன விவாதத்தில் இருக்கிறாரோ ?
தமிழக மாணவர்கள் எக்கேடு கேட்டால் அவருக்கு என்ன கவலை ?
# நீதி கேட்டது மதுரைப் பெண், பற்றி எரியும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக