வெள்ளி, 21 ஏப்ரல், 2017

மோடியின் பினாமி அரசாகி விட்ட தமிழக அரசு!


பன்னீர் -எடப்பாடி பழனிசாமி இணையும் பின்னணி இதுதானா?2016 டிசம்பரில் அதிமுக-வுக்குள் வீசிய புயல் இன்னும் ஓயவில்லை. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ந்துபோய்க் கிடந்த அதிமுக மெல்ல மெல்ல கரைசேரக் காத்திருக்கிறது.
கட்சி பிளவு, சின்னம் முடக்கம், அமைச்சர் வீட்டில் ரெய்டு, தேர்தல் நிறுத்தம் ,சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து அகற்றம் என, நாளுக்கு நாள் டெம்ப் குறையாமலிருக்கிறது அதிமுக-வின் கூடாரம். பகையை மறந்து, இலையை மீட்க இப்போது பன்னீரும்-எடப்பாடியும் இணையப்போவதாக வரும் தகவல்களின் பின்னணியில் நடந்தது என்ன?
இரட்டை இலையை மீட்கவா இணைகிறார்கள்?
உட்கட்சி பிரச்னைகளை மறந்து இரட்டை இலையை மீட்டு, மீண்டும் உண்மையான அதிமுக-வை உருவாக்குவோம். முதல் கட்டமாக சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து அப்பறப்படுத்திவிட்டு கட்சிப் பணிகளைத் தொடங்குவோம் என்று பன்னீர்செல்வம் தரப்பிலிருந்தும், எடப்பாடி பழனிசாமியின் தரப்பிலிருந்தும் முடிவெடுத்துவிட்டதாக மீடியாக்களிடம் சொன்னார்கள். இதற்கிடையில், நானே கட்சிப் பணிகளிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று தினகரன் சிரித்த முகத்தில் எந்தவொரு கோபமும் இல்லாமல் கூலாக பதில் சொல்லுகிறார். உண்மையில் நடந்தது என்ன? ஒரு இடைத்தேர்தலுக்கு எதிரெதிர் அணிகளாக இருந்தவர்கள், ஒருவரை ஒருவர் மாறி மாறி வீதியில் இறங்கி குற்றம்சாட்டியவர்கள் இறுதியாக, தன் தலைவியின் மரணத்தை கொலையெனச் சொன்னார்கள். இப்படிப்பட்ட இருவரும் இணைகிறார்கள் என்றால் இதன் பின்னணியில் நடந்த விஷயங்களைப் பற்றி அலசுவோம்.

அடுத்த குறி யார் ? உட்காய்ச்சலில் அமைச்சர்கள்
முதல் காரணமாக, தினகரனின் வலது கையாக இருந்துவந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த அதிரடி ரெய்டு காட்சிகள், அதையொட்டி நடக்கும் கிடுக்கிப் பிடி விசாரணைகள் என கடந்த சில நாட்களாக அதிரடி சம்பவங்கள், தினகரனை ஆதரிக்கும் ஒவ்வொரு அமைச்சர்களையும் கலங்க வைத்தது. அடுத்த குறி நாம்தானா? என்கிற உட்காய்ச்சல் பயம்தான் இரண்டு அணிகளின் இணைப்பின் அடிநாதமாக இருக்கிறது. அதற்காக என்ன கசப்பாக இருந்தாலும் அந்த மருந்தை குடித்தே தீர வேண்டுமென்று குடிக்க முன்வந்துள்ளனர்.
அதன் பின்னணிதான் அன்று பன்னீரை வசைபாடிய ஆர்.பி.உதயக்குமார் இன்று பன்னீர்செல்வத்தை 'எஃகு விசுவாசம்' எனப் புகழ்கிறார்.
அமைச்சர் சி.வி. சண்முகம், 'அம்மாவுக்குப் பிறகு சின்னம்மாதான்' என்று, அந்த டிசம்பர் மாத இரவில் கண்கள் சிவக்க அன்பை வெளிப்படுத்தியவர் இன்று சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமும் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் எனக் கொதிக்கிறார். பல ஆண்டுகளாக, அடிமையாக வலம் வந்தவர்களுக்கு இந்த மூன்று மாதத்தில் எங்கிருந்து வந்தது இவ்வளவு போர்க்குணம் என்று விடை தேடினால் அதற்கு இவ்வாறு பதில் தருகிறது டெல்லி அமலாக்கத் துறை.
'கரூர் அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கருப்புப் பணத்தின் விசாரணையின் முடிவு போயஸ் கார்டனில் நிற்கிறது. அங்கிருக்கும் ஒருசில அமைச்சர்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் தலை கிறுகிறுக்க வைக்கக்கூடிய அளவுக்கு கோடிகளில் குவிந்திருக்கிறது இவர்களது ஊழல். இந்தியாவின் கேபினட் அமைச்சர்கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாது. அந்தந்த அமைச்சகத்தில் விடப்படும் டெண்டர்கள், ஒருசில நியமனங்கள் என சிலவற்றில்தான் கொள்ளையடிக்க முடியும். ஆனாலும் அந்தக் கொள்ளையில் கட்சியின் வளர்ச்சிக்குப் பங்கு, தேர்தல் நிதி, கட்சிக்கு செலவு செய்தல், ஆடம்பர வாழ்வு எனப் பெரும்பகுதி போய்விடும். ஆனால் தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் பணம் குறிப்பாக, சட்டசபையில் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் வைத்திருக்கும் பணம் பத்து ஆண்டுகளுக்கு ஐந்து மாநிலங்களை நடத்தும் அளவிலான பணம்' என, அமலாக்கத் துறையை இயக்கும் அமைச்சர் அருண் ஜெட்லி கமெண்ட் அடித்துள்ளார். இவர்களுக்கு எப்படி இந்தப் பணம் வருகிறது என்று தீவிரமாக விசாரிக்க களத்தில் இறங்கியது ஜெட்லியின் தனிப்படை. அந்த விசாரணையிலும், ஜெட்லி வைத்த பொறியில் சிக்கியவர்கள்தான் இன்று மீடியாக்களில் முகம் காட்டிக்கொண்டு அலறும் அமைச்சர்கள். இந்தப் பட்டியலில் 15 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த விபரங்களையும் ரெட்டியும், அவரது கூட்டாளிகளும் கக்கியதுபோக மீதமுள்ள விஷயங்களை அவர்களே கண்டுபிடித்துவிட்டனர். அந்த ஆட்டத்தின் காட்சிகளைத்தான் நாம் தினசரி வேறுவேறு விதங்களில், வேறுவேறு காட்சிகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மோடியின் சாய்ஸ் பன்னீர்செல்வம்!
தமிழகத்தில் நடந்துவந்த அமளி துமளி, ஆட்டத்தின் நாயகனாக பன்னீர்செல்வம் இருப்பதாக மீடியாக்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத பன்னீர்செல்வம் இது ஒரு 'அறப்போர்' என்றார்.
இந்த அறப்போருக்கு பன்னீரை எப்படி தளபதியாக்கியது பிஜேபி என்றால், பன்னீரின் கடந்தகால அரசியலில் பன்னீர் செல்வம் சேர்த்த 'செல்வங்களின்' கோப்புகள் மோடியின் கைகளில் சிக்கியதால் பன்னீரும் சிக்கினார். ஆதலால் மோடியின் சாய்ஸ் பன்னீர்செல்வம் என்று ஊடகங்கள் எழுதியதை இன்று மக்கள் மறந்திருப்பார்கள். 'அதிமுக-வில் நடந்து வரும் களேபரங்களுக்கு காரணம் பிஜேபி-யின் மோசமான வேலையென்றும், தமிழகத்தில் காலூன்ற எங்கள் முதுகின் மேல் சவாரி செய்கிறார்கள் என மக்கள் முன்னிலையில், மீடியாக்கள் முன்பும் பன்னீர்செல்வம் ஒருவேளை போட்டுக் கொடுத்துவிட்டால் என்ன ஆகும் பிஜேபி-யின் இமேஜ்? என்ற யோசனையை மோடி செய்வதற்குமுன்பே, முதல்வராக இருந்த பன்னீரின் டெல்லிப் பயணம் அதற்கு ஆழமான பதிலைத் தந்துவிட்டது. மோடியும் -பன்னீர்செல்வமும் தனியாகப் பேசிய அந்த அறையில் நடந்த காட்சிகள் என்னவாக இருக்குமென்பதை உங்கள் முன்பே விட்டு விடுகிறேன். இறுதியாக, பிஜேபி-க்கு கிடைத்த ஆகச் சிறந்த 'தளபதி 'யாகிப் போனார் பன்னீர்செல்வம்.
கூவத்தூர் சிக்கல் - உதறலில் எம்.எல்.ஏ.க்கள்
மோடியின் முதல் ஆட்டத்தில் சசிகலா கட்சியையும், ஆட்சியையும் தக்கவைத்த கூவத்தூர் கதையை நாம் அறிந்ததுதான். ஆனால் அதிலும் ஒரு செக் வைத்தது பிஜேபி. பிரபலமான வைர வியாபாரியிடம்தான் சசிகலாவின் கொடுக்கல் வாங்கல் பிசினஸ்கள் நடந்து வந்தன. கூவத்தூர் அசைன்மென்ட்டுக்கு செட்டில்மெண்ட் அந்த வைர வியாபாரியின் மூலம்தான் தங்கக் கட்டிகளாகச் சென்றது. இந்த வேலையை முன்னின்று நடத்தியவர் விஜயபாஸ்கர். இந்தத் தகவல் டெல்லி மேலிடத்துக்குச் சென்றதும் வைர வியாபாரி வளைக்கப்பட்டார். அவர் மூலம் தங்கம் வாங்கியவர்களுக்கு பர்ச்சேஸ் பில்கள் அனுப்பியதும் பதறிப் போய்விட்டார்கள் சில எம்.எல்.ஏ.க்கள். அந்தப் பிரச்னையை முடிப்பதற்குள் அடுத்தடுத்த நெருக்கடிகள் வர ஆரம்பித்துவிட்டன சசிகலாவுக்கு.
இதன் பின்னாளில் மோடியை, முதல்வராக சந்திக்கச் சென்ற எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வத்தைவிட பவ்யமாக நடந்துகொள்ள மோடிக்கு பெரும் வசதியாகிவிட்டது. ஆதலால் இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார் மோடி.
மோடியின் குறி சசிகலா ஏன்?
இலையை மீட்க ரூ.68 கோடிகள் கொடுக்க நினைத்த தினகரன், மோடியை வளைக்க என்னவெல்லாம் செய்திருப்பார்? நினைத்துப் பார்த்தால் தலைசுற்றும் அளவிலான யோசனைகள் நமக்கு வருவது இயல்புதான். தினகரன் ரூ.68 கோடிகள் கொடுக்கவில்லையென்றாலும் மோடியின் மனதில் இடம்பிடிக்க சசிகலாவின் தரப்பு முயலாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் ஏன், மோடி சசிகலாவின் கண்களை அவர்களது ஆட்களைவிட்டே குத்தவைக்கிறார் என்றால் இதற்கும் விடையை அருண் ஜெட்லியே சொல்கிறார்.
'தமிழகத்தில் நடந்துவரும் அசாதாரண சூழல் குறித்து தினகரனின் தரப்பில், கடந்த மாதம் விவாதமொன்று நடத்தியவர்கள் இறுதியாக, மத்தியில் ஆள்பவர்களுக்கு அனுசரணையாகப் போவதென்று முடிவெடுத்தவர்கள், சில வேலைகளைச் செய்தார்கள். அதில் தினகரனின் தரப்பிலிருந்து மடாதிபதி ஒருவர் மோடியிடம் தூது போயிருக்கிறார். சசிகலாவை இன்னும் இறுக்கிப் பிடித்தால் தாக்குப் பிடிக்கமாட்டார்கள். பிரசிடெண்ட் எலெக்ஷனில் நீங்கள் சொல்வதைத்தான் அவர்கள் செய்வார்கள். பன்னீர்செல்வத்தைவிட உங்களுக்கு ஆப்டான ஆளாக தினகரன் இருப்பார் என்று இறங்கிப் பேசியவரிடம் ஒரு சம்பவத்தை நினைவூட்டியிருக்கிறார் மோடி. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தைக்கு முதலில் அருண் ஜெட்லி சென்றார். பேசிக் கொள்ளலாம் என்று அனுப்பிவைத்தார் ஜெயலலிதா. அடுத்தமுறை நானே சென்று பேசியபோது கூட்டணிக்கு ஒத்துவந்தவர் சில கண்டிஷன்கள் போட்டார். அனைத்துக்கும் நாங்களும் தயார் என்ற பிறகு, யாரையும் கேட்காமல் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. இதன் பின்னணியில் சசிகலாதான் இருந்தார். அவரை எப்படி இப்போது விட முடியும்? இந்தத் தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது. ஆதலால் தினகரனை கட்சியைவிட்டு போய்விடச் சொல்லுங்கள், தினகரன் மீது எங்களுக்குக் கோபமில்லை. ஆனால் அவர் கட்சிப் பதவியில் தொடர்ந்தால் அவரும் தேவையில்லாத சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறது மோடியின் தரப்பு. இந்தச் சம்பவங்களையெல்லாம் கேட்ட தினகரன் மேற்கொண்டு ஆர்.கே. நகரில் போட்டியிட்டதால் டென்ஷனான டெல்லி தரப்பு தினகரனை வீழ்த்தியது.
ஆகச்சிறந்த அடிமை யார்? வலுக்கும் மோதல்
எல்லாம் முடிந்துவிட்டது. இனியாவது தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இயங்குமா? என்றால் இதற்குப் பதில் சொல்ல இன்னும் சில நாட்கள் தாமதம் ஆகலாம். மோடியின் விசுவாசியாக யார் இருப்பது என்பதில் பன்னீருக்கும் -எடப்பாடி பழனிசாமிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது இப்போது.
பன்னீர்செல்வம் அவரது நெருங்கிய வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து இப்படிச் சொல்லியிருக்கிறார். "அம்மாவின் பொற்கால ஆட்சியில் நான், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், பழனிச்சாமி ஆகியோர் ஐவர் குழுவாக இயங்கிவந்தோம். எங்களது வேலை கட்சிக்கும், மேலிடத்துக்கும் விசுவாசமாக இருந்து கட்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதுதான். எங்களையெல்லாம் நம்ப வைத்து ஏமாற்றி, அம்மாவிடம் இல்லாததையும், நடக்காத சம்பவங்களையும் சசிகலா மூலம் சொல்லி எங்களை கட்டம் கட்டியது அவர்தான். முதலில் செங்கோட்டையன் அடுத்து முனுசாமி, விஸ்வநாதன், பழனியப்பன் என அவரால் பாதிக்கப்பட்டோர் ஏராளம். தவிர, பழனிசாமிக்கு முதல்வர் நாற்காலியில் அப்போதிருந்தே ஒரு கண் இருந்தது. அதற்காக அவர் எல்லா வேலைகளையும் செய்து வந்தார். குறிப்பாக, தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதுதான் அவரது முதல் வேலையே. இப்போதுகூட பாருங்கள், அவரை நம்பிய சசிகலாவின் குடும்பத்தை துரத்திவிட்டது அவர்தான். அவரது இல்லத்தில், தலைமைச் செயலகத்தில் தினகரனை நீக்க நடந்த பேச்சுவார்த்தைகளில் அவருக்கு சம்பந்தமில்லாததுபோலவே நடந்து கொள்கிறார். அவர் மீடியாக்களில் பேச மாட்டார். விவசாயிகள் டெல்லியில் போராடியதை நேரில் சென்று பார்த்தால் பிரதமர் கோபித்துக்கொள்வார் என இங்கேயே அமைதி காத்து வந்தார். அவருக்கு முதல்வர் பதவியும் அதன்மூலம் கிடைக்கும் வருமானமும்தான் முக்கியம். தவிர, அவருக்கு அவர்கள் ஆட்கள் தவிர மற்ற சமூக மக்களிடம் செல்வாக்கு இல்லை. குறிப்பாக, அவரின்மேல் மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை. நம்பிக்கை, விசுவாசம் என்றால் என்னவென்று கேட்பார். அவருக்கு மேலிடம் சப்போர்ட் செய்தால் இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்" என்று கலங்கியிருக்கிறார். இதுதான் இன்று அதிமுக-வின் இரு அணியிலும் நடப்பது.
எம்.ஜி.ஆரின் உண்மையான விசுவாசிகள், அதிமுக தவிர வேறு எவருக்கும் ஓட்டுப் போடுவதில்லை. அவர்களது நாடி, நரம்புகளில் இரட்டை இலையே நிரம்பியிருக்கிறது. சமரசம் இல்லாத அடித்தட்டு மக்களின் நம்பிக்கையாக இரட்டை இலை இருந்துவருகிறது. இதுபோன்ற கொள்கையைக் கொண்டவர்கள் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கண்களை மூடிக்கொண்டு இரட்டை இலைக்கு வாக்களித்ததால், இன்று அதிமுக அரசியலில் அசுர இடத்தைப் பிடித்தது. மாறாக கட்சி, ஆட்சி, அமைச்சர்கள் என ஆளும் மேலிடத்தின் அனைத்து நாடி, நரம்பு, சதைகளில் 'சுயநலம்' என்னும் இரத்தம் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
விரைவில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாய்ப்புக் கேட்டு நிற்கிறார் என்பதற்காகவே அத்வானி மீது, பாபர் மசூதி வழக்கு தூசி தட்டப்பட்டுள்ளது. அரசியல் ஆசானுக்கே இந்த நிலைமை என்றால், அரசியல் துரோகிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறார் மோடி?
-சண்.சரவணக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக