வெள்ளி, 26 மே, 2017

விகடன் : மோடி அரசு மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? புள்ளி விபரம் ..

மூன்றாண்டுகள் நிறைவு செய்யும் பிரதமர் மோடி
சாலைகளில் தேநீர் விற்று, ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பின் அடிப்படைத் தொண்டராக இருந்து, குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார் மோடி. முதல்வராக அவரது பதவிக்காலம் சரியாக அக்டோபர் 2001 முதல் மே 2014 வரை. வரலாற்றில் குருதிகொண்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த மாநிலத்தில் பெரும் கலவரங்கள் வெடிக்கின்றன. பல வகையிலான குற்றச்சாட்டுகள் மோடிமீது முன்மொழியப்படுகிறது.

பல்வேறு தரப்பு ஆதாரங்கள் இருந்தும் அவர் குற்றவாளி இல்லை என்று கூறப்பட்டுக் குற்றச்சாட்டுகள் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டார். பிறகு அவருக்குக் காத்திருந்தது நாட்டின் பிரதமர் பதவிக்கான வாய்ப்பு. 'நல்லநாளை எங்களால் தரமுடியும்' என்று பிரசாரம் செய்கிறார் மோடி. மேலும் செயல்திட்டங்கள் அறிவிப்பு, மாநில வாரியாகக் கட்சியினர் மேற்கொண்ட செயல்பாடுகள் ஒருபக்கம். மற்றொருபக்கம் பி.ஜே.பி-யின் நீண்டநாள் தலைவர்களிடையேகூட அவர்மீது முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் கட்சி தரப்பு அவருக்கென உருவாக்கித் தந்த ’மோடி அலை’ எனப் பல வருடகால செயல்பாட்டின் பயனாக 26 மே 2014 அன்று நாட்டின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்றார் மோடி. நரேந்திர மோடி பொறுப்பேற்று இன்றோடு மூன்று வருட காலம் நிறைவடைகிறது.
இந்துத்துவா சார்புநிலையாளர், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகச் சம்பவங்கள், காஷ்மீர் தொடர் கலவரங்கள், ஜல்லிக்கட்டு மற்றும் நெடுவாசல் போராட்டங்கள் என தேசிய அளவில் அவர்மீதும் அவரது அரசின் மீதும் பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கறுப்புப் பண ஒழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, தூய்மை இந்தியா திட்டம், ஏழைகளுக்கான ஜன் தன் யோஜனா திட்டம் எனச் செயல்பாடுகளை முன்வைத்ததும் இதே மோடி தலைமையிலான மத்திய அரசுதான். அதிக வெளிநாடுகள் பயணித்தது மற்றும் பிறநாட்டுச் சகதலைவர்களுடன் அதிகம் தொடர்பில் இருந்தது, ’மன் கி பாத்’ வழியாக மக்களுடன் அதிகம் பேசியது என தொடர்புநிலையில் இருந்தவர் பிரதமர் மோடி. இப்படி மோடி அரசு எடைபோட்டுப் பார்க்கப்படும் தராசு இந்த மூன்றாண்டுகளில் சற்று ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கிறது. இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
கருத்துகளின் முடிவின்படி மோடி அரசின் இத்தனை நடவடிக்கைகளும் தனிமனித அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மோடி முதல்வராக இருந்த காலம் தவிர்த்து இந்த மூன்று வருடகாலங்களில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ’ஐகான்’ இமேஜினால் அவரது பிரபலத்துவம் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் மக்கள். அவரை முகநூலில் பின்பற்றுபவர்கள் மட்டுமே 13 மில்லியன் பேர். தற்போது அதிகம் பின்பற்றப்படும் சர்வதேசத் தலைவரும் மோடிதான்.
பிரதமர் இந்தக் குறிப்பிட்டகாலத்தில் அதிகம் சந்தித்த பிற சர்வதேச தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா. அமெரிக்காவுக்கு மட்டுமே நான்கு முறை பயணப்பட்டிருக்கிறார் மோடி. இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 57. பலநாடுகள் பல பயணங்கள் மேற்கொண்டாலும் உள்நாட்டில் இருக்கும் தங்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதே மக்களின் அதிகபட்சக் கருத்தாக இருக்கிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெற வங்கியில் வரிசைகளில் நின்று... பிறகு அந்த ரூபாய் நோட்டுக்குச் சில்லரை மாற்றத் தவியாய்த் தவித்தாலும் மோடி அரசின் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் முடக்க நடவடிக்கையைப் பெரும் மாற்றமாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
அதனால் கறுப்புப் பணம் ஒழிந்ததா என்று மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பெருவாரியான பதில் இல்லை என்றே கிடைத்துள்ளது. திட்டம் சரிதான்... அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்துவைத்துள்ளார்கள் மிஸ்டர் மோடி.
அரசின் கொள்கைகளுக்கு எதிராக நீண்டநாள்களாக நடந்துவரும் விவசாயப் போராட்டங்கள், நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு எழுச்சி மற்றும் நெடுவாசல் நிலமீட்புப் போராட்டம் என மாபெரும் மக்கள் போராட்டங்களையும் வேற எந்த அரசும் பார்த்திருக்கமுடியாது. ஆனால், அதனை மத்திய அரசு எவ்வாறு கையாண்டது என்கிற கேள்விக்கு அத்தனை போராட்டங்களையும் அரசும் பெரும்பாலும் அலட்சியம் செய்ததாகவே பதில் வந்திருக்கிறது.
மத்திய அரசின் செயல்பாடுகள் சுயாட்சி அதிகாரம் உள்ள மாநில அரசுகளைப் பெரிதளவில் பாதித்துவிடப் போவதில்லை. ஆனால், மோடி அரசின் மூன்றாண்டு ஆட்சி தமிழகத்துக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவே மக்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் ரீதியான மாற்றங்களும், பாதிப்புகளுக்கு ஒருவகையில் காரணம் என்றே கூறலாம். முந்தைய காலங்களில் மாநில அரசின் செயல்பாடுகளை மட்டுமே அதிக அளவில் கவனித்து அதன் செயல்பாடுகளை விமர்சித்து வந்த தமிழக மக்கள், இந்த ஆட்சிக்காலத்தில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் மீதும் அதிக கருத்துகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதுவரை மாநில சுயாட்சியின் மீது மட்டுமே இருந்த மக்கள் கவனம், இதன் வழியாக மத்திய அரசின் பக்கமும் திரும்பியுள்ளது.


இவை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி அரசுக்கு என்ன மாதிரியான வாய்ப்பை தேடித் தரும் என்கிற கேள்வியினை மக்களிடம் முன்வைத்தோம். வெற்றி வாய்ப்பு குறைவு அல்லது அதிகம் என்று சில தரப்புகளும், தொங்கு பாராளுமன்றம் அமையும்; மோடி தனிமனிதராக வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு என்கிற முரண்பட்ட கருத்தினைப் பெரும்பாலான மக்களும் முன்வைத்துள்ளார்கள். ஆனால், இன்னும் இரண்டாண்டுகள் ஆட்சிக்காலம் இருக்கும் நிலையில் பணமுடக்கம் போன்ற புதிய செயல்திட்டங்கள் மக்களின் மனநிலையை மாற்ற வாய்ப்புகள் அதிகம்... மற்றபடி நல்ல நாளை எதிர்நோக்குவோம் மக்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக