ஞாயிறு, 21 மே, 2017

கொடநாடு... ஜெயலலிதாவின் பைல்களால் வசமாக சிக்கி கொண்ட பன்னீர்செல்வம் ! அம்மா கையால் அடின்னா சும்மாவா?

மர்மங்கள் நிறைந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் போக்கைத் தொடர்ந்து வெளியிடும் நக்கீரனின் மே 11-13 இதழில் "விசாரணை வளையத்தில்  ஓ.பி.எஸ். மகன்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.கொடநாட்டில் பணியாற்றி பின்னர் சசிகலாவால் விரட்டப்பட்ட டிரைவர் கனகராஜ், அதன்பிறகு ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.வான ஆறுகுட்டியின் டிரைவராக வேலை செய்தார். ஆறுகுட்டி மூலம் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத்துக்கு நெருக்கமானார். கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கனகராஜ், விபத்தில் பலியான நிலையில்... ஆறுக்குட்டியையும் ரவீந்திரநாத்தையும் விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக எழுதியிருந்தோம்.மே மாதம் 16ஆம் தேதி ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வை ஆத்தூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். மாலை 6.20 மணிக்கு ஆஜரான ஆறுக்குட்டியிடம் டி.எஸ்.பி. பொன்.கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர்கள் கேசவன், செல்வராஜ் ஆகியோர் ஒருமணி நேரத்திற்கு மேல் விசாரித்தனர்.


அப்போது "உங்களுக்கும் இறந்துபோன டிரைவர் கனகராஜுக்கும் இடையே  நெருக்கமான உறவு இருந்ததா? கனகராஜின் செல்போனுக்கு உங்களது செல்போனில் இருந்தும் உங்களது உதவியாளர் அசோக்கின் செல்போனிலிருந்தும் போன் அழைப்புகள் பறந்திருக்கின்றன.   அவரும் உங்களிடம் பேசியுள்ளார். உங்களுக்கும் கொடநாட்டில் ஒரு கொலை செய்துவிட்டு அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்த கனகராஜுக்கும் என்ன உறவு? "கனகராஜின் மரணத்திற்குக் காரணம் முதல்வர் எடப்பாடிதான்' என அவரது அண்ணன் தனபால் சொன்னதற்கு என்ன காரணம்? உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக நீங்கள், தனபாலிடம் முதல்வர் எடப்பாடியை குற்றம்சாட்டி ஒரு அறிக்கையை வெளியிடச் சொன்னீர்களா? நீங்கள் சொன்னதன் அடிப்படையில்தான் கனகராஜ் கொள்ளையடிக்க, கேரளாவிலிருந்து வழிப்பறி கொள்ளை நடத்தும் கொட்டேஷன் டீமை ஏற்பாடு செய்தாரா? ஓ.பி.எஸ்.ஸின் மகன்

ஜெ., சசிகலா இவர்களுக்கு அடுத்தபடியாக கொடநாட்டில் என்ன இருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்கள் ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன் ஆகியோர்தானே? அவர்களுக்கு இதில் தொடர்புண்டா? கொடநாட்டில் ஓ.பி.எஸ்.ஸுக்கும் நத்தம் விசுவநாதனுக்கும் சொந்தமான பொருட்கள் ஏதாவது இருந்ததா? ஓ.பி.எஸ். மகன் சீக்ரெட் நம்பர் வைத்திருக்கிறாரா? அவர் வாட்ஸ்-ஆப் காலில் உங்களுடனும் கனகராஜுடனும் பேசுவாரா?..>இப்படி 13 கேள்விகளை போலீசார் கேட்டனர்.

"இரண்டு வருடங்களுக்கு முன்புதான் கனகராஜை எனக்குத் தெரியும். எனது உதவியாளர் அசோக்தான் கனகராஜை எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் சென்னை செல்லவும், ஜெ. உயிரோடிருந்த காலகட்டத்தில் கொடநாடு செல்லவும் கனகராஜை டிரைவராக உபயோகப்படுத்திக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை கனகராஜ் நல்லவன்'' என முதல் கேள்விக்குப் பதில் சொன்ன ஆறுக்குட்டி... ஓ.பி.எஸ்., நத்தம், ஓ.பி.எஸ். மகன் பற்றிய கேள்விகளுக்கும் பதில் சொல்லும்முன் டென்ஷனானார்.

"எனக்கோ ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கோ, ஓ.பி.எஸ்., நத்தம் ஆகியோருக்கோ கொடநாடு சம்பவத்தில் எந்த தொடர்பும் கிடையாது. கொடநாடு கொள்ளைச் சம்பவம் நடந்த பிறகு கனகராஜ் என்னை செல்போனில் அழைத்து "சசிகலா அணிக்கு வந்துவிடுங்கள்' என நச்சரித்தான். என்னைப் பொறுத்தவரை கனகராஜ் கொடநாட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்தது, கொலை செய்தது தவறு. அதனால்தான் அவனது போன்கால்களை எடுக்காமல் இருந்தேன்

கனகராஜின் மரணத்தை விபத்து என நீங்களே முடிவெடுத்துவிட்டீர்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் நீலகிரி போலீசார் கேட்க வேண்டிய கேள்விகளை வழக்கிற்கு தொடர்பில்லாத சேலம் ஆத்தூர் போலீசார் விசாரிப்பதில் அரசியல் பின்புலம் இருக்கிறது'' என்று சொல்லிவிட்டு விசாரணை வளையத்திலிருந்து வெளியே வந்தார் ஆறுக்குட்டி.

இந்த விசாரணை பற்றி நம்மிடம் பேசிய  போலீஸ் வட்டாரத்தினர்... ""ஆறுக்குட்டிக்கு ஓ.பி. குடும்பத்தினர் அனைவரையும் தெரியும். ஓ.பி.யின் மகன் ரவீந்திரநாத், காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிப்பவர் ஆறுக்குட்டி. அப்படிப்பட்டவரின் டிரைவரான கனகராஜ், கொடநாடு கொலை கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கிறார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஓ.பி., நத்தம் ஆகியோர்மீது ஜெ. நடவடிக்கை எடுத்தார். அவர்களிடமிருந்து சொத்துகளை பிடுங்கினார். அந்த ஆவணங்கள் கொடநாட்டில் உள்ளன. அதை வசமாக்க கனகராஜ் மூலமாக முயற்சி செய்துள்ளார்கள். இந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான்   ஆறுக்குட்டியிடம் விசாரித்தோம்'' என்கிறார்கள்.தாமோதரன் பிரகாஷ், சிவசுப்ரமணியன், அருள்குமார்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக