திங்கள், 29 மே, 2017

"இந்திய ஒன்றிய" த்திற்காக ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் குரல்?

சிவசங்கர் எஸ்.எஸ் : மேடையில் அருகில் அமர்ந்திருந்த கவிஞர் மனுஷ்யபுத்ரன் கேட்டார்,"நீட் தேர்வை எதிர்த்து வேறு எந்த மாநிலத்திலாவது
வழக்கு தொடர்ந்துள்ளார்களா ?". "வேறு எந்த மாநிலத்திலும் வழக்கு தொடர்ந்ததாக தகவல் இல்லை", என்றேன். "முதலில் நீட் தேர்வை எதிர்த்த மாநிலமும் தமிழகம் தான். இப்போது வழக்கு தொடர்ந்துள்ளதும் தமிழக மாணவி தான். நம்மவர்கள் வருமுன்னே உணர்ந்து விடுகிறோம். மற்றவர்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் கதறுகிறார்கள்", என்றார் கவிஞர்.
இது கடந்த 22.05.2017 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற, 'நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தியும், இந்தி திணிப்பை எதிர்த்தும் நடைபெற்ற கருத்தரங்க' மேடையில் நடைபெற்ற உரையாடல்.
"தமிழகம் கடந்த காலங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய போது, இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அதன் அபாயம் புரியாமல் அமைதியாக இருந்தனர். இப்போது இந்தி திணிப்பால் தங்கள் தாய்மொழி அழிக்கப்படும் நிலையை உணர்ந்துள்ளனர். அதனால் தான் மோடியின் இப்போதைய இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு தென் மாநிலங்களில் குரல் எழும்ப ஆரம்பித்து விட்டது.


கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் மலையாளம் கட்டாயம் என்று அறிவித்து விட்டார். மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வித்தியாசமான அறிவிப்பு கொடுத்து விட்டார். " மும்மொழி கொள்கையில் முதல் மொழி வங்காளம். மூன்றில் இந்தி ஒன்றாக இருக்க அவசியம் இல்லை" என்று சொல்லி விட்டார். இந்தி திணிப்புக்கு எதிரான குரல் மாத்திரமல்ல இது, தாய்மொழி அழிவதை தடுப்பதற்கான நடவடிக்கை.
தமிழகத்தின் 'இந்தி திணிப்பு எதிர்ப்பின்' நியாயத்தை இப்போது தான் உணர்ந்துள்ளார்கள் மற்ற மாநிலத்தவர்கள். இடஒதுக்கீடு தொடர்பாக தெலுங்கானா சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழகம் இடஒதுக்கீட்டில் முன்னோடி என்று கூறினார். தந்தை பெரியாரின் பணிகளை வியர்ந்து பாராட்டினார். நம் கொள்கைகளை ஒரு காலகட்டத்திற்கு பிறகு தான் மற்ற மாநிலங்கள் உணருகின்றன" என்றேன்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன், "ஆதி காலத்திலிருந்தே ஏதோ ஒரு விதத்தில் தமிழகம் முன்னோடியாகவே இருக்கிறது. அதே போல் தான் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வு எதிர்ப்பில் நாம் தான் முன்னோடி. மற்றவர்கள் இதை இப்போது தான் உணர ஆரம்பித்துள்ளனர். இப்படியே போனால், மோடி திராவிடநாட்டின் தேவையை மற்ற மாநிலத்தவருக்கு புரிய வைத்து விடுவார் போல. நாம் சொன்ன போது, அதை அலடசியப்படுத்தியவர்கள் விரைவில் குரல் கொடுக்க வாய்ப்பு வந்து விடும் எனத் தோன்றுகிறது", என்றார்.
ஒரு வாரம் தான். கடகடவென சம்பவங்கள் நடந்தேறி விட்டன. 22ம் தேதி நாங்கள் பேசியது, இன்று 29ம் தேதி தொலைக்காட்சியில் பரபரப்பான விவாதப் பொருளாகி விட்டது. அண்ணன் மோடியின் அறிவிப்பு தான் காரணம்.
மோடியின் "மாட்டுக் கொள்கை" கேரளாவை ஜல்லிக்கட்டு காளையாக்கி விட்டது. கேரளாவின் இரு பெரும் கட்சிகளான கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் ரோட்டுக்கு வந்து விட்டார்கள், இந்த அறிவிப்பிற்கு எதிராக. மாட்டுக்கறி சமைத்து உண்ணும் போராட்டம் ஊருக்கு ஊர் நடக்கிறது. கேரள மாநிலத்தில் பா.ஜ.கவினரே மாட்டுக்கறி பிரியர்களாகத் தான் இருப்பார்கள். முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படையாகவே எதிர் குரல் கொடுத்து விட்டார்.
அறிவிப்பு வந்த அடுத்த நொடியே மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் போரட்டத்தை துவங்கி விட்டனர் தமிழகத்தில். தளபதி மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அறிவிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், போராட்டம் அறிவித்துள்ளார். காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பா.ம.க எதிர்குரல் கொடுத்துள்ளது. ஆளும் அதிமுக மாத்திரம் வாய்பொத்தி நிற்கிறது.
இந்திய அளவில், டிவிட்டரில் ஒரு தலைப்பு டிரெண்டிங் ஆகியிருக்கிறது. அது 'திராவிடநாடு'. டிரெண்டிங் செய்தவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இதனால், நாளையே திராவிடநாடு மலர்ந்து விடும் என்பது கிடையாது. அவர்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்துவார்கள் என்பதும் உறுதி கிடையாது.
ஆனால், அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்ற உடன் அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம், தமிழன் ஏற்கனவே கையில் எடுத்த ஆயுதம், அதுவும் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தூக்கிய ஆயுதமான 'திராவிடநாடு'. இதிலிருந்து அந்த ஆயுதத்தின் சக்தியையும், வீரியத்தையும் உணர வேண்டும். பெரியாரின் திராவிடத் தாக்கத்தை மோடி உணர்ந்திருப்பார்.
'திராவிடநாடு' கொள்கையை கைவிட்ட போது அண்ணா சொன்னது, "திராவிடநாடு கொள்கையை நாங்கள் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன".
" திராவிடநாடு இனி தேவை இல்லை. அதற்கான தேவையை இந்தியா பூர்த்தி செய்து விட்டது" என அண்ணா சொல்லவில்லை. காரணம், என்றாக இருந்தாலும், மாநில உரிமைக்கு ஆபத்து வரும் போது, இந்தக் கோரிக்கையை யாராவது எழுப்புவார்கள் என்பதை அண்ணா உணர்ந்திருப்பார். அதனால் தான் 'கைவிடுகிறோம்' என்று சொன்னார்.
மோடி என்று ஒரு நபர் வருவார், அவர் திராவிடநாடு கோரிக்கையை தூசி தட்டி வெளியில் கொண்டு வருவார் என அண்ணாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
திராவிடநாடு என்று தெற்கு மாத்திரமல்ல, மாநிலங்களுக்கு சம உரிமை வழங்கு, மத்திய அரசின் சர்வாதிகாரத்தை விலக்கு என "இந்திய ஒன்றிய" த்திற்காக ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் குரல் கொடுக்கும் நாள் வந்தாலும் வரும், மோடியால்.
# மாடு மூர்க்கமாகிறது, ஜாக்கிரதை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக