வெள்ளி, 16 ஜூன், 2017

கோமாதாவைக் கொல்ல அன்று வேள்வி, இன்று கோசாலை !

கோமாதாவைக் கொல்லக்கூடாது” என்பது உண்மையிலேயே பா.ஜ.க.-வின் கொள்கையாக இருக்குமானால், அவர்கள் தடை செய்யவேண்டியது மாட்டு விற்பனையை அல்ல, பால் விற்பனையைத்தான். கறவை வற்றிப்போன மாடுகளை வெட்டுக்கு விற்கிறார்கள் விவசாயிகள். கூடாதென்றால், மேலும் பத்து ஆண்டுகளுக்கு அந்த மாட்டைப் பராமரிப்பதற்கான பணத்தை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டியவர்கள் பால் அருந்துபவர்கள்தான். அதற்குப் பால் விலையை இப்போது உள்ளதைப் போல நான்கு மடங்கு உயர்த்த வேண்டும்.
மாட்டிறைச்சி உண்ணும் கொடியவர்கள் இல்லையென்றால், சைவ உணவு உட்கொள்ளும் இரக்கமனம் கொண்டோருக்கு மலிவு விலையில் பால் கிடைக்காது என்பதே உண்மை. “பால் குடிப்பவன் மேல்சாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி” என்பது “குப்பை போடுபவன் மேல்சாதி, குப்பை அள்ளுபவன் கீழ்சாதி” என்பதைப் போன்ற வக்கிர நியாயம். குப்பை அள்ளுபவன் இல்லையென்றால் ஊரே நாறிப்போய், எல்லாவிதமான நுகர்வும் நின்றுவிடுமல்லவா? அதுபோல, மாட்டுக்கறி தடுக்கப்பட்டால், விரைவில் பால் உற்பத்தி தொழிலே அழியும்.
புனித கோமாதாவைப் புலியைப் போல வன விலங்காக உயிரியல் பூங்காவில் வைத்து வேண்டுமானால் கும்பிடலாம்.
2012 – கணக்கெடுப்பின்படி, பசுவதை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் 52 லட்சம் மாடுகள் அநாதையாக அலைகின்றன. பிளாஸ்டிக் கழிவைத் தின்று சாகின்றன. இவை அனைத்தும் பராமரிக்க முடியாமல் விவசாயிகளால் கைவிடப்பட்ட மாடுகள்.
இராஜஸ்தான் பா.ஜ.க. அரசு, மாட்டுக்கென தனியே ஒரு மந்திரி போட்டிருக்கிறது. அவர் பெயர் கோபால மந்திரி. அங்கே 5 இலட்சம் பயனற்ற மாடுகளைப் பராமரிக்க 500 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அரசு கூறுகிறது. இதற்காக பதிவாளர் அலுவலகத்தில் எல்லா ஸ்டாம்பு கட்டணங்கள் மீதும் 10% சர்சார்ஜ் – என்று மக்களுக்கு “மாட்டு வரி” போட்டிருக்கிறார்கள்.
இராஜஸ்தான் அரசின் கணக்குப்படி, ஒரு மாட்டைப் பராமரிக்க ஆண்டுக்கு 10,000 ரூபாய் – அதாவது நாளொன்றுக்கு 30 ரூபாய் – தேவை. கோசாலை பராமரிப்பு, பணியாளர் ஊதியம் எல்லாம் இந்த 30 ரூபாயில் அடக்கம். இந்தக் காசையும் கோசாலை வைத்திருக்கும் பா.ஜ.க. யோக்கியர்கள் தின்றுவிடுகிறார்கள். பரிதாபத்துக்குரிய மாடுகளோ, கோசாலையின் சாணியிலும் சகதியிலும் சிக்கி, உடம்பு முழுதும் புண்ணாகி, அழுகி, சித்தரவதைப்பட்டு இறக்கின்றன. இராஜஸ்தானிலுள்ள ஹிங்கோனியா அரசு கோசாலையில் மட்டும் மாதந்தோறும் ஆயிரம் மாடுகள் இறந்திருக்கின்றன. நாடு முழுவதுமுள்ள கோசாலைகளில் இதுதான் நிலை. அதனால்தான் எந்த ஊரிலும் கோசாலைக்குள்ளே நுழைவதற்கு “பசுப் பாதுகாவலர்கள்” யாரையும் அனுமதிப்பதில்லை.

இராஜஸ்தான் மாநிலம்-ஜெய்ப்பூர் நகரிலுள்ள ஹிங்கோனியா கோசாலையில் மாடுகள் வதைபட்டு இறந்துபோகும் அவலம். (கோப்புப் படம்)
கோசாலைகளில் மாடுகள் சித்திரவதை செய்து கொல்லப்படுகின்றன. இறந்தபின் எதற்கும் பயனின்றி அழிக்கப்படுகின்றன. இறைச்சிக்கூடங்களிலோ அவை சித்திரவதையின்றி கொல்லப்படுகின்றன. கொல்லப்பட்டபின் முற்றுமுழுதாக சமூகத்துக்குப் பயன்படுகின்றன. இதுதான் வேறுபாடு. கோசாலை என்பதை, மனிதர்களின் நலனிலிருந்து மட்டுல்ல, மாட்டின் நலனிலிருந்து பார்த்தாலும் அது ஒரு அபத்தம். வேதகாலத்தில் தேவர்களுக்குப் படைப்பதாகச் சொல்லிக்கொண்டு, மாடுகளை வெட்டி யாருக்கும் பயனின்றி வேள்வித்தீயில் எரித்தது பார்ப்பன மதம். இன்று வேள்வித்தீயின் இடத்தில் கோசாலைகள்.  இதுவும் அன்று போல இன்றைக்கும் மாட்டினத்தின் அழிவுக்கே வழிவகுத்திருக்கிறது.
“இந்தியாவில் 1997-2012 காலப்பகுதியில் மாடுகளின் எண்ணிக்கை, 17.8 கோடியிலிருந்து 15 கோடியாக குறைந்திருக்கிறது என்கிறது கால்நடை சென்சஸ். இந்த 15 கோடியில் 21% வெளிநாட்டு மாடுகள். அதே நேரத்தில் பிரேசிலில் 1965-இல் 5.6 கோடியாக இருந்த மாடுகள், இன்று 21.4 கோடியாக வளர்ந்துள்ளன. ஓங்கோல், கீர், காங்கிரேஜ் போன்ற இந்திய மாட்டினங்கள்தான் பிரேசில் கால்நடைகளில் பெரும்பான்மையானவை. இவற்றை 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பிரேசில் இறக்குமதி செய்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் போற்றிக் கொண்டாடப்படும் ஓங்கோல் மாட்டினம், இந்தியாவில் “அழிந்து வரும் இனமாக” அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கே மாட்டிறைச்சித் தொழில் கால்நடையைப் பெருக்கியிருக்கிறது. இங்கே பசுப்பாதுகாப்பு உள்நாட்டு இனங்களை அழித்திருக்கிறது” என்கிறார் கால்நடைத்துறை ஆய்வாளர் டாக்டர சாகரி ராம்தாஸ்.  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக