புதன், 7 ஜூன், 2017

கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

தோஹா:சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கத்தாரில் வசிக்கும், 6 லட்சம் இந்தியர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 'ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்' என, சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு நாடுகள், நேற்று முன்தினம் அறிவித்தன.ஏமன், லிபியா, மாலத்தீவு ஆகிய நாடுகளும், இதற்கு ஆதரவு அளித்துள்ளன. யு.ஏ.இ.,யின் விமான நிறுவனமான எதியாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பிளை துபாய் ஆகியவை, கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளன.


கத்தாரின் விமான நிறுவனமான, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள், தங்கள் வான் பகுதியில் பறக்கவும், இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால், கத்தாருடன், மற்ற நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளனர்.

கத்தார் மக்கள் தொகை, 26 லட்சம்; அதில், 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள். இவர்களில், 3 லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:

கத்தாருடன் மற்ற நாடுகள் உறவை துண்டித்து இருப்பதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எந்த நேரமும் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து விமான போக்குவரத்து நிறுவனங்கள் கூறியதாவது:

மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. கத்தார் செல்லும் விமானங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வான் எல்லை வழியாக செல்ல முடியாது. எனவே, வேறு பாதை வழியாக செல்ல வேண்டும்; நேரடி விமானங்களை இயக்குவதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். எனவே, விமான கட்டணங்கள் கூடுதலாகும்.

அதேசமயம் ஈரான் வழியாக விமானங்களை இயக்க தடை இல்லை; எனவே, அந்த பாதையில் விமானங்களை இயக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.

உணவு தட்டுப்பாடு அபாயம்

சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கத்தாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சர்க்கரை, கோதுமை உட்பட, பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கத்தார் வரும் உணவு பொருட்களும், அண்டை நாடுகளின் வழியாகவே வருகின்றன.

ஆயிரக்கணக்கான டன்கள் உணவு பொருட்களுடன், கத்தாருக்குள் செல்லாமல், சவுதி அரேபியாவின் எல்லையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு பொருட்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதேசமயம், உணவு பொருட்கள் தேவைக்காக, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை, கத்தார் அணுகியுள்ளது.

குவைத் மத்தியஸ்தம்

கத்தாருடன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க, குவைத் மத்தியஸ்தம் செய்கிறது.குவைத் மன்னர் ஷபா அல் ஷபா, கத்தார் மன்னர் அல் தானியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.மேலும், கத்தாருடன் உறவை துண்டித்த, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் பேசி, பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக