புதன், 17 மே, 2017

1,250 கோடி முதல் தவணையாக வழங்க அரசு தயார்: முடிவுக்கு வந்தது போராட்டம்!


1,250 கோடி வழங்க அரசு தயார்: முடிவுக்கு வந்தது போராட்டம்!கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகம் முழுவதும் ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் கைவிடப்பட்டது. மே 16ஆம் தேதியான நேற்று மாலை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பயனாக பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்தது. குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தையில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், டிடிஎஸ்எப், டிஎம்டிஎஸ்பி, பிடிஸ், எம்எல்எஃப், ஏஏஎல்எஃப், டிடபிள்யூ, ஏடிபி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் தொமுச சார்பாக சண்முகம் மற்றும் சிஐடியூ-வுக்காக சவுந்திரராஜன் போன்ற பல முக்கியத் தலைவர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில், “இப்படியொரு கூட்டத்தில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணை 750 கோடி ரூபாயோடு, வருகிற செப்டம்பர் 2017இல் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்குத் தருவதாக சொன்ன ரூ.500 கோடியையும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 1,250 கோடி ரூபாய் போக்குவரத்து ஊழியர்களுக்கு, அரசு உடனடியாக வழங்கும். மேலும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை பாக்கியை வருகிற செப்டம்பர் 2017 மாத இறுதிக்குள் நிச்சயம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஊழியர்களின் சம்பளங்களில் பிடித்தம் செய்யும் தொகையை முறைப்படுத்தப்படுவதோடு, போக்குவரத்து கழகங்களின் நிதி நிலையும் படிப்படியாகச் சீர் செய்யப்படும்” என விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 13ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அமல் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படவிருக்கிறது. அதாவது குறிப்பாக, வருகிற மே 24ஆம் தேதி போக்குவரத்து செயலர் முன்னிலையிலும், ஜூன் 1ஆம் தேதி மற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையிலும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நிகழவிருக்கிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக