சனி, 22 ஏப்ரல், 2017

சவுக்கு சாட்டை : எம்ஜிஆர் ஆட்சி காலம் முதல் தமிழகத்தை சீரழித்து வந்துள்ள லும்பன் கட்சி....

article-2120782-12583E28000005DC-831_634x443அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பதை சவுக்கு பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. மொழி, இனம், பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளால் உருவான கட்சி திமுக.  ஆனால் வெறும் நடிகரின் முகத்தைப் பார்த்து உருவான கட்சி அதிமுக.  நடிகரால் உருவான ஒரு கட்சியை பின்னாளில் ஒரு நடிகை கைப்பற்றி, அந்த நடிகையின் காலில் விழுந்து கிடந்தவர்களே இன்றைய அதிமுக உறுப்பினர்கள்.     அந்தக் கட்சியில் லும்பன்கள் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள் ?
அந்தக் கூற்றை உண்மையாக்கும் சம்பவங்களைத்தான் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார்.  பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலளாராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பன்னீர் செல்வமே சசிகலாவை சந்திக்க போயஸ் தோட்டம் செல்கிறார்.   போயஸ் தோட்டம் சென்றதும், சசிகலாவின் காலில் விழுகிறார்.    அவரைத் தொடர்ந்து இதர அமைச்சர்களும் விழுகின்றனர்.

இந்தக் காட்சிக்கு பிறகு, சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கூக்குரல் அதிமுக அடிமைகளால் உரக்க எழுப்பப் படுகிறது.  ஒரு சில அடிமை அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மொட்டை போட்டுக் கொண்டு, சின்னம்மா தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். ராஜினாமா செய்த ஒரு சில தினங்களில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று   தியானம் செய்கிறார். புத்தருக்கு கிடைத்த ஞானத்தைப் போல,   தியானம் செய்ததும் அவருக்கு கிடைத்த புதிய ஞானத்தின் அடிப்படையில், சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்.  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் என்கிறார்.   ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும் ஆட்சியும் செல்லக்கூடாது என்கிறார். சசிகலா அம்மாவால் வெளியேற்றப்பட்டவர் என்கிறார்.
வெகுண்டெழுந்த சசிகலா, பன்னீர்செல்வத்துக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் ரகசிய கூட்டு என்கிறார்.  “சட்டப் பேரவையில் இருவரும் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர்” என்கிறார்.   இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடக்கிறது.  மன்னார்குடி மாபியா அணிக்கு சொந்தமான எம்எல்ஏக்கள் கூவத்தூரில் ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.   அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் தாவி விடாமல் இருக்க அனைத்து எம்எல்ஏக்களும் வெகுவாக கவனிக்கப்படுகின்றனர்.
sasikala-addresses-media_8ebe9e38-ee78-11e6-b62a-376882c41036
ஒரு வாரத்துக்கு இந்த கூத்து நடக்கிறது.   உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஆளுனர் அனைவரையும் காக்க வைக்கிறார்.    தீர்ப்பு சசிகலாவை குற்றாளி என்று அறிவிக்கிறது.     சிறை செல்வதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டப்பேரவை தலைவர் அடுத்த முதல்வர் என்று முன்மொழிகிறார்.  கூவத்தூரில் எம்எல்ஏக்கள் கவனிக்கப்பட்டதற்கு பெரும் தொகையை செலவழிக்கிறார் எடப்பாடி.    முதல்வராகவும் ஆக்கப்படுகிறார் எடப்பாடி.
அதிமுகவில் அடுத்த முன்னேற்றமாக, சசிகலாவின் உத்தரவுப்படி, டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்கிறார்.   அவர் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்றதும், அடிமைகள் அனைவரும் டிடிவியைச் சுற்றி வலம் வருகின்றனர்.    ஆர்.கே நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.   இதனிடையே கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் கடுமையாக போராடுகின்றன.    தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்குகிறது.  பன்னீர்செல்வத்துக்கு இரட்டை தெருவிளக்கும், சசிகலா அணிக்கு தொப்பியும் வழங்கப்படுகிறது.
டிடிவி தினகரன் சசிகலா பிரிவின் ஆர்கே நகர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.    அமைச்சர்கள், முதலமைச்சர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆர்கே நகரிலேயே தவமிருக்கின்றனர்.    ஒருவர் தவறாமல் அனைவரும் தொப்பி அணிந்து வலம் வருகின்றனர்.     பணம் தாறுமாறாக ஆறாக ஓடுகிறது.  எப்படியாவது டிடிவி தினகரனை ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அடிமைகள் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர்.
201703241212534996_CM-campaigns-with-hat-says-Dinakaran-will-fill-Jayas-void_SECVPF
மறுபுறம் அம்மாவின் சிகிச்சையில் மர்மம், விசாரணை கமிஷன் அமைக்கும் வரையில் தர்மயுத்தம் தொடரும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் தரப்பு வேட்பாளர் மதுசூதனுக்காக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து வந்தார்.   ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது நிலவி வந்த மர்மங்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே  பன்னீர்செல்வம்,   முதலமைச்சர் பதவி கிடைத்து, சசிகலா தொந்தரவு தரும் வரை அமைதியாக இருந்த அதே பன்னீர்செல்வம்தான் வெட்கமே இல்லாமல், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று இன்று வரை பேசி வருகிறார்.
அதன் பின் வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.     சோதனையில் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் மூலமாக 89 கோடி ரூபாய் விநியோகிக்கப் பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.    அமைச்சரின் உதவியாளர்கள் இருவர் வீட்டிலிருந்து 5.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.    இந்த சோதனைகளைத் தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன.  சோதனைகள், வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் விநியோகம் செய்ததை உறுதி செய்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை பண விநியோகத்தை காரணம் காட்டி ரத்து செய்தது. இந்த சூழலில்தான் டெல்லி காவல்தறை சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்கிறது.   டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் மூலம் 50 கோடி ரூபாயை கொடுக்க முனைந்தார்.  அதன் முதற் கட்டமாக சுகேஷ் சந்திரசேகரிடம் 1.30 கோடியை கொடுத்திருந்தார்.  அதன் பேரில் டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து அதிமுக டிடிவி அணியில் சலசலப்புகள் தென்படத் தொடங்கின. ஓபிஎஸ், இணைப்புக்கு தயார் என்று வெடியைக் கொளுத்திப் போட்டார். அன்று இரவு அனைத்து அமைச்சர்களும் கூடினர்.    இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.  வெளியே வந்து, இரட்டை இலையை மீட்பது குறித்து பேசினோம் என்றனர்.
இதே போல மறு நாள் கூடினர்.   டிடிவி தினகரன் குடும்பத்தை விலக்கி வைப்போம் என்று அறிவித்தனர். கட்சியையும் ஆட்சியையும் நடத்த குழு அமைப்போம் என்றனர்.  இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இணையுமா ?  டிடிவி என்ன செய்வார் என்று பரபரப்பு எழுந்தது.   செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பெரிய மனிதன் போல பேசினார்.  மிக லாவகமாக செய்தியாளர்களை கையாண்டார்.    “முன்பே சொல்லியிருந்தால் நானாகவே விலகியிருப்பேனே.   நான் நேற்றே கட்சியை விட்டு விலகி விட்டேன்.  அவர்கள் ஏதோ பயத்தில் இருக்கின்றார்கள்.   நான்கு நாட்கள் முன்னதாக என்னோடு நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது திடீரென்று ஏன் விலகுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.
சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வத்தின் பாடிலேங்குவேஜே மாறியிருந்தது.    எங்கள் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.  இனி படிப்படியாக பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.
அதிமுக என்ற லும்பன்களின் கட்சி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடந்து கொண்ட விதம், அது லும்பன்களின் கட்சிதான் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த அரசியல் மாற்றங்களின் பின்னணியில் மோடி இருக்கிறாரா என்ற சந்தேகமே எழ வேண்டாம்.    உத்தரப் பிரதேச வெற்றிக்குப் பின்னால் எப்படியாவது கொல்லைப் புற வழியாகவாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும், அதிமுக என்ற கட்சியை அழித்து, நசுக்கி அதனை தன் கைப்பாவையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான அத்தனை சித்து வேலைகளையும் மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்.
டிசம்பர் மாதம் 170 கோடி பணம் மற்றும் 127 கிலோ தங்கம் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்டு, அது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டது முதலே, பன்னீர் செல்வம், மோடியின் வளையத்துக்குள் வந்து விட்டார்.    சேகர் ரெட்டியை தொடர்ந்து மிரட்டலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெறும் வரை காத்திருந்து, அதன் பின்னர், மார்ச் 21ல் அவர் மீண்டும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.    சேகர் ரெட்டியின் பணப் பரிவர்த்தனைகள் அத்தனையும் மத்திய அமைப்புகளின் வசம் வந்து விட்டன.    ஒரு சாதாரண நபராக இருந்த சேகர் ரெட்டி, தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்குமான பணப் பரிவர்த்தனைகளை நடத்திக் கொடுக்கும் அளவுக்கு எப்படி வளர்ந்தார் என்ற கேள்விக்கான ஒரே வார்த்தை பதில் “மணல்”.  மணல் மூலம் சேகர் ரெட்டி இத்தனை பெரிய உயரத்துக்கு வளர்ந்திருக்கிறார் என்றால், 2011 முதல் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு இருக்கும் ?    மன்னார்குடி மாபியா கூட்டத்தைப் போலவே, பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அவரது மருமகன் காசி மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா ஆகியோர் இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிகள் என்ற விபரம் மோடிக்கும் மத்திய அரசு அமைப்புகளுக்கும் தெரியாதா என்ன ?
p08a
சிறையில் உள்ள சேகர் ரெட்டியிடம், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, பன்னீர்செல்வத்தின் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்ய வைக்க உத்தரவிட எவ்வளவு நேரம் பிடிக்கும் ?  இவையெல்லாம் பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.   இதன் காரணமாகத்தான் பிஜேபியின் ஏஜென்டாகவே பன்னீர்செல்வம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். பிஜேபியின் சொல்படி ஆடிக் கொண்டிருக்கிறார்.
சரி. பன்னீர்செல்வம்தான் அயோக்கியர்.  எதிர் அணியில் உள்ள மற்றவர்கள் எல்லாம் யாரென்றால், ஒவ்வொருவர் பின்னாலும் பல கோடி கள்ளப்பணம் இருக்கிறது.   இவர்கள் ஒவ்வொருவரும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில்தான் உள்ளனர்.  பொய் வழக்கு போட வேண்டிய அவசியத்தையே மோடிக்கு வைக்காதபடி, அதிமுகவின் அமைச்சர்கள் அத்தனை பேரும் பெரும் ஊழல் மூட்டையின் மீதுதான் அமர்ந்துள்ளார்கள். ஜெயலலிதா அமைச்சரவையில் யோக்கியனா இருப்பான் ?
இப்படி அதிகமுகவை ஒடுக்கி, மூலையில் அமரவைத்து, இரட்டை இலையை மீட்டுக் கொடுத்து, விரைவில் நடைபெறப் போகிற தேர்தலில் 100க்கும் குறையாத சீட்டுகளை அதிமுகவோடு கூட்டணியில் பெற்று, அதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் கால் வைக்கலாம் என்ற கனவிலேயே பிஜேபி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.   அதன் கனவை நிறைவேற்றும் பணியை அதிமுகவின் ஒவ்வொரு பிரமுகரும் கனகச்சிதமாக செய்து வருகிறார்கள்.
டிடிவி தினகரன் ஜென்டில்மேன் போல ஒதுங்கி விட்டாரே….  இனி மன்னார்குடி மாபியாவின் தலையீடு இல்லாமல் போய் விடுமா.  அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார்களா ?
மன்னார்குடி மாபியாவின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் திருடர்கள்.    அவர்கள் பிறப்பு முதலே திருடுவதற்கு பழகியவர்கள்.   திருட்டுத்தனம் அவர்கள் உடன் பிறந்தது.   கொள்ளையடிக்காமல் அவர்களால் இருக்கவே முடியாது.
மன்னார்குடி குடும்பத்துக்குள் மோதல் முற்றி அவர்கள் ஒவ்வொருவரும் அடித்துக் கொண்டு அந்த மோதல் வீதிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.    ஒரு சாதாரண முக்கால் க்ரவுண்டு இடத்துக்கு அண்ணன் தம்பிகள் சண்டையிட்டுக் கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு பல ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதை கேள்விப் பட்டிருப்பீர்கள்.    இப்படி சாதாரண ஒரு சொத்துக்காக பல நூறு வழக்குகள் இந்தியா முழுக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
ஒரே ஒரு சாதாரண பள்ளி மற்றும் அதன் கட்டிடத்துக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினையில்தான் எம்ஜிஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்டார்.   எம்ஜிஆர் சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
ஆனால் ஜெயலலிதா பினாமி பெயர்களின் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கள் பல ஆயிரம் கோடிகள்.    சிறை செல்லும் சீமாட்டி என்ற தொடர் கட்டுரைகளில் ஜெயலலிதா பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் மற்றும் உருவாக்கியுள்ள புதிய பினாமி நிறுவனங்கள் குறித்து விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளன.
80க்கும் மேற்பட்ட அந்த பினாமி நிறுவனங்கள் பெரும்பானவற்றில் இயக்குநர்களாக இருப்பவர்கள், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதியின் கணவர் டாக்டர் சிவக்குமார் என்கிற கே.எஸ்.சிவக்குமார் மற்றும் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் கலியபெருமாள்.     இந்த பினாமி நிறுவனத்தின் பெயர்களில் இந்தியா முழுக்க கோடிக்கணக்கான சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.   இது தவிர இந்த பினாமி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம் குவிந்து கிடக்கிறது. இந்த சொத்துக்களுக்காக இந்த குடும்பத்துக்குள் விரைவில் நடக்க உள்ள குடுமிப்பிடி சண்டை வீதிக்கு வரத்தான் போகிறது.
இதன் முன்னோட்டமாக கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  இது டிடிவி மகாதேவன் மரணத்துக்கு முன்னால்.  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எதிரே உள்ள வீட்டை ஜெயலலிதா ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கிப் போட்டுள்ளார்.  இந்த ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
karthikeyan director
சசிகலா சிறை செல்வதற்கு முன்னதாக, அந்த வீடு அவர் தம்பி மகன் ஜெயந்த் திவாகரனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார்.  ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் எஸ்டேட்ஸின் இயக்குநர்களாக கேஎஸ்.சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் இருந்து வருகின்றனர்.    வேதா இல்லத்தின் எதிரே உள்ள அந்த வீடு பல ஆண்டுகளாகவே ஜெயலலிதாவின் உபயோகத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.   பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் பலர் அங்குதான் தங்குவர்.    சசிகலா சிறை சென்ற பிறகு, அந்த வீட்டை கைப்பற்ற கேஎஸ்.சிவக்குமார் முயற்சி எடுத்துள்ளார்.    இந்த தகவல் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு தெரிய வருகிறது.
உடனடியாக வேதா நிலையம் விரைந்த திவாகரன், இந்த விஷயம் குறித்து சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டு, அவரை தாக்கியுள்ளார்.   பிறகு உடன் இருந்தவர்களால் சமாதானப்படுத்தப்பட்டுள்ளார்.   பஞ்சாயத்து, மன்னார்குடி மாபியாவின் மூத்த உறுப்பினரான சசிகலாவின் கணவர் நடராஜனிடம் செல்கிறது.   அவர் அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கி ஒரு ட்ரஸ்ட் அமைக்கலாம்.  அந்த ட்ரஸ்டில், ரொக்கம் உள்ளிட்ட அத்தனை சொத்துக்களும் உள்ளடக்கப்படும்.   அந்த ட்ரஸ்டில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.   ஆனால் சொத்துக்களை ட்ரஸ்ட் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள டாக்டர் சிவக்குமாரும், கார்த்திகேயன் கலியபெருமாளும் இது போன்ற எந்த சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பதுதான் கடைசித் தகவல்.
தற்போது அரசியல் அதிகாரமும் கைவிட்டுப் போயுள்ளதால், வரக்கூடிய கால கட்டங்களில் இந்த மோதல் முற்றுவதற்காக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மக்களிடமிருந்து கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களுக்காக இந்த குடும்பம் அடித்துக் கொண்டு அழிந்தால் அது நமக்கு உள்ளபடியே மகிழ்ச்சி.
இத்தகைய அரசியல் சூழலில் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழகமும் அதன் மக்களுமே.  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே முடங்கிக் கிடந்த நிர்வாகம் இன்னும் எழவேயில்லை.  தற்போது முற்றியுள்ள அரசியல் நெருக்கடிகளால், பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு செல்வதையே நிறுத்தியுள்ளார்கள்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலம் தொடங்கி, தமிழகத்தின் நிர்வாகத்தை பல ஆண்டுகளாக சீரழித்து வந்துள்ள இந்த லும்பன் கட்சி அழிந்து நாசமாகப் போவது காலத்தின் கட்டாயம்.  இதனால் தமிழகத்துக்கு விளையப்போவது நன்மை மட்டுமே. savukkuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக