ஞாயிறு, 7 மே, 2017

உயர்நீதிமன்றம் தீர்ப்பு :: மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது .. மேன்முறையீடு செய்ய தீர்மானம்!

தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சென்னை, தமிழ்நாட்டில், அரசின் கிராமபுற மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு எம்.டி. மற்றும் எம்.எஸ். போன்ற மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் முதுகலை கல்வி தொடர்பாக விதிமுறை ஒன்றை வெளியிட்டது. இதன்படி நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோடு கிராமபுற மாணவர்களுக்கான இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் தமிழக அரசு நீட் தேர்வில் அரசு டாக்டர்கள் பெற்ற மதிப்பெண்ணை, 90 மதிப்பெண்ணாக கணக்கிட்டு, மலைக்கிராமம் உள்ளிட்ட கடினமாக பகுதிகளில் டாக்டராக பணியாற்றியதற்கு, அதிகபட்சம் 10 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து, 2017-18-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புக் கான விளக்க குறிப்பேட்டை வெளியிட்டுள்ளது.


மாறுபட்ட தீர்ப்பு

இதை எதிர்த்து டாக்டர்கள் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ‘முதுகலை மருத்துவ படிப்பில், இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்துள்ள விதிகளின் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். தமிழக அரசு 10 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து வெளியிட்டுள்ள விளக்க குறிப்பேடு செல்லாது’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர்கள் பலர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் விசாரித்து கடந்த 3-ந் தேதி மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள்.

அதில், நீதிபதி கே.கே.சசி தரன், ‘தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்க குறிப்பேடு செல்லும் என்றும், அதில் குறிப்பிட்டுள்ள விதிகளின்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்’ என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி எம்.சத்தியநாராயணன்

ஆனால், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரேவிதமாக இருக்கவேண்டும். சுப்ரீம் கோர்ட்டும் பல தீர்ப்புகளில் இதைத்தான் உறுதி செய்துள்ளது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றித்தான் மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, 3-வது நீதிபதியாக, நீதிபதி எம்.சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். அவர் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கை பொறுத்தமட்டில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த தீர்ப்பை நானும் உறுதி செய்கிறேன்.

கடினமான பகுதிகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு, ஊக்க மதிப்பெண்ணாக, அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில், ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற வீதத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு, 30 சதவீத மதிப்பெண் வழங்கலாம் என்று பிரிவு 9 கூறுகிறது.

கடினமான பகுதிகள் எவை என்று தமிழக அரசு நிர்ணயம் செய்யலாம்.

யார் மீது குற்றம்?

ஆனால், ஊக்க மதிப்பெண் வழங்குவது தொடர்பாக இந்திய மருத்துவ கல்வி கவுன்சிலின் விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக பல உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுகளை தெரிந்து இருந்தும், அந்த உத்தரவை நிராகரித்துவிட்டு, தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக, ஊக்க மதிப்பெண் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டதற்கு, தமிழக அரசை தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

தீர்ப்பு உறுதி

எனவே, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பை நான் உறுதி செய்கிறேன். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, கடினமான பகுதியில் பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு, அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில், ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற ரீதியில் அதிகபட்சம் 30 சதவீதம் மதிப்பெண்ணை, ஊக்க மதிப்பெண்ணாக வழங்கவேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உருவாக்கிய விதிகளை பின்பற்றக்கூடாது. அதே நேரம், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, கடினமான பகுதிகளை தமிழக அரசு வகைப்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 3 நீதிபதிகளில், இரு நீதிபதிகள், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படிதான் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருப்பதால், இந்த விதிகளின்படி தான் தமிழக அரசு மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கிராமபுறங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்கனவே பெற்று வந்த இடஒதுக்கீடு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக