செவ்வாய், 11 ஏப்ரல், 2017

ஜாதிவெறி .. வட அமெரிக்க தமிழ் சங்கத்தை காப்பாற்றவேண்டும்

perumal muruganவடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை (https://fetna.org/fetna-outlook/) என்பது 9 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவையும் 18 ஆயுள் உறுப்பினர்களையும், கிட்டத்தட்ட அமெரிக்கா முழுவதிலும் உள்ள 40 க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த 130 பிரதிநிதிகளையும் அச்சாய்க் கொண்டு 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர் குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உழைப்பால் செயல்பட்டு வரும் அமைப்பு.
இதில் ஒவ்வொரு ஆண்டும் விழாவிற்கு மலர்க்குழு, விழாக்குழு எனப் பல குழுக்களாய்ச் செயல்பட்டு விழாவை வெற்றிகரமாய் எடுத்துச்செல்வது இத்துணை ஆண்டுகளாய் நடைபெற்று வரும் ஒன்றாகும். பேரவை விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களைத் தேர்வு செய்வதும், அதைப் பரிசீலனை செய்து அவர்களை அழைத்துச் சிறப்பிப்பதும் இரு குழுக்களால் செய்யப்படுகிறது. அவை நிகழ்ச்சிநிரல் குழு மற்றும் வழிகாட்டுதல்குழு ஆகும். இவற்றில் பெட்னாவின் செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.


எழுத்தாளர் பெருமாள் முருகனை அழைத்துச் சிறப்பிப்பது என்று இக்குழுக்களால் பரிந்துரை செய்யப்பட்டு, அதைப் பரிசீலனை செய்து, பின்னர் அவரிடம் அனுமதி பெற்று, முறையான அறிவிப்பும் ஜனவரி 10 அன்று செய்யப்பட்டது. ஜனவரி 30ம் தேதி வரை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட பொங்கல் விழாக்களிலும் பரப்புரை செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு தான், அவர் எழுதிய “மாதொருபாகன்” தன்னுடைய சாதியை அவமானப்படுத்தியதாய் எழுந்த சர்ச்சையும், அதன் பின்னர் நடந்த கட்டப்பஞ்சாயத்தில் அவர் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டதும் சிலருக்கு நினைவுக்கு வருகின்றது. நீதிமன்றம் தோழர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாகவும், கட்டப்பஞ்சாயத்துக்களைக் கண்டித்தும் தீர்ப்பளித்து இருந்தாலும், தன்னுடைய சாதியை அவமானப்படுத்தியவர் பெட்னா விழாவிற்கு வருவது உறுத்தலாய் இருந்திருக்கின்றது.

கேரி, கனெக்டிகெட், வாஷிங்டன் நகரங்களிலிருந்து சில முதியவர்கள் வழிநடத்த, டல்லஸ், செய்ண்ட்லூயிஸ், அட்லாண்டா நகரலிருந்து சிலர் ஒருங்கிணைக்க, அவர்களுடைய சாதி சனங்கள் அனைவரும் பெருமாள்முருகனை எப்படியாவது தடுத்து நிறுத்த்தும் வேலையை ஆரம்பிக்கிறார்கள். பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தனது சொந்த சாதி நண்பர்களில் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து, தொடர்புகொண்டு பேரவைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சொல்கிறார்கள். பின்னர், பேரவை நிர்வாகக் குழுவில் உள்ள தன்சாதி நண்பர்களின் உதவியுடனும், வாழ்நாள் உறுப்பினராக உள்ள ஆண்டை நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்புடனும், ஆதரவுடனும் எழுத்தாளரைப் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.
இதைப்பற்றி முறைப்படி நிகழ்ச்சிநிரல்குழு, வழிகாட்டுதல்குழு, இந்த ஆண்டு விழாவை நடத்தும் மினசோட்டா தமிழ்ச்சங்க நிர்வாகிகள் என்று யாருடனும் கலந்தாய்வு செய்யவில்லை. இத்தனைக்கும் விழாவிற்கென ஒரு ஒருங்கிணைப் பாளரும், சில இணை ஒருங்கிணைப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் கூடக் கலந்தாய்வு செய்யவில்லை. அப்படியானால் எதிர்ப்பு யாரிடம் இருந்து, எத்தனை பேரிடம் இருந்து வந்தது? அதற்கும் குறிப்பிட்டு பதில் இல்லை. பொத்தாம் பொதுவாய் 'அமெரிக்க பெண்கள் எதிர்ப்பு' என்று மொண்ணையாய் ஒரு சப்பைக் கட்டு. எதிர்ப்பு வந்தால் அதை விவாதிக்க வேண்டாமா? நாலு பேரிடம் இருந்து எதிர்ப்பு வந்தால் உடனே பின்வாங்கிவிடுவதா பகுத்தறிவின் பெயர் சொல்லி இயங்கும் குழுவுக்கு அழகு? அது கோழைத்தனம் ஆகாதா? கால் நூற்றாண்டுக்கும் மேலாய் இயங்கி வரும் பெட்னா இதுபோன்ற சாதி வெறிக்குப் பணிந்து விடுவது அமைப்புக்கு நல்லதல்ல.
வழக்கமான அரசியல் காய் நகர்த்தலாக, கேள்வி கேட்பவர்களைக் கைக்கூலிகள் என்று விமர்சிக்கும் போக்கும் இருக்கிறது. அது ஆண்டைகளின் முதல் ஆயுதமாயிற்றே? ஆனால் அந்த ஆயுதம் பல பத்தாண்டுகளாய் பயன்படுத்தப்பட்டுக் கூர் மழுங்கி மொன்னையாகிவிட்டது என்று களத்தில் இறங்கி வேலை செய்யாத ஜமீன்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
இங்கே ஒரு மாபெரும் எழுத்தாளரை ‘வரவேண்டும்’ என்று போராடுபவர்கள் கைக்கூலிகளாய் ஆகிவிட்டார்கள். அவர் குறிப்பிட்ட ஊர்ப் பெயரையும் கோவில் பெயரையும் பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தவர்கள் கூறிய அதே தரத்திலான, ஆவணத்துக்கும் புதினத்துக்கும் வேறுபாடு தெரியாத குற்றச்சாட்டு. ‘பொன்னியின் செல்வனை’ வரலாறு என்று எண்ணும் அளவிலான மேதைகளிடமிருந்து இத்தகைய கருத்துக்கள் வருவது ஒன்றும் வியப்பில்லை. ஆனால் அவர்கள் முடிவெடுக்கும் - ஜனநாயக முறையில் எடுக்கப்பட்ட முடிவை மாற்றியெழுதும் அதிகாரத்தில் இருப்பதுதான் வேதனை.
அது புதினம், வரலாற்று ஆவணமல்ல என்பது ஒருபுறம், இத்தகைய வழக்கம் இவர்களின் திருச்சங்கோட்டுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, தாய்வழிச் சமூகத்திலிருந்து, பெண்ணை பொருளாய்க் கருதும் தந்தைவழிச் சமூகமாய் மாற்றப்பட்ட பல சமூகங்களில், தமிழ்ச் சமூகம் உள்பட இத்தகைய வழக்கம் இருந்திருக்கிறது. வரலாறு வேண்டுமா? இவர்களைப் போன்ற சூத்திரர்கள் முட்டுக்கொடுத்து வளர்க்கும் ஆரிய வேதத்தின் கருத்து வேண்டுமா? காண்க: https://goo.gl/hxxcN3

இப்போதிருக்கும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் செய்யும் வேலையை அக்காலத்தில் புத்திசாலித்தனமாய் செய்திருக்கிறார்கள். இதைப் பல நாட்டுப் புறவியலாளர்கள் மற்றும் தொல்லியலாளர்கள் ஆதாரங்களுடன் பதிப்பித்திருக் கிறார்கள். இந்தக் கேவலமான கற்பென்னும் கோட்பாட்டைப் பெண்கள் மேல் சுமத்தி அசிங்கமான அரசியலைச் செய்வது ஆர்.எஸ்.எஸ். ஆக இருந்தால் இத்தகைய கேள்விகளுக்கே அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும். முற்போக்கு முகமூடியில் சாதியை வளர்ப்பவர்கள்தான் இப்போது தோலுரிக்கப்பட வேண்டியவர்கள்.
இந்த முகமூடி எத்தகையது? குடும்ப விழா என்கிற பெயரில் சாதிக்காரர்களை ஒன்றாய்க் கூட்டி விழா நடத்தி குழந்தைகள் மனதில் விஷத்தை வேறு பெயரில் திணிப்பது. மிகப்பெரும்பாலானோர் தன பெயரில் இருக்கும் சாதிப்பெயரை குடும்பப் பெயர் என்று சொல்லிக்கொள்வது போல. ஒரு தலைமுறையே தன் பெயரில் இருந்த சாதிப்பெயரை துறந்த தமிழ்ச் சமூகம், வெள்ளைக்கார தேசத்தில் வேறு பெயரில் சாதியைக் கொண்டுவந்து இணைத்துக்கொள்வது அருவருப்பானது

கற்பு, கற்பு என்று அடித்துக்கொள்பவர்களுக்கு "கற்பெனப்பெடுவது சொல்திறம்பாமை" என்கிற ஒளவையின் வாக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளரை அழைத்துவிட்டு, சொன்ன சொல்லை காலிலிட்டு மிதிப்பது எவ்வகைக் கற்பில் சேரும் என்பது தெரியவில்லை. இங்கே கற்பழிந்து நிற்பது அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் முகமூடியாய் அணிந்துகொண்டிருக்கும் பேரவையும் தான். இது காலத்துக்குமான இழுக்கு இல்லையா?

எழுத்தாளர் வராமல் போவது அவர்க்கொன்றும் நட்டமில்லை. கொங்கு வட்டார வழக்கு அகராதியைத் தொகுத்துப் பல நாவல்களும் கவிதைகளும் எழுதி, நாமெல்லாரும் செய்வதைவிட தமிழுக்குத் தொண்டு செய்தவர் இதற்கொன்றும் ஏங்கிக்கிடக்கவில்லை. ஆனால் அத்தகைய எழுத்தாளரை அழைத்து, பின்னர் வரவேண்டாம் என்று கூறுவது பெட்னாவிற்கு காலத்திற்கும் நிலைக்கப்போகும் இழுக்கு ஆகும். மேலும் இத்தகைய சாதி சார்ந்த போக்கு வளர்வது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். புண் ஆற வேண்டுமானால் அதை மூடி வைக்க முடியாது. மூடி வைக்க வைக்க அது சீழ் பிடித்து அமைப்பினை அழுகச்செய்து விடும்.

எழுத்தாளர் வருவதும் வராமல் இருப்பதும் அவர்கள் கையிலிருக்கும் தற்காலிக முடிவு. ஆனால் இத்தகைய சாதி வெறியானது முற்போக்கு முகமூடியில் நிகழ்வது நிரந்தரமாய்க் களையப்பட வேண்டும். அதற்கு இவர்களைப் பேரவை செயற்குழு விலிருந்து நிரந்தரமாய் நீக்குவதே தீர்வு. அதற்காக ஆவண செய்ய வேண்டும் என்பது, சாதியைக் களைய வேண்டும் என்று எண்ணும் இளைய தலைமுறையின் எண்ணம். நடுநிலையாய் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அமைதியாய் இருந்தால் சாதி என்னும் நாசகாரப் பேய் சமூகத்தை விழுங்கிவிடும் என்பதை எண்ணி, அனைவரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

அமைப்பின் உறுதியில் பொறாமை கொண்டு பெட்னாவிற்கு எதிராய் சில குழுக்கள் இயங்குவது உண்மை தான். கேள்வி கேட்பவர்களை பெட்னா எதிர்ப்பாளர்கள் என்று முத்திரை குத்துவது, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரனை எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகள் என்று பிஜேபி முத்திரை குத்துவதைப் போன்றது. தனக்குள்ளே இருப்பது சாக்கடையானாலும் வெற்றிபெற எதுவும் செய்யும் ஆரியத்தின் குணம் அது. அதை அறிந்து தான் நாம் குரல் எழுப்புகிறோம் என்பதை ஆண்டைகள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தான் இந்தப் பதிவு.
ஆனால் கத்தி எடுத்து வரும் கொலைகாரனுடன் அறுவை சிகிச்சை செய்ய வரும் மருத்துவரை ஒப்பிடுவது மூடி வைத்த புண்ணை சீழ் பிடித்து மோசமான நிலைக்குத் தள்ளி அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து அமைப்பின் உறுப்பினர்கள் இந்த அறுவை சிகிச்சையை நடத்தி, பெட்னாவை மீட்டுத் தர முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம். தீய சக்திகள் இயங்குவது நேர்மையாளர்களின் அமைதியை நம்பித்தான் என்பதை எண்ணிப்பார்த்து அனைவரும் சாதிக்கு எதிராய் ஒன்றுகூட வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறோம்.
- செ.கேசவன் keetru.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக