செவ்வாய், 9 மே, 2017

பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன ?

வினவு:  அந்த நபர் மேடைகளில் காட்டும் சேட்டைகளும், யோகா எனும் பெயரில் நடத்தும் ‘ஸ்டேண்டப் காமெடிகளும்’, நிகழ்ச்சிக்கு இடையிடையே சொல்லும் மலிவான நகைச்சுவைத் துணுக்குகளும் தென்நாட்டில் – குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு – வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்தி பேசும் வட மாநிலங்களில் அவர் கடவுளுக்கு நிகரானவர். சிக்கலான ஆன்மீக தத்துவங்களைச் சொல்லிக் குழப்பாமல் வெறுமனே சில எளிமையான ஜிம்னாஸ்டிக் வித்தைகளின் மூலம் சிறப்பாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார். வடக்கே கோடிக்கணக்கானவர்கள் – சகல வர்க்கப் பின்புலத்தைச் சார்ந்தவர்களையும் உள்ளிட்டு – அவருக்கு பக்தர்களாக இருக்கின்றனர். யோகாவைக் கடந்த மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியம் ஒன்றின் அதிபதியான அவரின் பெயர், பாபா ராம்தேவ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்தி பேசும் வட மாநிலங்களில் பாபா ராம்தேவ் கடவுளுக்கு நிகரானவர்.
பாபா ராம்தேவையும் அவரைப் பின்தொடரும் இந்தி பேசும் வடமாநில நடுத்தரவர்க்க பக்தர் கூட்டத்தையும், பாபா ராம்தேவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சமீபத்திய அசுர வளர்ச்சியையும், பாரதிய ஜனதாவையும் அதன் தேர்தல் வெற்றிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. ராம்தேவின் பதஞ்சலி 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெல்லும் குதிரையாக பாரதிய ஜனதாவைக் கணித்து அப்போதே அந்தக் கட்சிக்கு கனமாக தேர்தல் நன்கொடை வழங்கியதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெறப்பட்ட விவரங்கள் உணர்த்துகின்றன.
பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் இன்றைய தேதியில் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறார் ராம்தேவ். யோகாவின் மூலம் ஈட்டும் வருமானத்தின் கணக்கு தனி.  2011 – 2012 காலகட்டத்தில் லோக்பால் மசோதாவைக் கோரி அன்னா ஹசாரே களமாடிக் கொண்டிருந்த போது காங்கிரசின் ஊழல்களால் அதிருப்தியுற்று நாடெங்கும் திரண்ட மக்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்புவதற்காக இந்துத்துவ முகாம் சார்பில் ராம்தேவ் களமிறக்கப்படுகிறார்.
ஜன்லோக்பால் கோரிக்கை மற்றும் ஊழலின் மீதான அதிருப்தியை மோடியின் வெற்றியாக மடை மாற்றிய பிறகு மிக குறுகிய காலத்தில் ராம்தேவின் தொழில் சாம்ராஜ்ஜியம் பல மடங்காக விரிவடைந்துள்ளது. மிக குறுகிய காலத்தில் ராம்தேவின் தொழில் கூட்டாளி பாலகிருஷ்ணா இந்தியாவின் 100 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இன்றைய தேதியில் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பே 16,000 கோடிகள் என்றால், ராம்தேவின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பற்பசையில் இருந்து அழகு சாதனப் பொருள் வரை சுமார் 445 பொருட்களை சந்தையின் விற்கும் பதஞ்சலியின் தொழில் வெற்றி என்பது பாரதிய ஜனதாவின் தேர்தல் அரசியல் வெற்றியோடும் பாரதிய ஜனதாவுடன் பாபா ராம்தேவுக்கு உள்ள உறவோடும் தொடர்புடையது. மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் அமைந்துள்ள பாரதிய அரசாங்கங்கள் பதஞ்சலிக்கு வாரி வழங்கியுள்ள சலுகைகளின் பட்டியல் மிக நீண்டது.
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “யோகாவை வளர்ப்பது” என்கிற முகாந்திரத்தில் அந்தமான் அருகே ஒரு தீவையே ராம்தேவுக்குப் பரிசளித்துள்ளார். கடந்த ஆண்டும் ஆகஸ்டில் இருந்து மத்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை (DRDO) பதஞ்சலியின் ‘மூலிகை’ பொருட்களை விற்பதற்கு அந்நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொள்வது குறித்து அறிவித்துள்ளது.
பல்லாயிரம் கோடிகளை கொட்டி டி.ஆர்.டி.ஓவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுவதாக சொல்லப்படும் இலகு ரக போர் விமான இஞ்சினான காவேரி, டி.ஆர்.டி.ஓவின் பெங்களூரு மையத்தில் தூசு படிந்து கிடக்கின்றது. இந்நிலையில் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தில் நடந்த தனது சொந்த  ஆராய்ச்சியை பரணில் போட்டு விட்டு ராம்தேவின் பதஞ்சலி ஊறுகாயை விற்பதற்கு முண்டியடிக்கிறது டி.ஆர்.டி.ஓ. இத்தனைக்கும் இராணுவ உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த பதஞ்சலியின் நெல்லிச்சாறு குடிப்பதற்கு ஒவ்வாதது என்பதைக் கண்டறிந்து அதன் விற்பனை சமீபத்தில் தான் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜுவல் ஓரம், தமது அமைச்சகம் ராம்தேவுடன் இணைந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், பதஞ்சலி சந்தைப்படுத்தி வரும் பல்வேறு உணவுப் பொருட்கள் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் (FSSAI) சான்று பெறவே இல்லை. மட்டுமின்றி, பதஞ்சலியின் பல்வேறு உணவுப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணமாக, எம்.பி எக்ஸிம் என்கிற வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து தேனைக் கொள்முதல் செய்யும் பதஞ்சலி, அதன் மேல் தனது வணிக முத்திரையை ஒட்டி சந்தைப்படுத்துகின்றது. தேன் மட்டுமின்றி, பதஞ்சலி சந்தைப்படுத்தும் பல பொருட்களும் இவ்வாறே விற்கப்படுகின்றன. எம்.பி எக்ஸிம் உற்பத்தி செய்யும் தேனில் சர்க்கரை அல்லது சாக்ரினுடன் எதிர்உயிரிகளும் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பதஞ்சலியின் பொருகளுக்கு வட இந்தியாவில் சந்தை மதிப்பு அதிகம் என்பதைக் கணக்கில் கொண்டு வேறு ஒரு சில்லறைத்தனத்திலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. பதஞ்சலியின் பொருட்களுடைய முகப்பில் அந்தப் பொருளின் சேர்வையுறுப்புகள் (ingredients) எழுதப்பட்டிருக்கும். இதில், மூலிகைகளின் பெயர்கள் இந்தியிலும், வேதிப் பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. “முழுமையான ஆயுர்வேத தயாரிப்பு” என விளம்பரப்படுத்தி விற்கப்படும் பதஞ்சலியின் வேதிப் பொருட்களில் சில ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகும்.
பதஞ்சலி பொருட்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையிலேயே மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு தமது மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அவற்றை விற்பதாக அறிவித்துள்ளது. இத்தனைக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களே கூட கிடைப்பதில்லை. அம்மாநில விவசாயத் துறை அமைச்சர் கௌரிசங்கர் பிசென் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட வேண்டிய கோதுமையில் 90% சட்டவிரோதமான கள்ளச்சந்தைக்கு திருப்பி விடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2017 பிப்ரவரி மாதம் மத்திய வருமான வரித் தீர்ப்பாயம் (ITAT) பதஞ்சலி யோக பீடத்திற்கு  வருமான வரிவிலக்கு சலுகையும் அறிவித்துள்ளது. மேலும் பதஞ்சலி யோகபீடத்திற்கு வரும் நன்கொடைகளுக்கும் வருமான வரிவிலக்கு அறிவித்துள்ளது.

புதிய சுதேசி ரக கோதுமை மற்றும் மிளகாய் விதைகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.
இதற்கிடையே உத்திராகண்ட் மாநிலத்தில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள பதஞ்சலி, அதற்கென ஏக்கர் கணக்கில் நிலத்தையும் பெற்றுள்ளது. தற்போது சுமார் பத்தாயிரம் கோடி வருவாய் ஈட்டும் தனது நிறுவனத்தின் எதிர்கால வணிக இலக்காக ஆயுர்வேதத்துடன் விவசாயப் பொருட்களையும் இணைத்துள்ளது பதஞ்சலி. இதற்கான ஆராய்ச்சிகளை உத்திராகண்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையத்தில் மேற்கொண்டு வருகின்றது. மோடியால் கடந்த மே 4-ம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் புதிய சுதேசி ரக கோதுமை மற்றும் மிளகாய் விதைகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.
மேலும், மாட்டின் கழிவில் இருந்து பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியும் இந்த மையத்தில் நடந்து வருகின்றது. பினாயிலுக்கு மாற்றாக மாட்டு மூத்திரத்தில் இருந்து (கோனாயில் என்கிற வணிகப் பெயரில்) தரையைச் சுத்தமாக்கும் திரவம் உள்ளிட்டு பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் திட்டத்திற்காக மாதம் ஐயாயிரம் லிட்டர் மாட்டு மூத்திரத்தை உத்திராகண்ட் மாநில அரசிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
கோனாயில் வணிக ரீதியில் வெற்றி பெறுமா பெறாதா (அல்லது அது உண்மையிலேயே இயற்கையானதா இல்லையா) என்கிற வாதம் ஒருபுறம் இருக்க, வடமாநிலங்களில் இந்துமதவெறி குண்டர்கள் முன்னெடுத்து வரும் ‘கோமாதா’ அரசியலுக்கு ஒரு பொருளியல் அடிப்படையை உண்டாக்கித் தருகின்றது பாபா ராம்தேவின் பிராடு ஆராய்ச்சிகள். பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் ஆய்வுகளின் விளைவாக நாட்டுப் பசுக்கள் அபிவிருத்தி அடைவதுடன், பால் பொருட்களின் மூலம் நெஸ்லே போன்ற விதேசி நிறுவனங்கள் லாபமடைவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்கிறார் பாபா ராம்தேவ். பன்னாட்டு நிறுவனங்களை இப்படி கேலி பேசுவதால் பெரிய பிரச்சினை இல்லை. இல்லையென்றால் அமெரிக்க அடிமைகளான சங்க வானரக் கூட்டத்தை பகவான் டொனால்ட் டிரம்ப் உண்டு இல்லை என்று பிய்த்து விடுவார்.

பா.ஜ.க. வின் வெற்றியையும் பதஞ்சலியின் வெற்றியையும் பிரித்து பார்க்கமுடியாது
இந்துத்துவ அரசியலின் அக்கம் பக்கமாகவே ஆயுர்வேதத்தையும் தனது பிற தொழில் நடவடிக்கைகளையும் சந்தைப்படுத்துகிறார் பாபா ராம்தேவ். பதஞ்சலி சந்தைப்படுத்தும் பொருட்களை கேள்வி கேட்பவர்களையும், அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பவர்களையும், அந்தப் பொருட்கள் கறாரான தரக்கட்டுப்பாட்டு முறைமைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பவர்களையும் “இந்து வாழ்க்கை முறைக்கு” எதிரானவர்களாக சித்தரிக்கிறார் பாபா ராம்தேவ். அதாவது, அதிதீவிர இந்து தேசிய வெறியை அப்படியே வணிகமாக்குவதே இந்த உத்தி.
பசுப் பாதுகாப்பு, லவ் ஜிஹாத், ராமர் கோவில், இசுலாமிய வெறுப்பு என நேரடியாக இந்துத்துவ அரசியலை திணிக்கும் அதே நேரம், ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக சாதிய சமன்பாட்டை தமக்குச் சாதகமாகத் திருப்புவது, மதச்சார்பற்ற, பல்தேசிய இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் இடத்தில் பார்ப்பன இந்து மத உணர்வையும் கலாச்சாரத்தையும் மாற்றீடு செய்வது உள்ளிட்ட தந்திரங்களைக் கையாள்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கலாச்சார ரீதியில் நடுத்தரவர்க்க இந்துப் பொதுபுத்தியை தமது அரசியலுக்காக தயார்ப்படுத்த ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களை பயன்படுத்திக் கொள்கின்றது.
வனங்களை வெட்டிச் சூறையாடிய ஜக்கி வாசுதேவுக்கு விருது, ஸ்ரீஸ்ரீ ரவி சங்கரின் யமுனை ஒழிப்பு விழாவை பெரிய அளவு கண்டுகொள்ளாமல் இருப்பது, பாபா ராம்தேவின் தொழில்களுக்கு விதிகளைத் தளர்த்துவது மற்றும் அரசுத் துறைகளைக் கொண்டே உதவுவது என கைமாறு செய்கிறது பாரதிய ஜனதா அரசு. இணைய தளங்களில் பாபா ராம்தேவின் யோகாவையோ, அவரது பதஞ்சலி பொருட்களையோ விமர்சிப்பதை ஏறக்குறைய இந்து மத துவேஷத்திற்கு இணையாக வைத்து வாதிடுகின்றனர் இணைய ஆர்.எஸ்.எஸ் கூலி கும்பல்.
போராடும் விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கத் தயாராக இல்லாத பிரதமர், ஃபிராடு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தைத் துவங்க ஹெலிகாப்டரில் பறக்கிறார். இதைவிட இவர்கள் மக்கள் விரோதிகள் என்பதை நிரூபிக்க வேறு சான்றுகள் தேவையா என்ன?
– சாக்கியன் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக