திங்கள், 8 மே, 2017

தலித் மக்களிடம் நிலங்கள் இருந்தன, வேளாளர்கள் அடிமைகளாயிருந்தனர்: ஓலைச்சுவடியில் ஆதாரம்!

பனை ஓலைச்சுவடிகள். |
முன்னொரு காலத்தில் தலித் மக்களிடம் நிலங்கள் இருந்தன, வேளாளர்கள் அடிமைகளாயிருந்தனர்: ஓலைச்சுவடியில் தகவல் ;பி.கோலப்பன்  : பனை ஓலைச்சுவடிகள். | சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பனைஓலைச் சுவடியில் நாஞ்சில் நாட்டில் அடிமை வியாபாரம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. நாஞ்சில் நாடு தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்ததாகும்.
“மிகப்பெரிய வறட்சி எங்களை ஒன்றுமற்றவர்களாக்கியது, கஞ்சிக்கு வழியில்லை, எங்கள் கால்களும், கெண்டைச் சதையும் வீங்கி எங்களால் நடக்க முடியவில்லை. எனவே எங்கள் குடும்பத் தலைவரின் அறிவுரைப்படி எங்களை நாங்களே ராமன் ஐயப்பன் என்பவரிடம் விற்றுக் கொண்டோம்”
1459-ம் ஆண்டு ஓலைச் சுவடி மேற்கண்ட இருண்ட கதையை பதிவு செய்துள்ளது. கேரளா சாம்பன் மகன் அயவன், இவரது உறவினர் தடியன், சகோதரி நல்லி ஆகியோர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டபோது பதிவான குறிப்பே மேற்கூறியதாகும்.  தலித் மக்களின் நிலத்தை பறித்து பார்ப்பனர்களிடம்  தாரை வார்த்து விட்டனர் சேர சோழ பாண்டியர் முதலான அரசர்கள் ..
தென் திருவாங்கூரின் அட்சயப்பாத்திரம் என்று கருதப்படும் நாஞ்சில் நாட்டின் பசுமையான வயல்வெளிகளுக்கு அடியில் இத்தகைய அடிமை வியாபார வரலாறு புதைந்து கிடக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இப்பகுதியில் அடிமைமுறை வெகு சகஜமாக இருந்து வந்துள்ளது.
இந்த ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட இன்னொரு தகவல் சுவாரசியமானது, திருவாங்கூர் மன்னர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த, நிலம் வைத்திருந்த வேளாளச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் வறுமையின் கோரப்பிடியில் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர், மாறாக அடிமைகளாக விற்கப்பட்டவர்களான தலித்துகளில் ஒரு சிலர் நிலவுடைமைதாரர்களாக இருந்துள்ளனர்.
“முதலியார் ஓலைகள்” என்று அழைக்கப்படும் ஒன்றின் பகுதியான 19 பனைஓலைச் சுவடிகள் அக்காலத்திய நடைமுறைகளை விவரித்துள்ளது. தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள இது பல இடங்களில் மலையாளமும் கலந்து வந்துள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் ஒரு கூட்டிணைந்த கலாச்சாரம் இருந்து வந்தது தெரிகிறது.
காலச்சுவடு பதிப்பகம் ‘முதலியார் ஓலைகள்’ ஆக்கங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இதனை மொழிபெயர்த்து தொகுத்து அளித்த நாட்டுப்புறவியல் துறையைச் சேர்ந்த ஏ.கே.பெருமாள் இது குறித்துக் கூறும்போது, “1601-ம் ஆண்டு ஓலைச்சுவடி பதிவொன்றில் அவையாத்தான், கோணாத்தான் என்ற இரண்டு தலித்கள் தங்களிடமிருந்த நிலங்களை விற்றதற்கான குறிப்பு இடம்பெற்றுள்ளது. எனவே தலித்களில் சிலர் நிலச் சொந்தக்காரர்களாகவும் இருந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் பகுதியில் குடும்பத்தலைவரை அழைக்கும் பதமே ‘முதலியார்’ ஆகும். சைவ வேளாளர்களுக்கு முதலியார்கள் என்ற பட்டம் திருவாங்கூர் மன்னர்களால் வழங்கப்பட்டது. இவர்களே மன்னனுக்குப் பதிலாக நாஞ்சில்நாட்டை ஆண்டு வந்தனர்.
மறைந்த கவிஞர் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை 1903-ல் சில ஓலைச்சுவடி எழுத்துகளை நகல் எடுத்தார். அடிமைகள் ஏலம் குறித்த குறிப்புகள், மற்றும் அக்காலத்திய வருவாய் முறை, விவசாயத்திற்கான நீர் தரும் குளம், குட்டைகள், ஆறுகள் ஆகியவற்றை பராமரித்த முறைகள் பற்றியும், பல சாதிச்சமூகத்தினரின் தொழில் ஆகியவை பற்றிய குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன.
நடப்பு காலத்திய நிலவரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக செல்வந்த தலித்துகள் பற்றி இந்த ஓலைச்சுவடிகள் பேசுகின்றன.
1462-ம் ஆண்டு ஓலை ஒன்றில், சம்பந்தன் செட்டி என்பவர் ‘கலியுக ராமன் பணம்’ (அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்த பணம்) நான்கை வாங்கியதான குறிப்பு காணக்கிடைக்கிறது. அதாவது சாம்பவர் சாதியைச் சேர்ந்த கேசவன் என்பவரிடமிருந்து வாங்கியதாக குறிப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த சாம்பவர் பிரிவு தலித்துகளின் ஒரு பிரிவினரே. 1484-ம் ஆண்டு ஓலையில் ‘பெரும்பறையன் என்பாரின் சொத்துக்கு தெற்கே’ என்ற குறிப்பு காணப்படுகிறது.
பெண்கள்:
முனைவர் பெருமாள் கூறும்போது, “வேளாளர்களைப் பொறுத்தவரை பெண்களை அடிமையாக விற்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது, இவர்கள் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தனர். அடிமைகளுக்கான ஏலம் தொடங்கும் போதே வேளாளர்களை வேளாளர்களே அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்படும்” என்றார்.
வேளாளகுல அடிமைப்பெண்கள் ‘வெள்ளாத்தி’ என்று அறியப்பட்டவர்கள். சென்னைப் பல்கலைக் கழக சொல்லகராதியின் படி வெள்ளாத்தி என்றால் பணிப்பெண் அல்லது அடிமை என்று பொருள்.
“மேல்சாதி அடிமைகளிலிருந்து தலித் அடிமைகள் முற்றிலும் வேறுபடுத்தப்பட்டனர். வெள்ளாத்திகள் பெரும்பாலும் வீட்டுப் பணிப்பெண்களாக இருந்தனர்” என்கிறார் முனைவர் பெருமாள். இவர்தான் திருவனந்தபுரம் ஆவணக்காப்பகத்திலிருந்து இந்த சுவடிகளைச் சேகரித்தார்.
அதாவது உயர்சாதிப் பெண்கள் கீழ்சாதி ஆடவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அப்பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர்.
அலூர் (தற்போதைய கல்குளம் தாலுகா), ஆரல்வாய்மொழி, தாழக்குடி (தோவலம் தாலுக்கா), மற்றும் ராஜக்கமங்கலம் ஆகிய ஊர்களில் அடிமை சந்தைகள் இருந்து வந்துள்ளதாக பெருமாள் தெரிவித்தார்.
திருவாங்கூர் அடிமை வரலாற்றை ஆய்வு செய்த கே.கே.குசுமான் என்பவர், அடிமைகளுக்கான விலை சமூக படிமுறையைப் பொறுத்து அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். அடிமை விற்பனை முறையில் சாதி என்பது முன்னொட்டாக இருக்கும்.
பெருமாள் குறிப்பிடும்போது, வறுமையே அடிமை முறைக்குக் காரணம் என்கிறார். 1458-ம் ஆண்டு சுவடியில் அடிமை ஒருவர் கூறுவதான குறிப்பில், “வறுமையின் காரணமாகவே நாங்கள் எங்களை விற்றுக் கொண்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் வாங்கிய கடன் மற்றும் வட்டித் தொகையை கொடுக்க முடியாமல் தந்தையும் மகளும் கொத்தடிமைகளாக மாறியதை இன்னொரு சுவடி விவரித்துள்ளது.
திருவாங்கூரில் ஜூலை 18, 1853-ல் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
தமிழில்: முத்துக்குமார்  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக