ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

ஹிந்தி திணிப்பு.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை ... youtube


சென்னை : திட்டமிட்டே இந்தி மொழியை திணிக்க முயலும் மத்திய அரசுக்கு திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம், அமைச்சர்கள் இந்தியில் உரையாற்ற, அறிக்கை வெளியிட ஒப்புதல் என மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிப்பதாகவும் இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் தானே பேசும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என்கிற நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். விமானநிலைய அறிவிப்புகள், பத்திரிகை செய்திகள், விளம்பரங்கள் எனப் பலவற்றிலும் இந்தியை பரவச் செய்யும் அம்சங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.


தொடர்ந்து 4 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ பேச்சில் "பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளியிடும் விளம்பரங்கள் எந்த மொழியில் இருந்தாலும், அந்த சொற்கள் இந்தி உச்சரிப்பாகவே அமைகின்றன. ஆசிரியர் தினத்தைக்கூட குரு பூர்ணிமா என மாற்றியது மோடி அரசு. இந்தி மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்ற மொழிகள் பேசும் இந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது" என்று பேசியுள்ளார்.

 "இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும். தாய்மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை 1938ம் ஆண்டு முதலே எதிர்த்து நின்று வெற்றி கண்ட நிலம், தமிழகம். இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம்" என்றும் வீடியோ பதிவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

எச்சரிக்கை:  ஸ்டாலினின் தமிழ் உரைக்கு ஆங்கில சப்டைட்டிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதன் மூலம் இது தமிழக மக்களுக்கு மட்டும் தெரியபடுத்தும் செய்தியாக இல்லாமல் மத்திய அரசும் திமுகவின் எச்சரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனே வெளியிடப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக