வெள்ளி, 26 மே, 2017

ஆடிட்டர் குருமூர்த்தி + மோடி Gang ஐ சரிக்கட்டிய அதானி தங்கமணி குறுப்...

அ.இ.அ.தி.மு.க. என்கிற பெயர் காரணத்தாலோ என்னவோ அ.தி.மு.க.வில் தினசரி நடக்கும் அனைத்தையும் டெல்லிதான் தீர்மானிக்கிறது என்பதை மே 20-ஆம் தேதி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்  பிரதமர் மோடியுடன் நடத்திய மாரத்தான் சந்திப்புகள் நிரூபித்தன. பிரதமர் மோடியை முதலில் பாராளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். அடுத்து ஓ.பி.எஸ். தலைமையில் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சந்தித்தார்கள். அதைத் தொடர்ந்து மறைந்த மத்திய மந்திரி அனில்மாதவ் தவேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த மோடியை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களான வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சந்தித்தனர்.;";தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும், டெல்லியில் 35 நாட்களாக போராட்டம் நடத்திய விவசாயிகளையும் பெயரளவுக்குக் கூட சந்திக்காத பிரதமர் மோடி, அ.தி.மு.க.வின் அனைத்து அணியினருடனும் நடத்திய சந்திப்புகளில் என்ன நடந்தது என அவர்களைக் கேட்டோம்.


மோடியின் நம்பிக்கைக்குரிய சென்னை ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதன் அடிப்படையில் சசிகலாவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்த மோடியின் பார்வையை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி அணி தொடர்ந்து முயன்று வந்தது. கேரள ஆளுநர் சதாசிவம் சொன்ன பிறகும் தனது சசிகலா எதிர்ப்பு நிலையிலிருந்து சற்றும் இறங்காத மோடியின் மனதை மாற்ற மோடியின் நெருங்கிய நண்பரும், பிரபல தொழிலதிபருமான அதானியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் அமைச்சர் தங்கமணி.

""மோடிக்கு, சசிகலாவை பிடிக்கவில்லை. ஆனால் எங்களுக்கு சசியை விட்டால் வேறு வழியில்லை. இன்றிருக்கும் 123 (சபாநாயகரோடு சேர்த்து) அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 60 பேர் சசி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். கட்சியில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தினருக்கு சசி குடும்பத்தோடு தொடர்பிருக்கிறது. அதேநேரம் எங்களை விட்டுப் பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். அணியில் எம்.எல்.ஏ.க்கள் வெறும் 12 பேர்தான் இருக்கிறார்கள். அவரால் கட்சியை உடைக்க முடியாது. ஆனால் சசிகலா நினைத்தால் அ.தி.மு.க. இரண்டு பாதியாக உடைந்துவிடும். எடப்பாடி மெஜாரிட்டியை இழப்பார். தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும். நாங்கள் சசிகலாவை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவிடுகிறோம். அதுவரை எங்களை செயல்பட விடுங்கள்'' என விளக்கிச் சொல்லியிருக்கிறார் தங்கமணி. உடனே பிரதமர் நரேந்திரமோடியிடம் அதானி இதுபற்றி சொன்னார். அதானி சொன்னபின் புரிந்துகொண்ட மோடி, "எங்கே இருக்கிறார் தங்கமணி?' என கேட்க... அதானியுடன் போய் மோடியை சந்தித்துள்ளார் தங்கமணி. அந்த சந்திப்பு பற்றி இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தங்கமணி தரப்பிலிருந்து செய்தி வெளியிடப்பட்டது. தங்கமணியின் சந்திப்புக்குப் பிறகு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். "மாநில அரசு நிர்வாகம்  ஊழலற்றதாக இருக்கவேண்டும்' என்கிற மோடியின் விருப்பத்தைச் சொன்னார். அதை முதல்வர் எடப்பாடி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில்...  வருமானவரித்துறை, சேகர்ரெட்டி விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் எழுதியது. கூடவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தம்பிதுரையை மோடி சந்திப்பதற்கு மே 20ஆம் தேதி அப்பாயின்ட்மெண்ட் தரப்பட்டது. இதனால் ஓ.பி.எஸ். டென்ஷனானார்.இரட்டை இலை சின்னம் தொடர்பாக 20,000 கட்சிக்காரர்களின் பிரமாண வாக்குமூலத்தை தேர்தல் கமிஷனில் தர ஓ.பி.எஸ். டெல்லி வருகிறார், பிரதமருடன் ஒரு சந்திப்பு அமைய வேண்டும்' என அருண்ஜெட்லியிடம் கோரிக்கை வைத்தார் மைத்ரேயன். பிரதமர் ஒப்புதல் தந்தார். இந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய மைத்ரேயன், ""பிரதமர் மோடி எங்களிடம் கோபப்பட்டார் என தமிழக மீடியாக்களில் செய்தி வருகிறது. கோபமாக இருந்தால் அவர் எங்களை சந்திப்பாரா? எங்களிடம் அரைமணி நேரம் பேசினார்'' என்கிறார்.

"சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவோம், இரட்டை இலையை மீட்போம். அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்தை மீட்போம்' என பிரதமர் சந்திப்பிற்குப் பிறகு உற்சாகமாகப் பேசும் ஓ.பி.எஸ். அணியினர், "தினகரன் மற்றும் வருமானவரித்துறை வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் தொடரும்' என பிரதமர் உறுதியளித்துள்ளார் என்கிறார்கள்.
ஆனால் எடப்பாடி அணியினர், ""இரு அணிகளும் ஒன்றாக இணையுங்கள்.... அதுதான் அம்மாவின் விருப்பம் என ஜெ.வை "அம்மா' என பிரதமர் குறிப்பிட்டு ஓ.பி.எஸ்.ஸுக்கும் தம்பிதுரைக்கும் அட்வைஸ் செய்தார்'' என்கிறார்கள்.

மத்திய அமைச்சர் அனில்மாதவ் தவேவுக்கு இறுதியஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பிரதமரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி திஹார் சிறையில் டி.டி.வி.யை சந்தித்துவிட்டு பெங்களூருக்கு வந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அவர்களுடன் நடிகர் கருணாசும் சந்தித்தார். மோடி அரசு அ.தி.மு.க. மீது நடத்தும் தாக்குதல்களால் கடும் கோபத்தில் இருந்த சசிகலா, ""வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடவேண்டும். அவர்கள் எடப்பாடி சொன்னால் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? அல்லது ஓ.பி.எஸ். சொன்னால் அத்தனைபேரும் ஓட்டுப்போடுவார்களா? ஓட்டு வேண்டுமென்றால் நான் உத்தரவு போடவேண்டும். அதற்கு என்னிடம் வரவேண்டும். அப்போது நான் பேசிக்கொள்கிறேன்'' என கூறியதாக, அவரை சந்தித்த நடிகர் கருணாசின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<>-தாமோதரன் பிரகாஷ்< நக்கீரன் /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக