ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கொல்லாமையை வலியுறுத்திய ஒரே ஒரு மத ஸ்தாபகர் மகாவீரர்! ஸ்டாலின் வாழ்த்து!

மகாவீரர் ஜெயந்தி: ஸ்டாலின் வாழ்த்து!ஜைன துறவி மகாவீரர் பிறந்த தினத்தை  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஜைனர்கள் இன்று கொண்டாடுகின்றனர். இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில், “ஜைன சமயக் கோட்பாடுகளில் மனித நேயத்துக்கு மாபெரும் முக்கியத்துவம் கொடுத்து சீர்திருத்தங்களை மேற்கொண்ட வர்த்தமான மகாவீரர் பிறந்த நாள் தமிழகத்தில் ஜைன சமய மக்களால் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.

மகாவீரர் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு. 599இல் பிறந்தவர். தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்ட அவர் 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மிகத் தேடலில் வெற்றி பெற்றவர்.
பிற உயிரினங்களுக்கு மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்துக்கும் மதிப்பளித்த மகானாக விளங்கியவர் மட்டுமின்றி அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்தவர். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று என்பது வரலாறு.
ஜைன மத புத்தகங்களில் இவர் வீரா, வீரப்பிரபு, சன்மதி, அதி வீரர், ஞானபுத்திரர் போன்று இன்றும் போற்றப்படுபவர். நல்லறங்களைப் போதித்த அவர் தன் போதனைகளின் வழி நின்று தவ வாழ்வை வாழ்ந்து காட்டியவர் என்பது சிறப்புமிக்கது.
இந்த ஆண்டின் மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஜைன சமய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக