வியாழன், 1 ஜூன், 2017

காரில் எரிந்த மூவரும் தற்கொலை ... சந்தேகம் ... மாமல்லபுரத்தில் கடந்த 27 தேதி சம்பவம்

சென்னை: மாமல்லபுரம் அருகே மணமை கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவில்,  கடந்த 27ம் தேதி இரவு, காருக்குள் இருந்த 3 பேர் உடல் கருகி இறந்தனர். விசாரணையில், குரோம்பேட்டையை சேர்ந்த ஆடிட்டர் ஜெயதேவன் (52), அவரது மனைவி ரமாதேவி (46), மகள் திவ்ய (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஒரே மகளான திவ்யக்கு கடந்த டிசம்பரில் திருமணம் நடந்ததும், அவரது கணவர் சரத் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ மையத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரின் மரணத்திலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர். தடயவியல் துறையினர் சோதனை முடிவு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று மாமல்லபுரம் போலீசாரிடம் வழங்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், 3 பேரின் உடல் மீதும் தீ பிடிப்பதற்கு முன்பாக பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளதும், கார் இன்ஜின் மற்றும் ஏ.சி இயந்திரத்தில் கோளாறு ஏதும் ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.


இதற்கிடையே, மாமல்லபுரம் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி சுங்கச்சாவடியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த 27ம் தேதி 3 பேர் வந்த கார் எவ்வித பிரச்னையும் இல்லாமல் செல்வது தெரிய வந்தது. அதேப்போல், சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு திவ்யயின் கணவர் சரத் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனருக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பதிவு தபால் மூலம் புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் வரதட்சணை கேட்டு அடித்ததாக போலீசில் புகார் கொடுப்பேன் என மனைவி திவ்ய தன்னை மிரட்டுவதாக கூறி இருந்தார். இைத உதவி ஆணையர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஜெயதேவன், ரமாதேவி, திவ்ய ஆகியோருக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

புகார் கொடுத்த சரத் கடந்த 27ம் தேதி தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து காத்திருந்ததும் தெரியவந்தது.  போலீஸ் விசாரணைக்கு சென்றால் தாங்கள் குடும்பத்துடன் ஏற்கனவே தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டது, பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் திவ்யக்கு மனநல சிகிச்சை அளித்த விவகாரம் போன்றவை வெளியே தெரிந்து குடும்பத்திற்கு அவமானம் ஏற்படலாம் என்று கருதியே, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதேபோன்று, தற்கொலை செய்து கொள்வதற்காக அவர்கள் 3 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தாம்பரம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை பெட்ரோல் பங்க்குகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.  தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக