வியாழன், 27 ஏப்ரல், 2017

மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது ..கண்டனக் கூட்டம்! நாளை மாலை பத்திரிகையாளர் மன்றத்தில் !

Image may contain: 1 personமூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதும் அரசியலும்.
மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன், கோவை கார்ப்பரேஷன் பொறியாளர் பார்த்திபன் என்பவரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர்களுக்குள் இருக்கும் அரசியலின் காரணமாக, சில பத்திரிக்கையாளர்கள் அன்பழகனின் கைது குறித்து மகிழ்ச்சியாக செய்தி பரிமாறிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இப்படி பரிமாறிக் கொள்பவர்களின் யோக்கியதையை ஆராய்ந்தால் அவர்களைப் பற்றி சொல்ல பல கதைகள் இருக்கின்றன.
அன்பழகன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் சொந்த பணத்தை செலவு செய்து ஊழலை வெளிக்கொணர பொது நல வழக்குகள் தாக்கல் செய்தவர். இவரின் கைது குறித்து மகிழும் பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கூட, ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போட்டவர்கள் அல்ல.

அன்பழகனின் கைது நடந்த சூழலை நாம் கவனத்தோடு பார்க்க வேண்டும். 25 ஏப்ரல் 2017 அன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி குறித்து விரிவான புகார் ஒன்றை சிபிஐக்கு அனுப்புகிறார். மறுநாள் காலை 8.30 மணிக்கு பூந்தமல்லியில் கோவையிலிருந்து வருகை தந்திருந்த போலீசார் அவரை கைது செய்கின்றனர்.
அன்பழகன் மீதான குற்றச்சாட்டு கோவை பொறியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பதே. யாராவது ஒருவர் உங்களை கொலை மிரட்டல் விடுத்தார் என்று ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பாருங்களேன். போய்யா.. இதுக்கெல்லாம் எப்ஐஆர் போடுவாங்களா.... சமாதானமா போய்யா என்று அறிவுரை சொல்லி அனுப்புவார்கள்.
2010ம் ஆண்டில், ஜாபர் சேட் வீட்டு மனை வாங்கியது குறித்து சவுக்கில் எழுதிய மறுநாள் காலை 7.30 மணிக்கு மதுரவாயல் காவல் நிலையத்தினரால் சாலையில் சென்றவரை சட்டையை பிடித்து அடித்தேன் என்று கைது செய்யப்பட்டேன். ஆகையால் இது போன்ற விவகாரங்களில் அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்பது நன்றாகவே தெரியும்.
எஸ்பி.வேலுமணியின் கட்டுப்பாட்டில்தான் ஒட்டுமொத்த கோவை காவல்துறையும் இருக்கிறது. டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என்று அனைவரும் அவர் கட்டுப்பாட்டில்தான் பணியாற்றுகிறார்கள்.
உள்ளாட்சித் துறையில் பணியாற்றுபவர்களை வைத்து தொடர்ந்து புகார்கள் வாங்கி மேலும் பல வழக்குகளை பதிவு செய்யவும் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
தாம்பரம் நகராட்சி ஆணையர் புகாரில் இதே போல மிரட்டல் வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் அன்பழகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம் நகராட்சியில் பணியாற்றுபவர்களிடம் புகார் பெறப்பட்டு, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில், வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற அல்லக்கைகள் தாங்கள் வைத்ததே நாட்டாமை என்று தனி ராஜ்ஜியங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வேலுமணியின் இந்த நடவடிக்கை ஒரு முன்னோட்டம் மட்டுமே. இதை வலிமையான குரலில் கண்டிக்காமல் போனால், நாளை ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கு பிடிக்காத பத்திரிக்கையாளர்களை தங்கள் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினரை வைத்து எளிதாக பொய் வழக்கில் கைது செய்ய முடியும்.
தமிழகம் மிகவும் மோசமான அராஜகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் மாச்சர்யங்களை புறந்தள்ளி முழு மனதோடு உரத்த குரலில் இதை கண்டிக்க வேண்டியது அவசியம்.
நாளை மாலை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இந்த மோசடியாக கைது குறித்து ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.<  முகநூல் பதிவு சவுக்கு சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக