ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

பவர் பாண்டி ராஜ்கிரண் : அன்னிக்கு அவர்கள் போட்ட விஷ விதை, இன்னிக்கு முளைத்து நிற்குது.

ராஜ்கிரண் அவ்வளவு எளிதில் பேச மாட்டார். ஆனால், `ஓகே' சொல்லி விட்டால், எதைப் பற்றி வேண்டு மானாலும் கேட்கலாம்.  சூஃபி கவிஞர் ரூமியின் `தாகம்கொண்ட மீனொன்று' புத்தகத்தை மடித்து வைத்துவிட்டு, வெள்ளந்திச் சிரிப்புடன் வரவேற்கிறார் ராஜ்கிரண். `இன்றைய தேதியில், தமிழ் சினிமாவில் ராஜ்கிரணிடம் கதை சொல்லி நடிக்கச் சம்மதிக்க வைப்பதுதான் ரொம்பச் சிரமம்' என்கிறார்களே? ``நான் சினிமாவுக்கு வரணும்னு விரும்பி வரலை. படிச்சு, பெரிய போலீஸ் அதிகாரியா வரணும்னு ஆசை. ஆனா, ஏழ்மையான குடும்பம். படிக்கவைக்க வசதி இல்லே. எப்படியோ இந்தத் தொழிலுக்குள் வந்துட்டேன். திரைப்படம்கிறது சக்திவாய்ந்த ஊடகம். இறைவனின் அனுமதி இல்லாமல் ஒரு அணுகூட அசையாது என்ற நம்பிக்கையுடைய இஸ்லாமியன் நான். இந்தத் துறையில் இறைவன் என்னை வைத்திருக்கிறான்னு சொன்னா, அதற்குத் தகுதியா நான் நடந்துக்கணும். என் தொழில் மூலமா குறைந்தபட்சம் ஏதாவது, ஒரு நல்லதையாவது சொல்லணும்னு ஆசைப் படுறேன். அதற்குரிய கதைகள் வந்தால் ஒப்புக் கொள்கிறேன்.
இந்தத் தகுதி இருப்பதாக நான் நம்பும் எந்தப் படத்திலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.''

`` ‘பவர் பாண்டி’ ஆனது எப்படி?” 

``இந்தப் படத்தை தனுஷ்தான் இயக்கப் போறார்னு எனக்கு முதல்ல தெரியாது. இயக்குநர் சுப்ரமணியம் சிவா வந்து ஒன்லைன் சொன்னார். ஒன்லைனே எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதுல நான் விரும்புற மாதிரியான ஒரு மெசேஜும் இருந்தது. `நிச்சயமா நான் நடிக்கிறேன் தம்பி’னு சொல்லி அனுப்பினேன். அவர் `தயாரிப்பாளரிடம் சொல்லிட்டு வர்றேன்'னு போனார். போய்ட்டு ரெண்டு நாள் கழிச்சு வந்தார். `அண்ணே படத்தை நான் டைரக்ட் பண்ணலை,  தனுஷ்தான் இயக்குறார்’னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகிய நான், 27 வருஷங் களுக்குப் பிறகு, அவரோட மகன் இயக்கத்திலும் ஹீரோவாக நடிக்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம். அந்தப் பாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கான். ‘ஐ யம் பிளஸ்டு’னு சொல்வாங்களே...  அந்த மாதிரியான நாள் அது.”

“அப்படி என்ன ஸ்பெஷல்?” 

``சாதாரணமா ஐம்பது வயசாகிட்டாலே, அவங்களை இந்தச் சமூகம் புறக்கணிக்கத் தொடங்கிடும். சினிமாக்காரங்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, வசதி படைத்தவர்களுக்கோ இது ஒரு பிரச்னையாவே இருக்காது. ஆனா, ஏழை மக்களுக்கு இது பெரிய பிரச்னை. அதாவது, ஒரு மனுஷனுக்கு வயசு கூடக்கூட அனுபவமும் கூடிக்கிட்டுத்தான் போகும். அவங்களை  நாம பயன்படுத்திக்கணும். ஆனா, இன்னிக்கு வயசானவங்களைக் குப்பையில் தூக்கிப் போட்டு்டுறாங்க. அப்படி ஒதுக்கக் கூடாது. அடுத்த தலைமுறை அவர்களைத் தாங்கிப்பிடிக்கணும். இளமையில் இருக்கும் எல்லா உணர்வுகளும் முதுமையிலும் இருக்கும். இந்த விஷயங்களைப் படத்துல ரொம்ப அழகா சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.”https://youtu.be/nSiBqyBGOBk

“தனுஷ் நடிப்பைப் பார்த்திருக்கிறீர்கள். இயக்குநராக தனுஷ் எப்படி?” 

``ஒரே வார்த்தையில் சொல்லணும்னா ‘ஹேட்ஸ் ஆஃப்’. என் தங்கை விஜயலட்சுமி இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும். அப்படி உழைக்கிறார். அவருக்கு இருக்கும் வசதிக்கும் வாய்ப்புக்கும் இப்படி உழைக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. ஒவ்வொரு ஷாட்லயும் அவ்வளவு நேர்த்தி எதிர்பார்க்கிறார். இந்தப் படத்துல `பவர் பாண்டி’ என்கிற நான் எப்படிப் பார்க்கணும், எப்படி நடக்கணும், எப்படிச் சிரிக்கணும், எப்படி யோசிக்கணும் என்பது வரைக்கும் தனுஷ் சொல்லிக்கொடுத்ததுதான். அதில் ஐம்பது சதவிகிதம்தான் நான் நடிச்சிருக்கேன். நூறு சதவிகிதம் நடிச்சிருந்தேன்னா, இதுவரை நீங்க பார்த்த ராஜ்கிரண் என்ற பிம்பமே உடைஞ்சிருக்கும். நான் பார்த்ததிலேயே அற்புதமான கலைஞர்களில் ஒருவர் என் மருமகன் தனுஷ்.”

``சினிமா தயாரிப்புத் துறை இன்றைக்கு எப்படி இருக்கிறது?” 

``இன்னிக்கு சினிமாவுல மிகப்பெரிய அடிப்படை தவறு நடந்துக்கிட்டு இருக்கு. சின்ன டீக்கடையோ, பெரிய காபி ஷாப்போ எது வைக்கிறதா இருந்தாலும், கடை வைக்கும் முதலாளிக்கு அந்தத் தொழில் தெரியணும். முதல் போடும் முதலாளிக்கு, செய்யும் தொழில்ல அனுபவம் இல்லைன்னா, நொடிஞ்சுபோயிடும். இது எல்லா தொழில்களுக்கும் பொருந்தும். ஆனா, சினிமாவும் அரசியலும் மட்டும்தான் காசு இருந்தா போதும், உள்ளே வந்துடலாம்னு ஆகிப்போச்சு. அப்படி வெறும் காசு மட்டுமே வெச்சுக்கிட்டு உள்ளே வர்றவங்க, தோத்து வெளியே போறாங்க. போகும்போது, `சினிமா மோசமாகிடுச்சு'னு விரக்தியோடு சொல்லிட்டுப் போறாங்க. ஒண்ணு, ரெண்டு பேர் ஜெயிக்கலாம். ஆனா, அதுவே பொது விதியாகிடாது.”

`` சினிமா நடிகர்கள் அனைவருக்குமே அரசியல் ஆசை இருக்கிறதே. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” 

`` `உன்னால் மற்றொரு உயிருக்கு எந்த உதவியும் செய்ய முடியலைன்னாலும், அதை நோக்கி ஒரு புன்னகை செய்.அதுவே ஒரு தர்மம். அதைத்தான் இறைவன் விரும்புகிறான்’னு நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். சேவை செய்ய எவ்வளவோ வழிகள் இருக்கே. அதுக்கு, அரசியலுக்குப் போய்த்தான் செய்யணுமா என்ன?”

``தமிழ் மண், பண்பாடு சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சமீப காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?” 

``ஜல்லிக்கட்டுப் போராட்டம்கிறது, வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டும் இல்லை. தொடர்ந்து தமிழ் இனம் பல்வேறு வகையில் ஏமாற்றப்பட்டு வந்திருக்கு. அது எல்லாம் சேர்ந்த கோபம்தான் இந்தப் போராட்டத்தின் மூலமா வெளிப்பட்டிருக்கு. வெறும் நாட்டு மாடுகளை மட்டும் காப்பாற்றுவதில் இல்லை இந்தப் போராட்டம். ஓர் உலக அரசியலை, ஓர் இனம் தனித்து எதிர்த்து நின்றதைத்தான் காட்டுகிறது. நான் என்னால் முடிந்த ஆதரவையும் கருத்துகளையும் பகிர்ந்துக்கிட்டேன். உண்மையான நாயகர்கள், போராடிய மாணவர்களும் அவர்களுக்குத் துணை நின்ற மக்களும்தான்!”

``எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் ‘அண்மைக்காலமாக சென்னையில் முஸ்லிம் களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை’ன்னு வருத்தப்பட்டிருந்தாரே?” 

``உண்மைதான். ஆனா, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதே இந்தப் பிரச்னை ஏற்பட்டுடுச்சு. இடித்தவர்களின் நோக்கம் என்னவோ அதுதான் நடந்துவருகிறது. அன்னிக்கு அவர்கள் போட்ட விஷ விதை, இன்னிக்கு முளைத்து நிற்குது.

``தமிழ்நாட்டிலும் மதப் பிரிவினை போன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் ஏற்படும் எனச் சொல்கிறார்களே?”

``இங்கே அந்தப் பருப்பு வேகாது. அதற்கான விதையை பெரியார் ஆழமா ஊன்றிவிட்டுப் போய்விட்டார். எத்தனை சாதி மத வேறுபாடுகள் இருந்தாலும், தமிழன் என்ற அடையாளத்துக்காக மக்கள் ஒன்றுகூடியதைக் கண்ணால் பார்த்த பிறகு, பயப்படத் தேவையில்லை.”  வரவனை செந்தில், படங்கள்: கே.ராஜசேகரன்  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக