திங்கள், 8 மே, 2017

கொடநாடு பங்களாவில் ஜெயலிதாவின் கைரேகை பயோமெட்ரிக் லாக் கதவுகள் அகற்றியது யார்? ஏன்?

கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா கைரேகை வைத்தால் திறக்கும் அதிநவீன சென்சார் கதவுகள் அகற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி:கொடநாடு" எஸ்டேட் பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கதவுகளை அகற்றியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் கைரேகை வைத்தால் மட்டுமே திறக்கும் வகையில் அந்த கதவுகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போதே அந்த கதவுகள் அகற்றப்பட்டு விட்டதாகவும் எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதுவே கொள்ளைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்து விட்டார். அதேபோல பாலக்காடு அருகில் விபத்தில் சிக்கிய சயனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு பங்களாவில் கோவை சரக டிஐஜி தீபக் எம் தமோர் மற்றும் நீலகிரி எஸ்பி முரளிரம்பா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா குடும்பத்தினரிடம் அனுமதி பெற்ற பின் இந்த சோதனை நடைபெற்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவலாளியிடம் விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த கிருஷ்ணபகதூருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நலம் தேறியதை தொடர்ந்து பணிக்கு திரும்பினார். அவருக்கு 8-வது கேட் அருகே பகல் நேர பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
எஸ்டேட் பகுதியில் விசாரணை
பங்களாவை சுற்றியுள்ள பகுதிகள், கொலை நடந்த இடம் மற்றும் எஸ்டேட்டுக்குச் செல்லும் வழித்தடங்கள் போன்ற இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
பங்களா அறைகள்
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கும் அறைகள் மட்டுமின்றி, பங்களாவில் உள்ள முக்கிய அறைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கும் அறைகளில் உடைந்துகிடந்த பீரோக்கள், டேபிள்கள் மற்றும் சில சூட்கேஸ்களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா கைரேகை
கொடநாடு பங்களாவில் உள்ள பெரும்பாலான அறைகளின் கதவுகள் சென்சார் முறையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பாக, ஜெயலலிதா பயன்படுத்தும் அறைகள் அனைத்திலும் பயோமெட்ரிக் முறையில் திறக்கப்படும் கதவுகள் அமைக்கப்பட்டிருந்ததாம். அந்த அறைகளில் ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே திறக்கும் வசதி செய்யப்பட்டிருந்ததாம்.
கதவுகள் அகற்றம்
ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோவில்மருத்துவமனையில் இருந்த 2 மாதங்களில் எஸ்டேட் மற்றும் பங்களாவில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்ட நிலையில், அதிநவீன கதவுகளும் அகற்றப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அகற்றியது ஏன்?
ஜெயலலிதாவின் அறைக்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நிறைந்த கதவுகளை அகற்றியது ஏன்? என்றும், இந்த விபரம் அறிந்தவர்களே பணம், பொருட்களை கொள்ளையடித்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளை போனது பணம் மட்டும்தானா? அல்லது முக்கிய ஆவணங்களை குறி வைத்து நடத்தப்பட்ட கொள்ளையா என்பது சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கு மட்டுமே தெரியும். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வாயை திறந்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் போலீசார்.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக