செவ்வாய், 27 ஜூன், 2017

கள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது ! ஒரு கந்துவட்டிஜி

கேரள மாநிலம் திருச்சூர், ஸ்ரீ நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக -வின்
யுவ மோர்ச்சா – இளைஞர் அணி உறுப்பினர் ராகேஷ். அவரது சகோதரர் ராஜீவ் பாஜக-வின் கைபமங்களம் தொகுதி செயலாளராக இருக்கிறார். இவர்களிருவரும் இணைந்து அப்பகுதியில் வட்டித் தொழில் செய்து வருகின்றனர். இந்தியாவெங்கும் இப்படி கந்துவட்டி, ரியல் எஸ்டேட், கட்டைப்பஞ்சாயத்து, மிரட்டல் போன்ற புண்ணியத் தொழில்களைத்தான் பா.ஜ.க-வின் தளகர்த்தகர்கள் ‘ஒழுக்கத்துடன்’ செய்து வருகின்றனர்.
கருப்புப் பண ஒழிப்புப் பேரணியில் முன்நின்ற உத்தமர் ராகேஷ்
மேற்படி கந்துவட்டிஜிக்கள் நெடுங்காலம் தொழில் செய்து வந்தாலும் இதுவரை போலீசு கேட்கவில்லை. தற்போது திடடீரென்று ஞானம் வந்து விழித்த கேரள போலீசு,கடந்த 22, ஜூன் 2017 அன்று ராகேஷ் வீட்டில் “ஆப்பரேசன் குபேர்” எனும் பெயரில் சோதனை நடத்தியுள்ளனர்.
பரவாயில்லை, பா.ஜ.கவைச் சேர்ந்த புண்ணியவான்களை சோதனை செய்வதால் அவர்கள் மனங்கோணாத படிக்கு இந்த நடவடிக்கைக்கு குபேரன் என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்துள்ளனர்.

அப்போது ராகேஷின் வீட்டில் இருந்து 1.37லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அடிக்கப்பட்ட கள்ளநோட்டுக்களில் ரூ 2000, 500, 50, 20 என நான்குவிதமான செலவாணிகளை அடித்துள்ளனர். இதில் 10, 100 ரூபாய்கள் ஏன் விடுபட்டுள்ளன, என்ன பாவம் செய்துள்ளன என்பது தெரியவில்லை. மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய வண்ண அச்சுப்பொறி (Printer), மடிக்கணினி, இங்க், வெட்டும் எந்திரம், பேப்பர் என அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. அனேகமாக இந்த புண்ணிய காரியம் நடந்து வந்த அறையில் இருந்த தெய்வங்கள் பிள்ளையாரா, குருவாரயப்பனா, பகவதியா, ஐயப்பனா என்பதும் தெரியவில்லை. என்ன இருந்தாலும் இவர்கள் இந்துமதம் சார்ந்த கட்சியில் இருப்பதால் நிச்சயம் சாமி கும்பிட்டு, பூஜை போட்டுத்தான் அன்றாடம் தொழிலை துவங்கியிருக்க வேண்டும். இருப்பினும் செல்வக் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி இவர்கள் கைவிட்டுவிட்டார் போலும். தற்போது ராகேஷ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
திருட்டு ராகேஷ் தனது கள்ளநோட்டை வைத்து லாட்டரி வாங்கி, பலசரக்கு கொள்முதல் செய்து, பெட்ரோலையும் போட்டுள்ளார்.படிப்பறிவற்ற கடற்கரையோர மீனவ மக்களும், லாட்டரி வியாபாரிகளுமே இந்த பாஜக திருட்டு கும்பலின் கள்ளநோட்டை நல்ல நோட்டு என்று வாங்கி ஏமாந்திருக்கின்றனர். மல்லையா போன்ற மேல்மட்ட திருடர்கள் நாட்டு மக்களின் நல்ல நோட்டை ஏமாற்றி ஆட்டையைப் போடும் போது ராகேஷ் போன்ற கீழ்நிலை திருடர்கள் மக்களிடம் கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றுகின்றனர். ராகேஷ் சகோதரர்கள் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உண்டு என போலீசு தெரிவித்திருக்கிறது. இதன்படி கேரளா மட்டுமல்ல, தமிழகத்திலும் குற்றப்பின்னணி கொண்ட கோமகன்களுக்கு உடன் வட்டச் செயலாளர் பதவி நிச்சயம்.
திருச்சூர் மாவட்ட சி.பி.எம் மாவட்ட செயலாளர் சி இராதாகிருஷ்ணன், “இந்த வழக்கை இவர்களோடு விசாரிக்காமல் வேறு பா.ஜ.க தலைவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். இவர்களது பிரச்சாரத்திற்கு இந்தப் பணம் செலவழிக்கப்பட்டதா என்றும் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் பிடிபட்ட ராகேஷ் கடந்த 2017 ஜனவரி மாதம் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கேரள பாஜக நடத்திய கருப்புப் பண ஒழிப்பு பேரணியில் முன்நின்றவராம். பின்னே கள்ளநோட்டு அடிப்பவன்தானே நல்ல நோட்டை அழிக்கும் நற்காரியத்திற்கு தலைமை தாங்க வேண்டும்?
மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தவுடன் பாஜகவுடைய இணைய பிரச்சார பீரங்கிகள் புது நோட்டில் கள்ளப்பணம் அடிக்க முடியாதபடி ஜி.பி.எஸ் சிப்பு இருக்கு சிப்பு என அள்ளிவிட்டார்கள். பிறகு நாட்டில் கள்ளநோட்டு, லஞ்சம், ஊழல் அனைத்தும் இந்தியாவை விட்டே பறந்து ஓடிவிடும் என்று சபதம் செய்தார்கள்.
தற்போது ராகேஷ் கைதான செய்தி மல்லாக்க படுத்துத் துப்பிய எச்சிலாக அவர்களின் முகத்திலேயே வழிகிறது.
செய்தி ஆதாரம் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக