புதன், 26 ஏப்ரல், 2017

மார்க்ஸ் நூலகம் கண்ணன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !

மண்ணும் மக்களும் பயனுற வாழ்ந்த அரியதொரு மனிதரை, தோழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது வாழ்க்கையை நம் நினைவில் போற்றுவோம்.
"மார்க்ஸ் நூலகம் கண்ணன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !“மார்க்ஸ் நூலகம் கண்ணன்” என்றும் ’பார்வையற்றோர்க்கான அமைப்பைக் கட்டிய முன்னோடி’ என்றும் பல்வேறு முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த மார்க்சிய ஆய்வாளர்கள், அறிவுத்துறையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலராலும் நேசத்தோடு அழைக்கப்பட்ட தோழர் ச.சீ கண்ணன் இன்று காலை 11 மணி அளவில் மறைந்து விட்டார். அவருக்கு வயது 94.
மின்சார வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய அவர், தனது சேமிப்புகள் மற்றும் ஓய்வூதியம் முழுவதையும் பல்லாயிரம் மார்க்சிய ஆய்வுநூல்களும் பத்திரிகைகளும் கொண்ட மார்க்ஸ் நூலகத்தை  உருவாக்குவதற்குச் செலவிட்டவர்.
தமிழகத்தின் புரட்சிகர, முற்போக்கு இயக்கங்கள் சார்ந்த தோழர்களில் மார்க்ஸ் நூலகத்துக்கு செல்லாதார் இல்லை. 1980-களின் தொடக்க ஆண்டுகள் புரட்சிகர இயக்கங்கள் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த காலம். இணையம் போன்ற வாய்ப்புகள் இல்லாத காலம். காலத்தின் தேவையறிந்து அவர் உருவாக்கிய மார்க்ஸ் நூலகம் அன்று முற்போக்கு அரசியல் சக்திகள் அனைவருக்கும் ஒரு பாலைவனச் சோலையாகவும், ஜனநாயக வெளியாகவும் இருந்தது. அவருடைய இந்தப் பங்களிப்புக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டவர்களாவோம்.

அவர் எண்ணற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்தார். எந்நேரமும் பார்வையற்ற மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு நூலை அவர் படித்துச் சொல்லிக் கொண்டிருப்பதை நூலகம் செல்லும் அனைவரும் காணவியலும். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான சங்கத்தை உருவாக்கினார். அவர்களில் பலருக்கு சீர்திருத்த மணம் செய்துவித்தார். அம்மாணவர்கள் அனைவரும் தோழர் கண்ணனைத் தம் தந்தையாகவே பாவிக்கின்றனர்.
மண்ணும் மக்களும் பயனுற வாழ்ந்த அரியதொரு மனிதரை, தோழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது வாழ்க்கையை நம் நினைவில் போற்றுவோம்.
தோழர் கண்ணனின் துணைவியாருக்கும், அவரது சகோதரரும் கல்வியாளருமான ச.சீ. இராசகோபாலன் அவர்களுக்கும் அவரது பிள்ளைகளான மாற்றுத்திறனாளி மாணவர்கள் இளைஞர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர்  ச.சீ கண்ணன், தனது உடலை போரூர் ராமச்சந்திரா மருத்தவ மனைக்கு கொடையாக அளித்திருப்பதால், மதியமே அவரது உடல் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அங்கே அவசரப் பிரிவின் பின்புறம் (Behind Emergency Ward) அவரது உடல் மூன்று நாட்களுக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.  vinavu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக