சனி, 15 ஏப்ரல், 2017

கார்த்திகேயன் Fashura: : ஆரிய வருகையின் அறிமுக அத்தியாயம்!

Karthikeyan Fastura   : மில்லியன் வருட கதையின் தொடர்ச்சி(மீள் பதிவு)
இன்று ஆரியர்கள் என்று குறிப்பிடப்படும் இரானிய ஐரோப்பிய மூதாதையர் கூட்டம் முதன்முதலில் இந்தியாவில் வடமேற்குப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குடியேற ஆரம்பித்தது. அவர்கள் நூற்றாண்டுகளாக பயணப்பட்டு கொண்டிருந்ததால் நாடோடி நாகரிகம் கொண்ட காட்டுவாசி கூட்டமாகவே இருந்தார்கள்.
அந்த சமயம் சிந்துசமவெளியில் ஹரப்பா, மொஹென்ஜோ-தரோ இரு பெரும் நகரங்கள் கொண்ட நகர நாகரிகத்தை கட்டமைத்து, விவசாயம் செய்து, வியாபாரம் செய்து என்று முன்னேறிய சமூகமாக ஆதி இந்திய கூட்டம் வாழ்ந்து வந்தது. இதற்கு அடிப்படை காரணம் பல நூற்றாண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருந்ததும் போர்கள் எதுவும் இன்றி இருந்ததும் தான். அதனால் ராணுவம், காவல் படை என்று பாதுகாப்பு அரண் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்திருந்த இந்த கூட்டத்தின் மேல் ஆரிய காட்டுவாசி கூட்டம் தாக்குதல் நடத்தியதால் செய்வதறியாது சிந்து மக்கள் சிதறி ஓடுகின்றார்கள். அதில் ஒரு கூட்டம் விந்திய மலையை தாண்டி தென்புறமும், கங்கை நதியை நோக்கி ஒரு கூட்டமும் நகர்கிறது.
இந்தோ-ஆரிய கலப்பின கூட்டம் இன்றைய பஞ்சாப், ஹரியானா பகுதியில் உருவாக ஆரம்பிக்கிறது.
பல நூற்றாண்டுகளாக இந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சிந்துநதி முதல் கங்கை நதிவரை பரவுகிறார்கள். ஆதி கங்கைநதி இந்திய கூட்டம் இன்னும் கிழக்கு நோக்கி செல்கிறது. அவர்கள் தான் தென்கிழக்கு ஆசிய மக்களின் ( தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா) மக்களின் முன்னோடி.
ஆரிய கூட்டம் ஆதி இந்தியர்களோடு மேலும் மேலும் கலப்பு ஏற்படுவதை விரும்பவில்லை. பார்பனியம் தோன்றுகிறது. அது சாதி அடுக்குகளை கட்டமைக்கிறது. விவசாயகுடிகளான ஆதி மக்களை படிநிலையில் கீழே வைக்கிறது. விவசாய குடிகளின் ஆடு, மாடுகளை யாகம், பலி என்ற பெயரால் கொன்று தின்கிறது. இது நடந்தது கிமு 2000 முதல் கிமு 500 வரை. இவ்வாறு 1500 வருடங்களுக்கும் மேலாக மாடுகளை கொன்று மூன்று வேளையும் தின்கிறார்கள் தின்கிறார்கள் தின்றுகொண்டே இருக்கிறார்கள். விவசாயத்திற்கு கூட மாடுகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது அத்தனையும் கடவுளின் பெயரால் நடைபெறுவதால் மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இதை எதிர்த்து இரண்டு பெரும் இயக்கங்கள் உருவாகிறது. அவை மக்களிடம் மிகுந்த செல்வாக்கையும் பெறுகிறது. அவை தான் சமணம் மற்றும் புத்தம்.இதனால் சனாதன வேதிய கோட்பாடுகளும் கலாச்சாரங்களும் வலுவிழக்கிறது. நான் ஏன் இவற்றை மதம் என்று குறிப்பிடவில்லை. அன்றையதினம் இவை இரண்டும் மதங்கள் அல்ல. மக்கள் இயக்கங்கள் அவ்வளவே. அவற்றிற்கு ஆன்மிக மந்திரக் கதைகள் தோன்றியது பிறகு தான்.
( எல்லாமதங்களின் ஆரம்பமும் கொடுமைகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி இயக்கமாகவே இருந்தது. இது கிறிஸ்துவ, இஸ்லாமிய, யூத, கான்பூசியஸ் என்று இந்திய துணைகண்டத்தில் தோன்றாத எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இவற்றை தோற்றுவித்தவர்கள் அனைவரும் சக மனிதர்களின் மீது அன்பு கொண்ட உன்னதமான மனிதர்கள். இவர்களை தேவ தூதர்கள், பிதாமகன்கள், கடவுள்கள், மகான்கள் ஆக்கியது இவர்களின் காலத்திற்கு பிறகு அவர்களின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டி உருவாக்கப்பட்ட புனைவுகள் தான்.)
புத்தமும், சமணமும் வீரியத்துடன் பரவுவதற்கு காரணம் மாட்டு அரசியல் தான். வேதிய கலாச்சாரம் வலுவிழக்கும் போது, சாதியம், பார்ப்பனீயம் எல்லாமும் வலுவிழந்தது. இதை மாற்ற அவர்கள் கொண்ட மிக தந்திரமான வழிமுறை தான் புலால் உண்ணாமை. இப்படிதான் பார்பனர்கள் இழந்த தங்கள் செல்வாக்கை மீட்டெடுத்தார்கள். இந்த இரு மக்கள் புரட்சி ஏற்படும் முன்பு வரை ஆட்சி அதிகார பீடத்தில் இருந்தவர்கள் பார்பனர்களே. அரசர் என்ற ஒற்றை குடை அப்போது இருந்ததாக தெரியவில்லை. மாறாக ஒரு கூட்டமே ஆட்சிபீடத்தில் இருந்திருக்கலாம். அதனால் தான் இந்த காலகட்டத்தின் வரலாற்றில் அரசர் பற்றிய குறிப்புகளே இல்லை.
போர்களில், மக்கள் புரட்சிகளில் தலைமை தாங்கியவர்கள் ஆட்சிபீடத்தை கைபற்றினார்கள். பார்பனர்கள் வழிவிட்டு ஆட்சிபீடத்தில் இருந்தவர்களின் பின்னால் இருந்து ஆட்சி செய்ய புதிய கடவுள்களை கதைகளை உருவாக்கினர். அதில் கடவுள்களாக வரிக்கபட்டவர்கள் அனைவரும் முந்தையகாலத்தின் செல்வாக்கு பெற்ற மன்னர்கள் தாம். இவ்வாறு தான் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்கள் பிறந்தது.
காலம்காலமாக தென்னிந்தியாவில் போற்றப்பட்டு வந்த சிவன் என்ற ஆதிமனிதன் கடவுள் ஆன கதை இப்படிதான். பிற்பாடு திருமால் என்றொரு ஆதிவாசியும் கடவுள் ஆனார். ஆகவே தான் இந்த கடவுள்கள் நீலநிறத்திலும், பச்சை நிறத்திலும் இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் கருமைநிற ஆதிமனிதர்கள், இந்தியாவின் பூர்வகுடிகள். பிறகு வந்த நல்ல அரசர்கள் அவர்களின் அவதாரங்கள் ஆனார்கள்.
இப்படியாக பலகதைகளுடன் சமண மதத்தையும், புத்த மதத்தையும் கட்டுபடுத்திய வேதியமதத்திற்கு மாற்றாக சைவம், வைணவம், விநாயக வழிபாடு, சக்தி வழிபாடு உள்ளிட்ட 64 மதங்கள் பிறந்தது. ( மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இவற்றை எல்லாம் ஒரே மதமாக இந்துமதம் என்று குறிப்பிடும் வரை இப்படிதான் இருந்தது.) இவர்களுக்குள் பலமுறை அடிதடி ரகளை, போர்கள் எல்லாம் நடந்திருக்கிறது.
இதற்கு பின்னால் நடந்தவை எல்லாம் உங்களில் பலருக்கும் தெரிந்த(திரிந்த), பாடப்புத்தகங்களில் படித்த கதைதான் என்பதால் இத்தோடு முடிக்கிறேன். இந்தக்கதையை சொல்வதற்கு அடிப்படை காரணம் நமது பாடபுத்தகங்கள், பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள் சொல்லும் வரலாறு அனைத்தும் வெறும் 2000 வருட கதை மட்டுமே. அதிகபட்சம் 3000 வருடங்கள். அதற்கும் முந்தைய காலத்திற்கு சென்று மனித இனத்தின் வரலாறை படித்தால் தான் நாம் எப்படி எல்லாம் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுகிறோம் என்பது புரியும்.
நான் இங்கு சொன்னது எல்லாம் கதை சுருக்கம் தான். ஒவ்வொரு வரியையும் விரித்து எழுதினால் ஆயிரம் பக்கத்திற்கு குறையாத இருநூறு அத்தியாயங்கள் கொண்ட தலையணை சைசிற்கு இரண்டு புத்தகங்கள் எழுதலாம்  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக