புதன், 17 மே, 2017

இனி பெண்களும் தலாக் கூறலாம்! முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில்

ஆண்களைப் போல பெண்களும் முத்தாலாக் கூறி விவாகரத்து செய்யலாம் என இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முத்தலாக் நடைமுறைக்கு எதிராகப் பல பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது அரசியலமைப்புக்கு விரோதமானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அது முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், ‘முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது. முத்தலாக், பலதார மணம் மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ போன்றவை இஸ்லாமிய நடைமுறைகளுடன் ஒருங்கிணைந்தது இல்லை எனத் தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்த்து, நாடு முழுவதும் ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் தனிச் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க மாட்டோம் என எதிர்ப்புத் தெரிவித்தது. அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், ‘பொது சிவில் சட்டம் கொண்டுவர முனையும் மத்திய அரசின் முடிவு நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. மேலும், தலாக் கூறி விவாகரத்து செய்வது மனைவியை கொல்வதைவிடச் சிறந்தது என எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனை எதிர்த்து, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ் கெஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, இதனை விசாரித்து வருகிறது. இதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் ஆகியோர் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
நேற்று (மே, 16) இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் ஆஜராகி, ‘முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் வழக்கத்தைக் கடந்த 1400 ஆண்டுகளாக முஸ்லீம் மக்கள் பின்பற்றி வருகின்றனர். ஆண்கள் தலாக் கூறி விவாகரத்து செய்வது போல் பெண்களும், திருமண உறவு பிடிக்காவிட்டால் தலாக் கூறி விவாகரத்து செய்யலாம் என இந்திய முஸ்லீம்களுக்கான சட்டம் சொல்கிறது. இதனைப் பலர் புரிந்துகொள்ளவில்லை. பெண்களும் தலாக் கூறி விவாகரத்து செய்வதை நாங்கள் அனுமதிக்கிறோம். இனிவரும் நாட்களில் இதனைப் பெண்கள் முழு அளவில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக