சனி, 13 மே, 2017

லஞ்சம் கொடுக்க மறுக்கும் கார் கம்பனிகள் .. வெளிமாநிலங்களுக்கு ஓடும் வேலை வாய்ப்புக்கள்!

விகடன் : உச்ச நீதிமன்றம் மூடச் சொன்ன டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு நீதிமன்றம் சென்று போராடுகிறது தமிழக அரசு. ஆனால், சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புத் தரஇருந்த கார் தொழிற்சாலையை இங்கு திறக்க விடாமல், ஆந்திராவுக்கு விரட்டி அடித்திருக்கிறது. ஊழலும், லஞ்சமும், கமிஷன் கலாசாரமும் தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீட்டு வாய்ப்புகளை வேறு மாநிலங்களுக்குத் துரத்திக் கொண்டிருக்கிறது!
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் துணை நிறுவனம், தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ். இந்தியாவில் சுமார் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தன் கார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்த கியாவின் முதல் சாய்ஸ், தமிழகமாக இருந்தது.
தமிழகத்தில் பொருத்தமான இடம் அமையாவிட்டால் குஜராத்தோ, ஆந்திராவோ  செல்லத்  தீர்மானித்தார்கள்.
ஆனால், இந்த வாய்ப்பைத் தமிழகம் பயன்படுத்திக்கொண்டதா?
தமிழ்நாடுதான் கியாவின் முதல் தேர்வாக இருந்ததற்குக் காரணங்கள் உண்டு.
ஹூண்டாய் மோட்டார்ஸ் சுமார் 25 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருவதால், அதன் அருகிலேயே தன் தொழிற்சாலையை அமைக்க கியா மோட்டார்ஸ் விரும்பியது.

உள்நாட்டு விற்பனை தவிர, இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்ய சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் அதற்கு வசதியாக இருக்கும் என்று கருதியது.
சேஸி, ஆக்ஸில், சீட், இன்ஜின், கியர்பாக்ஸ், டயர், வீல், ஹெட்லைட்... என்று நூற்றுக்கணக்கான உதிரிப்பாகங்களை அசெம்பிளி செய்யும் - அதாவது கோக்கும் இடம்தான் கார் தொழிற்சாலை.
இந்த உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சென்னையைச் சுற்றிலும்தான் அதிகம். ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ எனப் பெருமை கொண்டது சென்னை.

எனவே கியா மோட்டார்ஸ் சார்பில் தமிழக அரசை அணுகினர்.
சென்னையை அடுத்த ஒரகடம் சிப்காட் வளாகத்தில் அவர்களுக்கு இடம் தருவதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது.
இதுகுறித்து 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி அன்று, சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘‘தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலை தொடங்குவது தொடர்பாக, கியா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டன. 390 ஏக்கரில் கியா தொழிற்சாலை அமைய இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

அதன் பிறகு கியா மோட்டார்ஸ் பற்றிய எந்தச் செய்தியும் ஊடகங்களில் வரவில்லை. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தின் பெனுகொண்டாவில் கார்  தொழிற்சாலையை அமைக்க, கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 600 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு ஒதுக்கி, பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்க வேண்டிய தொழிற்சாலை ஆந்திராவுக்கு ஏன் சென்றது?
இந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் இல்லை. இத்தனைக்கும் கியா மோட்டார்ஸ்,  ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்கும் பகுதி, தமிழ்நாட்டுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்குப் பின்தங்கிய பகுதி. சென்னையைப் போல அங்கே துறைமுகம் இல்லை.
உதிரிப்பாகங்களைத் தயாரித்துக் கொடுக்க சிறு தொழிற்சாலைகள் இல்லை. தண்ணீர் வசதி உட்பட எதுவுமே இல்லை. இருந்தாலும் கியா மோட்டார்ஸ் அனந்தப்பூர் செல்ல, காரணம் என்ன?

முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் ஆந்திர அரசின் தொழில்கொள்கை மட்டும் இதற்குக் காரணமில்லை.
தமிழ்நாட்டைவிட்டு நமது ஆட்சியாளர்கள் விரட்டியதுதான் முக்கியமான காரணம். இந்த உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் கண்ணன் ராமசாமி.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலோசகரான அவர், ‘‘தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்க, அதன் உண்மையான மதிப்பில் ஐம்பது சதவிகித தொகையைக் கூடுதலாக அரசியல்வாதிகள் கேட்டனர். வரிச்சலுகை, மின்கட்டணச் சலுகை, சாலை வசதி, தண்ணீர் வசதி, கழிவுநீர் வசதி ஆகியவற்றைச் செய்து கொடுக்கவும், முறையான அங்கீகாரங்கள் வாங்கவும் ஆட்சியாளர்கள் பெரும்தொகை லஞ்சம் கேட்டனர்.

இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும், கியா தொழிற்சாலை இந்தக் காரணங்களால்தான் தமிழகத்தை விட்டுப் போனது. கியா மட்டுமில்லை, அதோடு சேர்ந்து அமைய இருந்த சுமார் 70 துணை நிறுவனங்களும் ஆந்திரா போய்விட்டன’’ என்று பொட்டில் அறைவதைப் போல சொல்லியிருக்கிறார்.

இதுபற்றி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ், ‘‘ஆந்திர அரசு, தொழில் முதலீட்டாளர்களை விருந்தினர்களைப் போல வரவேற்று உபசரிக்கிறது. ஆனால், தமிழக அரசு வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது.
தொழில் தொடங்க வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், தமிழக அமைச்சர்கள் ‘எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள்’ என்று கேட்பதை விடுத்து ‘எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள்’ என்று கேட்கிறார்கள்.

ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, ‘தமது அரசின் சார்பில் எவ்வளவு வசதிகள் செய்து தரப்படும், என்னென்ன சலுகைகள் வழங்கப்படும்’ என்பதை விளக்குகிறார்.
முதலீடுகள் ஆந்திரத்தில் குவிவதற்கும், தமிழகத்தில் சரிவதற்கும் இதுதான் காரணம்’’ என்று கூறியிருப்பதை ‘வெறும் அரசியல்’ என்று யாராலும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

இதுபற்றி தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பதில் பெற பலமுறை முயற்சித்தும் இயலவில்லை.
அவர் தரப்பினர், ‘‘கண்ணன் ராமசாமி போன்றவர்கள் அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்புகிறார்கள்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒரே மாநிலத்தில் இரண்டு தொழிற்சாலைகளை அமைக்காது. கியா ஆந்திராவுக்குச் சென்றதற்கு இதுதான் காரணம். வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் நிறுவனங்கள் பலவும் நியாயமே இல்லாத பல சலுகைகளை எதிர்பார்க்கின்றன.
கியா நிறுவனம், சந்தை விலையை விட மிக மிகக் குறைவான விலையில் 400 ஏக்கர் நிலத்தைக் கேட்டது.
அது மட்டுமல்லாமல், இந்திய நிறுவனங்களுக்கு அரசு கொடுக்காத சலுகைகளை எல்லாம் அது எதிர்பார்த்தது” என்றனர். ‘அப்படியானால், கியா நிறுவனத்துக்கு 390 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக சட்டப்பேரவையில் ஏன் அறிவித்தீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அப்படியென்றால் ஆந்திராவில் எப்படி அவர்களுக்குச் சலுகைகள் கொடுத்தார்கள்? செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், ‘‘ஒரே ஒரு நிறுவனம்கூட தமிழகத்தைவிட்டு வெளிமாநிலங்களுக்குச் செல்லவில்லை’’ என்று கூசாமல் சொன்னார்.

சென்னைக்கு அருகிலேயே ஸ்ரீசிட்டி என்ற தொழில் நகரம், ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது. சென்னை மெட்ரோவுக்கான ரயில் பெட்டிகள்கூட இங்குதான் தயாராகின்றன.
இந்த மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை தொடங்கி, இசுஸூ மோட்டர்ஸ், ஃபாக்ஸ்கான், கோல்கேட் பாமாலீவ், கேட்பரீஸ் என்று பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வராமல் அங்கு போய்விட்டன. ‘ஒரு மாநிலத்தில் தொழில் துவங்குவது எத்தனை சுலபமான விஷயம்’ என்பதை அளந்து சொல்ல உலக வங்கியில் தொடங்கி மத்திய அரசின் Department of Industrial Policy and Promotion (DIPP) வரை பல அமைப்புகள் தரப்பட்டியலை அவ்வப்போது வெளியிடுவார்கள்.
அதை ‘Ease of doing business’ என்று குறிப்பிடுகிறார்கள். சமீபத்தில் DIPP வெளியிட்ட தரப்பட்டியலின்படி தமிழ்நாடு 18-வது இடத்துக்கு வீழ்ச்சியடைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றன.

2015-ம் ஆண்டு செப்டம்பரில், தமிழ்நாட்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது ரூ.2,42,160 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆனால், 2017 ஜனவரி மாதம், இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கு ஒன்றில் பேசிய தமிழக தொழில்துறை செயலாளர் விக்ரம் கபூர், ‘‘ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு இதுவரை வந்துள்ளது’’ என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதிலேயே ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு தாமதம் ஆவதாக செய்திகள் வெளியாகின. பல தொழில் நிறுவனங்கள் பல்வேறு அப்ரூவல்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து நொந்து போகின்றன. வெளியேறும் ஒவ்வொரு நிறுவனமும் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சேர்த்து பறித்துக்கொண்டு போகின்றன என்பதுதான் வேதனை.
இந்த நிலை எப்போது மாறும்?- வேல்ஸ்
ஓவியம்: ஹாசிப்கான்  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக