வியாழன், 15 ஜூன், 2017

மூன் டிவி ஷா நவாஸ்கானுக்கு வரும் கொலை மிரட்டல் .. அதிமுகவின் குதிரை பேர விடியோ ..

வீடியோ வெளியீடு: தொடரும் கொலை மிரட்டல்!மின்னம்பலம் :அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோடி கோடியாக பணம் வாங்கிக் கொண்டுதான் எடப்பாடி அரசை ஆதரித்தார்கள் என்பதற்கு ஆதாரமாய் கடந்த ஜூன் 12 ஆம் தேதி மூன் தொலைக்காட்சியும் டைம்ஸ் நவ்வும் இனைந்து வெளியிட்ட வீடியோ காட்சிகள்தான் இந்த வாரம் முழுக்க தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழக சட்டசபையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ குறித்து எதிர்க்கட்சியான திமுக பிரச்னை எழுப்பி வருகிறது,
அதே நேரம் இந்த வீடியோ வெளியிட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக மூன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரான ஷாநவாஸ்கான், இன்று ஜூன் 15 ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்குப் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் மூன் டிவி நிர்வாக இயக்குனர் ஷாநவாசிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

இந்த ஸ்டிங் ஆபரேஷன் செய்ய உங்களுக்கு எது அடிப்படை உந்துதலாக இருந்தது?
கடந்த ஆறு மாதங்களாக எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா மரணத்தில் தொடங்கி எல்லார் மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அவர் மரணத்தில் என்ன நடந்தது? ஓ.பன்னீர்செல்வம் எதற்கு வெளியே வந்தார், கூவத்தூரில் என்ன நடந்தது? எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார்... இது எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ஹிடன் அஜெண்டா இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இதை வேறுவிதமான பரப்ரப்புக்குதான் பயன்படுத்திக் கொண்டதே தவிர, அந்த ஹிடன் அஜெண்டாவின் ஆதாரத்தை தேட முயற்சிக்கவில்லை. . மீடியாக்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகரித்திருக்கிறதே தவிர... ஸ்டஃப் கன்டென்ட் அதில் இருப்பதில்லை. பிரேக்கிங் நியூஸ் என்பதன் அர்த்தமே இந்த ஆறு மாதங்களில் மாறிப் போய்விட்டது. ஒருத்தர் இன்னொருத்தரின் வீட்டுக்குப் போனால் அது பிரேக்கிங் நியூஸ் ஆகிறது. இவர் ஏதாவது பேசினால் அது பிரேக்கிங் நியூஸ் ஆகிறது. ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அந்த பிரேக்கிங் நியூஸ் வரவே இல்லை. நாமும் இருபது வருடமாக பத்திரிக்கை உலகத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது என்ற ரியல் பிரேக்கிங் நியூசை கொடுக்க வேண்டும் என்ற உந்துதல்தான் இந்த ஆபரேஷனுக்குக் காரணம். இதை ஆரம்பித்தோம் என்று சொல்வதைவிட இதில் இறங்கியபோது ஒரு பொறி கிடைத்தது. அதைப் பிடித்துக் கொண்டே இறங்கினோம். அதுவே ஸ்டிங் ஆபரேஷன் ஆனது. சுமார் மூன்று மாதங்களாக கஷ்டப்பட்டுதான் இதை ஒர்க் அவுட் செய்தோம்.

வீடியோவில் இருப்பது நான் தான். ஆனால் குரல் என்னுடையது இல்லை என்கிறாரே எம்.எல்.ஏ. சரவணன்?
சரவணன் ஒரு சிவில் இன்ஜினியர். ஒரு பில்டிங் பற்றிய ஆலோசனைக்காக தான் எங்கள் அலுவலகத்துக்கு அழைத்தோம். சென்னை கோட்டூர்புரத்திலுள்ள எங்கள் அலுவலகத்துக்கு எம்.எல்.ஏ.சரவணன் வந்தபோது அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றோம். ஒரு நடிப்புக்காகவே அதை செய்தோம். அலுவலகத்துக்குள் அவர் வருவது பேசுவது எல்லாமே எங்கள் அலுவலக கேமராவில் பதிவாகியிருக்கிறது. முதன் முதலில் அவர் ஏப்ரல் 1 ஆம் தேதி எங்கள் அலுவலகம் வந்தார். அதன் பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரு சந்திப்பு நடந்தது. அப்புறம் அவர் திருநெல்வேலி போவதாக சொன்னார். நானும் மதுரையில் இருந்து அவருடன் திருநெல்வேலி சென்றேன். அங்கே சில மீடியேட்டர்களை சந்திக்கிற சூழல் ஏற்படுகிறது. திருநெல்வேயில் இருந்து என்னை மதுரையில் அவரே தன் காரில் கொண்டு வந்துவிட்டார். எங்கள் திருநெல்வேலி செய்தியாளரிடம் சொல்லி இரண்டு கிலோ திருநெல்வேலி அல்வா வாங்கி எம்.எல்.ஏ சரவணனுக்கு கொடுத்தேன். (சிரிக்கிறார்... ) இதற்கான எல்லா ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன., தொழில் நுட்பரீதியாக அவற்றை உறுதிப்படுத்த முடியும்.

இந்த செய்தியை வெளியிட டைம்ஸ் நவ் தொலைக்காட்சியை செலக்ட் செய்ய என்ன காரணம்?
தமிழகத்தில் மூன் தொலைக்காட்சி பத்திரிகையாளர் நடத்தும் தொலைக்காட்சியாகதான் இருக்கிறதே தவிர, தொழிலதிபர் நடத்தும் தொலைக்காட்சியாக இல்லை. நான் டி.ஆர்.பி.யை நோக்கி ஓடக் கூடிய ஆள் கிடையாது. என் டிவியில் போடனும். டி.ஆர்.பி. ரேட் எகிறணும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. இந்த செய்தி மக்களுக்கானது...அது எங்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் சேர வேண்டும். அதேநேரம் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இதனால் தேசிய அளவில் இதைக் கொண்டுபோக நாங்கள் முயற்சித்தபோது டைம்ஸ் நவ் வை தேர்ந்தெடுத்தோம். . மற்றபடி எங்களுக்கு இடையில் எந்த வணிக ஒப்பந்தமும் இல்லை. ஒரு செய்தியை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். நானும் அடிபப்டையில் செய்தியாளர் என்ற அடிபடையில்இது ஒரு புரிந்துணர்வுடன் கூடிய பகிரவுதான் இது.
உங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறீர்களே?
வீடியோ வெளியான இரவில் இருந்தே எனக்கு போனில் பலர் மிரட்டினார்கள். வக்கிர எண்ணத்தோடு எங்கள் ஒளிபரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் எங்கள் வீடு,. அலுவலகத்தின் அருகே சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டமும் தெரிந்தது. ஒருகட்டத்தில் மிரட்டல்கள் அதிகமாக காவல்துறைக்கு புகார் கொடுத்திருக்கிறோம். காவல்துறையும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. பொன்னார், ஓ.பி.எஸ்., இருவருடனும் ஒரே நபர்கள் இருப்பதை வெளியிட்ட பிறகு மிரட்டல்கள் அதிகமாகியுள்ளன. போனில் தொடர்புகொண்டு ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படாமல் பத்திரிக்கையாளனாக தொடர்ந்து என் பணியை செய்வேன்’’ என்று முடித்தார் தமிழகத்தின் அரசியல் இரவுகளை வெளிச்சம் போட்ட மூன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்.
-ராகவேந்திரா ஆரா<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக