வியாழன், 8 ஜூன், 2017

நெட்பிளிக்ஸ்.. நிறுவனத்தின் திரைப்படங்கள் உலக திரை விநியோக புரட்சிக்கு வழி ....?

மின்னம்பலம் : இந்தியாவில் ரிலீஸாகும் பெரும்பான்மையான திரைப்படங்கள் டி.டி.எச் மற்றும் இணையதளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. படங்களுக்கென தனியாக சேனல்கள் ஒதுக்கப்பட்டு, அவை 75 ரூபாய், 100 ரூபாய் போன்ற விலைகளில் டி.டி.எச்-களில் குடும்பத்துடன் பார்க்கும் வசதியைக் கொடுக்கின்றன. அமீர் கானின் அத்தனைத் திரைப்படங்களையும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அடுத்ததாக வெளியாகும் Secret Superstar மற்றும் Thugs of Hindostan ஆகிய திரைப்படங்களின் இணையதள வெளியீடு உரிமையையும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. தியேட்டருக்கு மட்டுமே சென்று திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலையை மாற்ற உருவான நெட்ஃபிலிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு, காலம் காலமாக தியேட்டர்களை நடத்தி வருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இந்நிறுவனங்கள் தங்களுக்கான திரைப்படங்களை தாங்களே தயாரிக்கத் தொடங்கின. வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட நிறுவனங்கள் தாங்களே சேனல் தொடங்கி தங்களது திரைப்படங்களை ஒளிபரப்பிக் கொள்ளத் தொடங்கியதால் HBO போன்ற சேனல்கள் கேம் ஆஃப் திரோன்ஸ் ஆகிய நாடகங்களை உருவாக்கினார்கள். இதன் டிஜிட்டல் உருவமாக உருவானவைதான் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற டிஜிட்டல் டெலிவிஷன் சேனல்கள் என்றாலும் அவர்களது படைப்புகள் சர்வதேச தரத்தில் இருந்தன. உலக சினிமாவின் முக்கியமான சந்தைகளான கான் (Cannes) உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொண்டு மற்ற படங்களுக்குக் கடினமான போட்டியை உருவாக்கின. தமிழ்நாட்டில் கமல்ஹாசனுக்கு எப்படி நெருக்கடியை உருவாக்கினார்களோ, அதேபோல நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் டெலிவிஷன் நிறுவனங்களுக்கும் உலக சந்தையில் இப்போது கட்டம் கட்டப்படுகிறது.

மே மாதத்தின் இறுதியில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கான் (Cannes) விழாவில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரித்த இரண்டு படங்கள் திரையிடப்பட்டன. தென் கொரியத் திரைப்படமான பாங் ஜூன் ஹோவின் ‘ஓக்ஜா’ மற்றும் நோஹாபௌம்பக்கின் The Meyerowitz Stories ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையைப்பற்றிப் பார்ப்பதற்குமுன் சர்ச்சைகளின் பிறப்பிடமான அல்லது சர்ச்சைகளால் பிறந்த கான் (Cannes) விழா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
70ஆவது கான் விழா இந்த வருடம் மிகச்சிறப்புடன் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஆனால், உண்மையில் கான் விழாவுக்கு வயது 78. முதல் கான் விழா நடைபெற்றது 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி. கான் விழா என்ற ஒன்று தொடங்கப்பட்டதற்குக் காரணம் நாஜிக்கள். ஆஸ்கருக்கு அடுத்தபடியாக 1930-களில் புகழ்பெற்றிருந்தது வெனீஸ் திரைப்பட விழா. இத்தாலி நாட்டின் செல்வச்செழிப்பை பறைசாற்றும் விதத்தில் நடந்துகொண்டிருந்த வெனீஸ் திரைப்படவிழாவில் திறமையையும், கலையையும் தாண்டி அரசியலும், பணமும் விளையாடியது. அரசியல் என்பதைக்கூட தீர விளக்கினால் நாஜிக்களைப் பெருமைப்படுத்தும் அல்லது அவர்களுக்கு ஆகாதவர்களைப் பகடி செய்யும் சினிமாக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. சிறந்த இத்தாலிய திரைப்படம், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற இரண்டு வகைகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இத்தாலிய மக்களை மகிழ்விப்பதற்காகவும், நாஜிக்களை மகிழ்வடையச் செய்து லாபம் சம்பாதிக்க மற்ற நாடுகளினால் உருவாக்கப்படும் படங்களுக்கு மட்டும் அங்கீகாரம் கிடைத்தபோது பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் பிலிப்ஸ் எர்லாங்கர், திரைப்பட விமர்சகர் ரெனே ஜீனே மற்றும் பிரான்ஸின் தேசிய கலை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஜேன் சாய் ஆகியோர் வெகுண்டெழுந்தனர். ஜெர்மனியையும், இத்தாலியையும் பெருமைப்படுத்தும் வெனீஸ் திரைப்பட விழா எப்படி உலகத் திரைப்பட விழாவாக இருக்க முடியும் என்று அவர்கள் மனதில் எழுந்த கேள்வியின் பதிலாக பிரான்ஸில் 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி, ‘The Hunchback of Notre Dame' படத்தின் திரையிடலுடன் FESTIVAL INTERNATIONAL DU FILM என்றப் பெயருடன் முதல் கான் விழா தொடங்கியது. ஆனால், இந்தத் திரைப்படத்தை ஒருமுறை திரையிட்டதும் விழா ஏற்பாட்டாளர்களால் அது நிறுத்தப்பட்டது. காரணம், ஹிட்லர் போலாந்தின்மீது படையெடுத்து போருக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

நாஜிக்களின் சர்வாதிகாரத்துக்குப் பதில் சொல்ல கலைஞர்களின் கூட்டுமுயற்சியால் FESTIVAL INTERNATIONAL DU FILM உருவானதுபோல, ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு பதில் சொல்ல வல்லரசு நாடுகள் ஒன்றுசேர்ந்து ஹிட்லரை இரண்டாம் உலகப்போரில் எதிர்த்தார்கள். அந்தப்போர் முடிவுக்கு வந்தபிறகு மீண்டும் புதுமையுடன் 1946ஆம் ஆண்டு பிரான்ஸில் முதல் கான் விழா நடைபெற்றது. அந்தத் திரைப்பட விழாவில்தான் கிளாசிக் திரைப்படங்களாக இன்று உலக சினிமா ரசிகர்களின் பட்டியலில் இருக்கும் ராபர்டோ ரொஸெலினியின் பாசிசத்துக்கு எதிரான “ரோம், ஓப்பன் சிட்டி” (Rome Open City) திரைப்படமும், அல்ஃபெர்ட் ஹிட்ச்காக்கின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான “நொடோரியஸ்”( Notorious) திரைப்படமும் திரையிடப்பட்டன.
அதன்பிறகு கான் விழா சிறப்பாகவே நடைபெற்று வந்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். எல்லா நாட்டு ரசிகர்களையும்போல பிரான்ஸ் நாட்டின் ரசிகர்களும் ஹாலிவுட்டின் கமெர்ஷியல் படங்களுக்குத்தான் அப்போது கைதட்டினார்கள். 70 வருட கால ஓட்டம்தான் இப்போது கலை, கலாசாரம், சமூக நீதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அவர்கள் வரவேற்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் 1959ஆம் ஆண்டில் பிரான்ஸின் கலாசார அமைச்சராக இருந்த ஆண்ட்ரூ மல்ராக்ஸ்.

ஆண்ட்ரூ மல்ராக்ஸின் அறிவுரையின் பேரில்தான் கான் விழாவில் Marche Du Film என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருக்கும் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சந்தித்துக்கொள்ளும் இடமாகவும், கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு பல நல்ல படங்களை ஒன்றுசேர்ந்து எடுக்கும் இடமாகவும் Marche Du Film இருந்தது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், இவர்தான் ஹீரோயின் என்று அறிவிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சங்கமித்ராவின் முன்னாள் ஹீரோயின் ஸ்ருதிஹாசன், கான் விழாவிலிருந்து படக்குழு திரும்பியதும் மாற்றப்பட்டதைக் குறிப்பிடலாம். இந்த Marche Du Film-இன் வெற்றி என்பது பின்னாளில் தொடங்கப்பட்ட Nouvelle Vague மூலம் தெரியவந்தது. Nouvelle Vague என்ப்படும் French New Wave பிரிவில் கமெர்ஷியல் அல்லாத படங்கள் திரையிடப்பட்டன. சினிமாவை எதற்கான மீடியமாகப் பயன்படுத்த வேண்டும் என இளைஞர்கள் காட்டினார்கள். இவர்களில் முக்கியமானவர் Francois Truffaut. இவரது The 400 Blows திரைப்படம் Nouvelle Vague மூலமாகத் திரையிடப்பட்டு அவருக்குச் சிறந்த இயக்குநருக்கான விருதை கான் விழாவில் வாங்கிக்கொடுத்தது. ஆனால், இதே Francois Truffaut ஒரு வருடத்துக்கு முன்பு ஊக்குவிக்கும் வகையில் உருவாகும் இளைஞர்களின் சொந்தக்கதைகளை மையப்படுத்தும் படங்களுக்கு கான் விழாவில் இடமில்லை என்று விமர்சித்ததால் தடை செய்யப்பட்டவர். அவரது விமர்சனம் சரியாக இருந்ததால், அவர் விமர்சித்த பிரிவு ஒன்றை உருவாக்கி அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தது கான் விழா நிர்வாகம்.

அதன்பின் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கான் திரைப்பட விழா நடைபெற்றது. வியட்நாம் போரின்போதும், ஐரோப்பாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்களும், தொழிலாளர்களும் ஒன்று திரண்டபோதும் கான் விழாவைச் சீக்கிரமே முடித்து அவர்களுக்கு ஆதரவளித்தார்கள். 1978இல் கான் விழா மேடைக்கு கீழே டேனிஷ் இயக்குநர் லார்ஸ் வாட் டிரையர் வெடிகுண்டு வைத்தபோதும் கான் நிர்வாகம் பதறியது. பிறகு, அந்த இயக்குநர் ஹிட்லர் ஆதரவாளர் என்று தெரியவந்ததும் எவ்வித அசம்பாவிதமும் இல்லாத வகையில் பத்து அடுக்கு பாதுகாப்புகளுடன் கான் விழாவை நடத்தி வருகின்றனர். ஆனால், இப்போது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இரண்டு படங்களை திரையிட்டதால், பிரான்ஸின் National Federation of France Cinemas என்ற தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அச்சுறுத்தலின்மூலம் ஆட்டம்கண்டிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் அரசாங்கத்தினரும், கான் விழா நிர்வாகத்தினரும் இந்தப் பிரச்னையை ஆய்வு செய்வதற்கு முன்பே ஹாலிவுட் பத்திரிகை ஊடகங்கள் தீர்ப்பு எழுதி முடித்துவிட்டனர். பிரான்ஸ் நாட்டின் சட்டப்படி, ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் இணையதளங்களில் வெளியிடப்பட வேண்டும். எனவே, கான் விழாவில் திரையிட்டு பிரான்ஸ் நாட்டின் தியேட்டர்களில் ரிலீஸ் செய்து மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் நெட்ஃபிலிக்ஸ் தனது திரைப்படங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என அமெரிக்க ஊடகங்களான ஹாலிவுட் ரிப்போர்ட்டர், வெரைட்டி போன்றவை கூறியிருக்கின்றன. ஆனால், கான் திரைப்பட விழாவின் வரலாறு, சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சியிலிருந்து கான் விழாவைத் தடுக்கும்போதெல்லாம் அங்கு சினிமாவுக்கான புதியதளம் உருவாக்கப்பட்டு அந்த தளம் மேலும் பல்வேறு புதிய யோசனைகளுக்கும், சினிமாவின் வளர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறதே தவிர யாருக்கும் அடிபணிந்து போனது கிடையாது. இந்தப் பிரச்னையைப் பற்றி சொல்லிவிட்டு, கான் விழாவில் கமலின் மருதநாயகம் போஸ்டரை வைத்திருந்த தகவலைச் சொன்னபோது, எல்லாம் அவரோட ராசி என்று விளையாட்டாக ஒரு நண்பர் சொன்னார். யாருக்குத் தெரியும், அவரது ராசி மருதநாயகம் திரைப்படமேகூட கான் விழா இந்தப் பிரச்னையில் எடுக்கும் முடிவில் உருவாகும் புதிய முயற்சியில் முதல் ஆளாய் நிற்கலாம். அதற்கான அத்தனைத் தகுதியும் கமலிடம் உண்டு.
- சிவா
குறிப்பு: கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் திரைப்படம் மற்றும் ஊடக ஆய்வின் பேராசிரியர் டேவிட் ஸ்காட் டிஃப்ரியண்டின் The Conversation-க்கு எழுதிய தரவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக