வெள்ளி, 23 ஜூன், 2017

ஸ்மார்ட் சிட்டியில் 4 தமிழக நகரங்கள்!

ஸ்மார்ட் சிட்டியில் 4 தமிழக நகரங்கள்!பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுள் ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டமும் ஒன்று. மத்திய அரசின் நகர அபிவிருத்தி அமைச்சகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 100 முக்கிய நகரங்கள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 60 இடங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு தேர்வு செய்தது. அதில் தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
இந்நிலையில் மேலும் 30 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெங்கையா நாயுடு இன்று(ஜூன்-23) தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதலாவதாகத் திருவனந்தபுரம், இரண்டாவதாக நயாராய்பூரும் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்திலிருந்து திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய 4 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. விரைவில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் விஷ்வமாயா  நகர் என்று சமஸ்கிருத பெயராக...  ?

இந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்திற்கு 45 நகரங்கள் போட்டியிட்டது. இதில் 40 நகரங்கள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது முப்பது நகரங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான நூறு நகரங்களில் 90 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 26 நகரங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் , 29 நகரங்களில் மறுவடிவமைப்பு மற்றும் சாலை வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது இதற்காக ரூ. 57,393 கோடி ஒதுக்கப்படுகிறது என்று அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் மொத்தம் 90 நகரங்களுக்கும் ரூ. 1,91,155 கோடி முதலீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள 10 நகரங்களுக்கு 20 நகரங்கள் போட்டியில் உள்ளது. அதில் தமிழ்நாட்டின் திண்டுக்கல், ஈரோடு, துட்டா நகர் (அருணாசலபிரதேசம்), நவி மும்பை, கிரேட்டர் மும்பை, அமராவதி (மராட்டியம்), இம்பால் (மணிப்பூர்), ஷில்லாங் (மேகாலயா) உள்ளிட்ட 20 நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக