சனி, 13 மே, 2017

L.R.ஈஸ்வரி .. முதல் முறையாக தமிழ் சினிமாவில் பெண்ணின் தேவைகளை ஒலித்த லூர்து மேரி

Shalin Maria Lawrence லூர்து மேரியும் அறுபதுகளின் பெண்ணியமும்
"ஓ....அழகு ஒரு மேஜிக் டச்ச் .....ஓ ஓ ஓ ...ஆசை ஒரு காதல் சுவிட்ச்ச்... " இந்த இடத்தில் நம் மனதின் ஸ்விட்ச்சை அனாயசமாக ஆன் செய்வார் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் .1950 இன் கடைசி வருடங்களில் லூர்து மேரி ராஜேஸ்வரி என்கின்ற பெண் எல் ஆர் ஈஸ்வரியாக சினிமா இசையுலகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார் . அதுவரையில் ஒருவித மையலில் இருந்த தமிழ் திரை இசையை திடுப்பென்று கிளர்ந்தெழ செய்கிறார் தன் வசிய குரலில் .
தமிழ் திரையிசை வரலாற்றில் ஒரு குரல் பெண்ணியம் பேசியதென்றால் அது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் தான் .
அத்தனை வருடங்களாக தமிழ் சினிமா பாடல்களில் ஹீரோயின்களின் குரல்கள் ஆண்மை நிறைந்த ஹீரோக்களிடம் கொஞ்சி கொண்டிருந்தன ,கெஞ்சி கொண்டிருந்தன ,கைவிடப்பட்டு கதறிக்கொண்டிருந்தன ,ஆறுதலை தேடிக்கொண்டிருந்தன ஆனால் எல் ஆர் ஈஸ்வரியின் குரலோ மிஞ்சி கொண்டிருந்தது . அந்த குரல் அடக்கப்பட்ட காமத்தின் தேவைகளின் கூக்குரலாய் இருந்தது ,அந்த குரல் பெண்ணுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை பண்பாட்டு போர்வைக்குள்ளிருந்து வெளியே இழுத்து வந்தது ,அந்த குரல் மட்டுமே முதல் முறையாக தமிழ் சினிமாவில் பெண்ணின் தேவைகளை சத்தம் போட்டு உரைத்தது .

இப்பொழுது கேட்டால்கூட சில ஆண்கள் சொல்லுவார்கள் எனக்கு "சுசீலாம்மா புடிக்கும் ,ஜானகி அம்மா வாய்ஸ் புடிக்கும் ,எல் ஆர் ஈஸ்வரி புடிக்காது " . இதற்க்கு முக்கிய காரணமாக அவர்கள் சொல்லுவது 'அவங்க ரொம்ப சத்தமா பாடுவாங்க " .இவர்கள் அனைவருக்கும் உள்ளிருக்கும் உளவியல் ஒன்றுதான் ,தன் எல்லைகளை மீறிய பெண்களையோ ,குரல்களையோ இவர்களுக்கு பிடிப்பதில்லை .என் என்றால் சில சமயம் எல் ஆர் ஈஸ்வரியின் குரல் உண்மையை மண்டையில் ஓங்கி அறைந்தது போல இருக்கும் ."அடி என்னடி உலகம் ,அதில் எத்தனை கலகம் " இந்த வரிகளை வேறு யார் பாடி இருந்தாலும் அது ஏதோ கவிஞர் எழுதிய வெறும் பாடல் வரிகளாக மட்டுமே இருந்திருக்கும் இதையே அவர் பாடும்பொழுது அது இப்போதைய ஒரு liberal முகநூல் போராளியின் பதிவு போல் இருக்கிறது ,அது ஒரு பெண்ணிய பிரகடனமாக காதில் விழுகிறது ,"கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே... சீதை அங்கு நின்றிருந்தாள் ராமன் கதை இல்லையே... கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி ...கொள்ளும்போது கொள்ளு தாண்டி செல்லும்போது செல்லடி " இப்பொழுது சொல்லுங்கள் இப்படி ஒரு பாடலை அப்படி ஒரு குரலில் பாடினால் எந்த இந்திய ஆணுக்கு பிடிக்கும் ? கம்பீரமான பெண்ணையோ பெண் குரலையே 2017 இல்லையே ஆண்கள் ஏற்றுக்கொள்ளாத வேளையில் அறுபதுகளில் எழுபதுகளிலும் 'queen பீ' -ராணி தேனீயாக பறந்து கொண்டிருந்தவர் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் .
அறுபதுகளின் தமிழ்ப்படங்களில் 'இங்கிலீஷ்' பேசும் ஹீரோயின்களை திமிர் பிடித்தவர்களாக காட்டி கொண்டிருந்த வேளைகளில் ,எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்களில் பரவலாக ஆங்கில வார்த்தைகள் இருக்கும் .அதை அவர் உச்சரிக்கும் விதம் ,தமிழ் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து ஆங்கில வார்த்தைகளை ஸ்டைலிஷாக மென்மையாக பாடும் நேர்த்தி இப்பொழுது கேட்டாலும் மனம் விசில் அடிக்கிறது . அப்பொழுது சக பாடகிகளை இவர் பொறாமை பட வைத்திருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .
எவ்வளவு திறமை அவருக்குள் தான் ! "முத்து குளிக்க வாரியாளா " என்று தெற்கத்தி தமிழில் காதலனை அழைக்கும்போதும் சரி , " எலந்தப்பயம் " என்று வடசென்னை தமிழில் பாடும்போதும் சரி ,இவ்வளவு variations ஐ வேறு யாராலும் இவ்வளவு தெளிவாக கொண்டு வர முடிந்ததில்லை . I think she is the most underrated singer in tamil .
எம்ஜியாரோ சிவாஜியோ அவர்களின் முகபாவத்தை மிஞ்சிவிடும் டி எம் எஸின் குரல் ,அவ்வளவு கம்பீரம் .பொதுவாக மற்ற பெண் பாடகிகள் குரல் அதன் வீரியத்தை முன் அடங்கியே இருக்கும் .எல் ஆர் ஈஸ்வரியை தவிர .அவரின் குரல் பல நேரங்களில் டி எம் எஸின் குரலை அழகாய் ஓவர்டேக் செய்து நான்காம் கியரில் போய்விடும் .ஆனால் விமர்சகர்களோ பெரும்பாலும் இதை எல் ஆர் ஈஸ்வரியை வைத்து குறை சொல்வதற்கு மட்டுமே உபயோகிக்கின்றனர் .டி எம் எஸின் குரல் மற்ற பெண் பாடகிகள் குரலை ஆதிக்கம் செய்த தருணம் எழாத இந்த விமர்சனம் எல் ஆர் ஈஸ்வரி செய்த பொழுது எழுந்த காரணம் ஆணாதிக்க மனப்பான்மை இல்லாமல் வேறு என்ன ? ஆனால் அதை எல்லாம் துளியும் சட்டை செய்யாமல் தன் குரலின் தனித்துவம் மாறாமல் பார்த்துக்கொண்டார் எல் ஆர் ஈஸ்வர் "நான் மாந்தோப்பில் நின்றிருந்தேனில் " துவங்கி சில வருடங்கள் முன் வெளியான "கலாசலா " வரை அந்த பாவம் ,பாடலை முன்னெடுத்தி செல்லும் திறன் இன்னும் துளி கூட குறையவில்லை .
பெண் பாடகிகள் குரல் தேன் போல் இருக்கவேண்டும் ,வைன் குடித்தால் வரும் எறும்பு கடி போதையாய் இருக்கு வேண்டும் என்று 'Streotyping 'வலைக்குள் சிக்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் க்ரீன் சில்லி வோட்க்காவாய் சுரென்று சுவைக்க வைத்தது எல் ஆர் ஈஸ்வரியின் குரல்தான் என்று சொன்னால் மிகையாகாது . "பட்டதுராணி பார்க்கும் பார்வை " பாடலில் வரும் அந்த சிலிர்ப்பு வலியோடு உடன் எழும் ஒரு தேக கிளர்ச்சியயை அப்படி சொல்லிவிட்டு போய் இருக்கும் , "மேலாடை மூடும் ...பாலாடை மேனி " seduction வித்தையின் உச்சக்கட்டத்தில் நம்மை பார்வையாளராக்கும் . துடுக்கு பெண் குரலா ..எல் ஆர் ஈஸ்வரி ,தைரியமான பெண் குரலா ..எல் ஆர் ஈஸ்வரி ..கிண்டல் செய்யும் பெண் குரலா ..எல் ஆர் ஈஸ்வரி என்று பாடல்கள் அமைத்தாலும் அவர் குரலை பெரும்பாலும் பயன்படுத்தி கொண்டது 'அப்பொழுதைய 'item song பாடல்களில் இல்லை என்றால் ஹீரோக்களை மயக்கும் வில்லனின் ஆசை காதலிக்கு . ஒரு ஆணை கலவிக்கு அழைத்தல் தவறு என்று சட்ட திட்டம் போட்டு கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஹீரோக்களை வசியப்படுத்தும் பாடல்களுக்கு மட்டும் அதிகம் பயன்படுத்த பட்டார் எல் ஆர் ஈஸ்வரி ஆனால் அதை கண்டும் அவர் சோர்ந்து போகவில்லை ,பளிங்கினால் தனக்கான ஒரு மாளிகையை அதை வைத்தே கட்டிவிட்டார் .
ஆண்களின் உலகத்தில் சமநிலையை அடைய துடிக்கும் ஒரு பெண்ணாக இருந்தவரின் குரல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அழகா பொருந்தி போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை .தங்கள் மேல் எறியப்பட்ட அவமான கற்களை வெற்றி படிக்கெட்டுகளாய் மாற்றியவர்கள் இருவருமே .
சினிமா பயணம் முடியும் தருவாயில் பக்தி பாடல்கள் துறையில் கால் பதிக்கிறார் .எடுத்ததும் ஒரு சிக்ஸர் . அதுவரையில் கர்நாடக சங்கீத பாடகிகள் மட்டுமே தங்களின் சாந்த குரலில்ஆதிக்கம் செய்து வந்த இடத்தில் அட்டகாசமாக ஓங்கி ஒலிக்கின்றது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் ,இன்னும் சத்தமாக . அம்மனிடம் கெஞ்சி கொண்டிருக்கும் மகளிரை " கற்பூர நாயகியே கனகவல்லி " என்று உரிமையுடன் கேட்ட தூண்டுகிறார் எல் ஆர் ஈஸ்வரி .நீயே சாமி உள்ளிருப்பதும் நீதான் ஆகவே எதை கேட்டாலும் இன்னும் கொஞ்சம் சட்ட திட்டமாக நன்றாகவே குரலை உயர்த்தி கேள் என்று உயர்த்திவிட்டு போகிறது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் .
அவர் சேலை கட்டும் விதம் கூட என்னை அநேக தடவை கவர்ந்திருக்கிறது .மற்ற பாடகிகளிடம் காண கிடைக்காத அந்த நிமிர்ந்த தோற்றம் ,நேர்கொண்ட பார்வை ,புடவையை மார்போடு மூடி கொள்ளாமல் ஒற்றையாய் காற்றில் பறக்க விடும் அந்த ஸ்டைல் என்று அவர் பெண்ணியவாதியென்று அவர் தோற்றமே பல வேளைகளில் உணர்த்திவிட்டு போய் இருக்கிறது . பேசும் தொனி கூட அவர் எவ்வளவு தைரியமானவர் என்று நமக்கு தெரியப்படுத்தும் .இன்னும் கூட "சூப்பர் சிங்கர் ' நிகழ்ச்சியில் அவர் பேசுவதை பார்க்கும்போது இன்னும் கூட அவர் மற்றவரை விட எவ்வளவு மாறுபட்டுருக்கிறார் என்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது .
எனக்கென்னவோ அவரின் திறனை நாம் சரியாக பாராட்டாமல் விட்டு விட்டோமோ என்றே பதறுகிறது .அதற்கு ஒரே காரணம் ,அவர் வித்தியாசமான ,மாறுபட்ட ஒரு பெண் .இத்தகைய பெண்களை தமிழ் சமூகம் கொண்டாடியதே இல்லை .நமக்கு மாறுதல் பிடிக்காது .மாறுபட்ட குரல் பிடிக்காது .கூண்டுகளில் அடைபட்ட குயில்களின் சோகம் மட்டுமே நமக்கு பழக்கமானது .ஆனால் எல் ஆர் ஈஸ்வரிகளோ "எவனோ சொன்னானாம்
எவளோ கேட்டாளாம் அதையா நாம கேட்கணும்
நமக்கு நாமே தான் கணக்கு ஒண்ணே தான் சரியா போட்டு பாக்கணும் ,
புது மனசு
புது வயசு
புது ரசனை
எது பெரிசு
நம் பொன் உலகம் நம் கையிலே "
என்று நினைவில் என்றுமே இனித்து கொண்டிருப்பார்கள் .
ஷாலின் மரிய லாரன்ஸ்   நன்றி குமுதம் , issue dated : 4th May 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக